செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைவிபரணக் கட்டுரை கனவுகள், கற்பனைகள் கடந்தாலும் நிகழ்வுகள், நினைவுகள் என்றும் இனிக்கும்! | பகுதி 5 | மகாலிங்கம் பத்மநாபன்கனவுகள், கற்பனைகள் கடந்தாலும் நிகழ்வுகள், நினைவுகள் என்றும் இனிக்கும்! | பகுதி 5 | மகாலிங்கம் பத்மநாபன்

கனவுகள், கற்பனைகள் கடந்தாலும் நிகழ்வுகள், நினைவுகள் என்றும் இனிக்கும்! | பகுதி 5 | மகாலிங்கம் பத்மநாபன்கனவுகள், கற்பனைகள் கடந்தாலும் நிகழ்வுகள், நினைவுகள் என்றும் இனிக்கும்! | பகுதி 5 | மகாலிங்கம் பத்மநாபன்

3 minutes read

வன்னிப் பிரதேசத்தில் பல பாடசாலைகளில் ஆசிரியராக கடமையாற்றி பின்னர் அதிபராக கடமையாற்றிய ஓய்வு நிலை அதிபரின் அனுபவத் தொடர்…….

 

என்னுடைய முதல் பாடசாலையான  இலகடிப்பிட்டி றோ.க.த.க பாடசாலை பாலைக்குளி, காத்தான்குளம், மணற்குளம், இலந்தைமோட்டை என்ற நான்கு கிராமத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்வியை வழங்கியது. இலந்தை மோட்டை என்பது மட்டக்களப்பு, காத்தான்குடியிலிருந்து வந்து குடியேறிய முஸ்லீம் மக்கள் குடியிருந்த கிராமம். ஏனைய கிராமங்களில் பெரும்பான்மையாக கத்தோலிக்க மக்கள் வாழ்ந்தார்கள்.

இடைக்கிடை சைவ மக்களும் வாழ்ந்தார்கள். பாடசாலையில் பெரும்பான்மையாக கத்தோலிக்கப் பிள்ளைகளும், அடுத்ததாக இஸ்லாமிய பிள்ளைகளும், அதற்கும் அடுத்ததாக  சைவ பிள்ளைகளும் கற்றார்கள். காலை வேளைகளில்  வேறு வேறு இடங்களில் தனித் தனியாக இப்பிள்ளைகள் பிரார்த்தனை செய்வதைக் கேட்க மிகவும் இனிமையாக இருக்கும்.

இக் கிராமங்களில் அப்போது படித்தவர்கள் மிகவும் குறைவு. எமது ஆசிரியர்களில் ஒருவரான திரு.மரியாம்பிள்ளையும், வேறொரு பாடசாலையில் கற்பித்த திரு.செபமாலையும் மட்டுமே மணற்குளத்தில் இருந்த அரச உத்தியோகத்தர்கள். திரு.மடுத்தீன் சற்று தூரத்தில் உள்ள முதலைகுத்தி என்ற கிராமத்தை சேர்ந்தவர்.

பாலைக்குளி-காத்தான்குளம் இரண்டு கிராமங்களுக்கும் பொதுவாக திரு.தொம்மை அவர்கள் அப்போது கொழும்புத்துறை ஆசிரியர் கலாசாலையில் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்தார். எமது பாடசாலையில் நான் கடமை ஏற்ற போது அங்கு எட்டாம் வகுப்பு மட்டுமே இருந்தது. எங்களுக்கு நியமனம் வழங்கும் போது, நாங்கள் பொறுப்பெடுக்கும் தரம் ஆறு மாணவர்களை N.G.C.E வரை கற்பித்து, அதன் பிறகே இடமாற்றம் பெறவோ, பயிற்சிக்கு செல்லவோ வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப் பட்டது.

mannar-fort

ஊர்களின் பெயர்களில் குளி, குளம், மோட்டை, பிட்டி, போன்றவை இருப்பதை வைத்தே அங்கு சிறு குளங்கள் ஏராளம் என்பது தெரிந்துவிடும். நாங்கள் அங்கு வாழும் வரை மின்சாரம் அங்கு வரவில்லை. கிராமத்தில் சில கொள்கைகளும் பழக்க வழக்கங்களும் இருந்தன.

அங்கு வாழும் வீட்டையும் பெரும்பகுதி வயல்களையும் ஆண் பிள்ளைகளுக்கு வழங்கி, பெண்களுக்கு சிறிதளவு வயல்களை மட்டும் வழங்குவார்கள். ஒரே வீட்டில் இருவர் கர்ப்பிணிகள் ஆனால் ஒருவர் குழந்தை பெறும் வரை வேறு வீட்டிற்கு சென்று விடுவார்.

திருமணத்தின் போது முதல் நாள் பந்தி உறவு முறையானவர்களுக்கு மட்டும் தான். நண்பர்களுக்கும், ஊரவர்களுக்கும் மறு நாள் மிகவும் விஷேசமாக பந்தி வைக்கப்படும். இதையறியாது நானும் மனைவியும் ஒரு திருமண வீட்டிற்கு முதல்நாளே சென்று அதனால் அவர்கள் அவஸ்தைப்பட்டதை நினைத்தால் இப்போதும் சிரிப்பு வரும்.

மனைவியும் பாலைக்குளியில் வாழ வந்த பின்னர் வாழ்க்கை மிகவும் இலகுவாயிற்று. இப்போது காலையில் 6.30 மணிக்கு நித்திரை விட்டெழுதல் மனைவியின் செயலாயிற்று. படுக்கையில் வைத்தே தேனீர் குடிக்கும் சுகம் ஏற்பட்டது. 7.00 மணிக்கு குளித்துவிட்டு வந்து, காலைச்சாப்படு முடித்துக் கொண்டு 7.30 மணியளவில் பாடசாலை செல்வேன். இப்போது சில வேளைகளில் திரு.மடுத்தீன் ஆசிரியர் , என்னை முந்தி பாடசாலைக்கு வந்து விடுவார்.

