வன்னிப் பிரதேசத்தில் பல பாடசாலைகளில் ஆசிரியராக கடமையாற்றி பின்னர் அதிபராக கடமையாற்றிய ஓய்வு நிலை அதிபரின் அனுபவத் தொடர்…….
பெரிய பரந்தன் கிராமத்தில் தங்கு வேட்டை முற்காலத்தில் எவ்வளவு மகிழ்ச்சிகரமானதோ, அது போன்று பாலைக்குளி, காத்தான் குளத்தில் பெற்றோல்மாக்ஸ் வெளிச்சத்தில் மீன் பிடித்தல் அக்காலத்தில் சிறந்த பொழுது போக்காக இருந்தது. இப்போது அது தடை செய்யப்பட்ட செயலாகும்.
நாற்பது வருடங்களுக்கு முன் அது தடை செய்யப்பட்டிருக்கவில்லை என்று நான் நம்புகின்றேன். ஆதி காலத்தில் சூழ் கட்டி மீன் பிடித்தல், பின்னர் பெற்றோல்மாக்ஸ் வெளிச்சத்தில் மீன் பிடித்தலாக மாறியிருக்கலாம்.

மூன்று அல்லது நான்கு வண்டிகளில், வண்டிலுக்கு ஐந்து பேர் வீதம் மீன் பிடிக்க, இளைஞர்களாகச் சேர்ந்து இரவு போய், காலை திரும்பி வருவார்கள். அவர்கள் கொண்டு வரும் மீன்களையும், அந்த நிகழ்ச்சியை அவர்கள் மகிழ்ச்சியுடன் வர்ணிப்பதையும் கண்டும், கேட்டும் எனக்கும் இவர்களுடன் ஒரு முறை போய், அதனை நேரில் கண்டு வந்தால் என்ன? என்று ஆர்வம் ஏற்பட்டது. தடை செய்யப்பட்ட விளையாட்டா? என பல முறை விசாரித்துக் கொண்டேன். இல்லை என்றார்கள்.
ஆனால் தள்ளாடியிலுள்ள இராணுவ முகாமில் உள்ள அதிகாரிகள் கண்டால் கள்ளக் கடத்தல் காரரென்று சந்தேகத்தில் வந்து விடுவார்கள். அதனால் அவர்கள் கண்களுக்குத் தெரியாத தூரத்திற்கு போய் வருவோம் என்றார்கள். போகுமிடத்தில் ஒவ்வொரு வண்டிலுக்கு, ஒருவர் காவல் இருக்க வேண்டும் என்றார்கள்.
நாலு வண்டில்களையும் வட்டமாக விட்டு, மாடுகளையும் அண்மையாக கட்டிவிட்டு விடிய விடிய காவலிருக்க ‘காட்ஸ்’ விளையாடுவோம் என்றார்கள். ஏன்? என்று விசாரித்த பொழுது மாடுகளை இறைச்சிக்கு, அடிக்கும் கூட்டம் அவற்றைத் திருடிவிடும் என்றும், தனியாளாக காவலிருந்தால் அவனைத்தாக்கிவிட்டு, மாடுகளை கொண்டு சென்றுவிடுவார்கள் என்றும் கூறினார்கள். கொஞ்சம் பயமாகவே இருந்தது.
தொம்மை மாஸ்டரும் வருவதாலும், பயத்தை விட அந்த அனுபவத்தை விரும்பியதாலும் ஒரு முறை மட்டும், போய் வருவது எனத் தீர்மானித்துக் கொண்டேன். தொம்மை மாஸ்டரின் வண்டியில் நானும் ஏறிவிட்டேன். நாற்பது வருடத்திற்கு முந்தைய நிகழ்வு, நேற்று நடந்தது போல இனிக்கின்றது. எம்முடன் வந்த பலர் இன்று உயிருடன் இல்லை.

வண்டில்கள் ஒன்றன் பின் ஒன்றாக, வரிசையாக அந்த இரவில் புறப்பட்டன. இளைஞர்கள், மகிழ்ச்சி பொங்க மாறி, மாறி பாட்டு பாடினார்கள். எனக்கும் திறிலாக இருந்தது. யாழ்ப்பாணத்தான் என்று கதைத்த, அதே இளைஞர்களுடன், அவர்களின் அன்பிற்குப் பாத்திரமாகி, அவர்களை முற்று முழுதாக நம்பி போகின்றேன். இரண்டு ஆசிரியர்கள் தம்முடன் வருவதில் இளைஞர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி.
இடையிடையே ஊர்கள் வந்தன. இரவில் தம் ஊர் தாண்டி போபவர்கள் யாரென்று விசாரித்தார்கள். பயணம் தொடர்ந்தது. நேரம் போவதோ, தூரம் கடப்பதோ தெரியாத கடும் இருட்டு. இறுதியில் கடற்கரையை அண்டிய இடத்தை அடைந்தோம். கடும் வேலை செய்து அறியாத என்னை ஏனைய மூன்று பேருடன் காவலுக்கு இருத்திவிட்டு செல்லலாமோ? என்று ஆலோசித்தார்கள். நான் மறுத்துவிட்டேன். இவ்வளவு தூரம் வந்துவிட்ட பிறகு, பின்வாங்க எனது மனம் இடம் கொடுக்கவில்லை.
நான்கு குழுக்கள். ஒவ்வொரு குழுவிலும் நான்குபேர். ஒருவர் பெற்றோல்மாக்ஸ் தூக்குபவர். ஒருவர் மீன்கள் கூட்டமாக வரும்போது, கூடையினால் கவுட்டு மூடி, கைகளால் துளாவிப் பிடித்து, பையில் போடுபவர். ஒருவர் ஒரு கூர்த்தடியினால், பெரிய மீன்களை குத்தி அல்லது அடித்து பிடிப்பவர். மற்றவர் பசளைப் பையில், பிடித்த மீன்களை சுமந்துவருபவர். எனக்கு பெற்றோல்மாக்ஸ் சுமக்கும் வேலை வழங்கப்பட்டது. மிகவும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டேன். ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு திக்காக பிரிந்து வேட்டைக்கு கிளம்பினோம்.