Img264040142

பிள்ளைகளின் நன்மை கருதி, இப்பொழுது எல்லா நாட்களும் மாலை வகுப்புக்களை வைக்கத் தொடங்கினேன். மனைவியும் வந்து பிள்ளைகளுக்கு பின்னால் இருந்து, சுவெற்றர், தொப்பி, மபிளர் பின்னிக் கொண்டிருப்பார். வகுப்பு முடிந்ததும் மனைவியும் நானும் சேர்ந்து குளக்கட்டில் இருளும் வரை நடப்போம். சிலவேளைகளில் காத்தான்குளம் வரை சென்று வருவோம். வழியில் சந்திக்கும் ஊரவர்களுடன் அவர்களின் பிள்ளைகளின் படிப்பு பற்றி கதைப்பேன்.

நாங்களிருந்த வீட்டு ஆச்சியிடமே, முட்டை, பால், தேங்காய் வாங்கலாம். தேசிக்காய், தோடம்பழம் விழும் போது ஆச்சி எங்களுக்குக் கொண்டு வந்து தருவா. மீன், கருவாடு, காட்டிறைச்சி, வத்தல் முதலியவற்றை சைக்கிள் வியாபாரிகள் வீடு தேடி கொண்டு வருவார்கள். மரக்கறி வாங்குவதற்கு மட்டும் மன்னார் நகர்  செல்ல வேண்டும்.

15mpmuthiah_G3A_15_1518368g390_thumb_1

மனைவிக்கு பொழுது போவதற்காக, கல்கி, சாவி என்ற வார சஞ்சிகைகளையும் கலைமகள் என்ற மாத சஞ்சிகையையும் மன்னாரில் மரக்கறி வாங்கும் போது வாங்கி வருவோம். மன்னார் செல்லும் போது காலையில் வேளைக்கு வெளிக்கிட்டோமானால் திருக்கேதீஸ்வரமும் சென்று வருவோம்.

மன்னார் கிராமங்களில் தங்குவதற்காக வீடு, அறைகள் எடுப்பது கஸ்டம். அதனால் கல்வி அதிகாரிகளே தீர்மானித்து, கூடுதலாக பெண் ஆசிரியர்களுக்கு மன்னார் நகரில், அல்லது திருக்கேதீஸ்வரத்தில் இருந்து போய் வரக்கூடிய அடம்பன், ஆண்டான்குளம் போன்ற இடத்திற்கு நியமனம் கொடுப்பார்கள்.

திருக்கேதீஸ்வரத்திலிருந்த ஒரு ஐயர் குடும்பம் அவர்களுக்கு சமைத்து சாப்பாடு கொடுப்பார்கள். சில ஆசிரியைகள் குழுவாக தாமே சமைப்பார்கள். ஆசிரியைகள் பலர் இருந்த படியால் கோவிலும், கோவில் வளாகமும் எப்போதும் சன நடமாட்டமாக இருக்கும். ஓய்வூதியர்கள் பலர் பென்சன் காசைக் கொடுத்து சாப்பிட்டுக் கொண்டு மடங்களில் தங்கினார்கள். அண்மையில் திருக்கேதீஸ்வரம் சென்ற போது வெறிச்சோடிப்போய், சன நடமாட்டம் இன்றி காணப்பட்டது. மாடுகளும் அவற்றின் சாணாகமும் நிறைந்து காணப்பட்டது.

image

மிகவும் மகிழ்ச்சியாக போய்க் கொண்டிருந்த எமது வாழ்விற்கு மேலும் பல மடங்கு மகிழ்ச்சியுண்டாக்க, எனது மனைவி கர்ப்பமுற்றார். அதே நேரம் சார்ளியின் மனைவியும் கர்ப்பமுற்றார். அந்த கிராமத்து பழக்க வழக்கங்களை அறிந்திருந்த எங்களுக்கு தர்மசங்கடமாயிற்று.

இரண்டாம் மாதம் எனது மனைவிக்கு சத்தியும் கடுமையாயிற்று. சில நாட்களுக்கு தாயாருடன் போய் இருக்க ஆசைப்பட்டார். அவ்வாறே மனைவியை கூட்டிச் சென்று சில நாட்கள் பரந்தனில் விட்டு விட்டு வந்து நான் மட்டும் கடமையைச் செய்தேன்.

ஆச்சி, ஒரு குறையும் இன்றி என்னைப் பாரத்துக் கொண்டார். சார்ளிக்கு சிரமம் கொடுக்க விரும்பாத நாங்கள், மனைவி திரும்பி வந்ததும் வேறு வீடு செல்ல தீர்மானித்தோம். அப்போது பயிற்சிக் கலாசாலையை முடித்துக் கொண்டு, எங்கள் பாடசாலைக்கு நியமனம் பெற்றிருந்த திரு.தொம்மை ஆசிரியர் தமது வீட்டில் வந்து இருக்கும் படி கூறினார். அந்த கிராமத்திற்கு வந்த ஆறாவது மாதம் தொம்மை ஆசிரியர் வீட்டிற்கு குடியிருக்க சென்றோம்.

 

 

தொடரும்….

 

 

naban  மகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வுநிலை அதிபர், குமரபுரம், பரந்தன்.

 

 

முன்னையபகுதிகள் ….

 

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-part-1-09-15-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-part-2-09-22-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-3-09-29-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-4-10-06-16/

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.