வெளிச்சத்தைக் கண்டு மீன்கள் கூட்டம் கூட்டமாக வந்தன. சின்னஞ்சிறிய மீன் கூட்டங்களைத் தவிர்த்து பெரிய கூட்டங்கள் வந்த போது கூடையினால் சிறைப் பிடித்து, கைகளால் துளாவிப் பிடித்து பசளைப் பையிலே போட்டார். தடியால் அடிப்பவர் தப்பியோடும் பெரிய மீன்களை அடித்தும் குத்தியும் பிடித்து போட்டார். மிகவும் மகிழ்ச்சியாக வேட்டை தொடர்ந்தது.
திடீரென ஒரு நான்கடி நீளமான கடற்பாம்பு, பெற்றோல்மாக்ஸ் வைத்திருந்த எனது இரண்டு கால்களுக்குடையே பாய்ந்தது. தடுமாறி, பெற்றோல்மாக்ஸையும் போட்டுவிட்டு விழப் பார்த்தேன். ஒருவாறு சமாளித்து விட்டேன். மற்றவர்களுக்கு ஒரே சிரிப்பு. கடல் பாம்புகள் பாய்வது அவர்களுக்கு பழக்கமான நிகழ்வு. நான் பெற்றோல்மாக்ஸை கொடுத்துவிட்டு மீன் பையை வாங்கினேன்.
ஆரம்பத்தில் சுகமாக இருந்தது. நேரம் செல்லச்செல்ல பாரம் கூடியது. பாரம் கூட பரவாயில்லை. நண்டுகள் பிடிபட்ட பின்னர், அவற்றின் கால்கள் முதுகில் குத்தின. பை நிரம்பியது. திரும்பலாமா? என்று ஆலோசித்தார்கள். தூரத்தில் சென்றவர்கள், வேட்டை முடிந்ததென்று அறிவிக்க, தமது பெற்றோல்மாக்ஸ் வெளிச்சத்தை நிறுத்தினார்கள். ஏனைய இருவரும் அவ்வாறே அணைத்தனர். நாமும் எமது பெற்றோல்மாக்ஸ் வெளிச்சத்தை அணைத்துக் கொண்டோம்.
தடி வைத்திருந்தவர் அதனை என்னிடம் கொடுத்துவிட்டு சுமையை, தான் வாங்கிக் கொண்டார். வெற்றிகரமாக வேட்டை முடிந்த பின்பு தான், முருகைக் கற்களால் பிளக்கப்பட்ட கால்களின் வேதனை புரிந்தது. மற்றவர்களின் கால்களும் பிளக்கப்பட்டேயிருந்தது. அவர்கள் அதற்கும் பழக்கப்பட்டவர்கள்.
காவலுக்கு இருந்தவர்கள், போகும்போது இருந்ததை விட மிக உற்சாகமாக இருந்தார்கள். என்ன விஷேஷம் என்று தொம்மை ஆசிரியரிடம் கேட்டேன். காவலிருக்கும் போது அலுப்பில்லாமலிருக்க, கொஞ்சம் உற்சாக பானம் அருந்தியிருப்பார்கள் என்றார். அந்த உற்சகத்தினால் திரும்பும் பயணம் பாட்டும் கூத்தும் இணைந்து சந்தோஷமாக இருந்தது.
நிகழ்ச்சி இத்துடன் முடியவில்லை. ஒவ்வொரு வண்டிலும் தமது வீட்டிற்கு சென்றன. நாம் தொம்மை மாஸ்டர் வீட்டிற்கு திரும்பினோம். களைப்போடு களைப்பாக மாஸ்டர் மீன்களை, ஒரு படங்கில் கொட்டி இனவாரியாகப் பிரித்தார். பின் அவற்றை ஐந்து பிரிவாகப் பிரித்தார். வண்டில் காவலாளிக்கும் ஒரு பங்கு. எனக்கும் ஒரு பங்கு. எனது மனைவி, எங்களுக்கு இரண்டு நாட்களுக்கு போதுமான மீன், றால், கணவாயை வைத்துக்கொள்வது கொண்டு மீதியை அம்மாவிடம் கொடுத்து விட்டா. அம்மா, தங்களுடையவற்றிலும் எடுத்து தங்கள் வயலில் வேலை செய்யும் எல்லோரது வீடுகளுக்கும் அனுப்பி விட்டார்.
குழாய்க்கிணற்று தொட்டியில் நன்கு முழுகிவிட்டு வந்த நான், மனைவி தயாரித்து வைத்திருந்த பிட்டு, சம்பல், முட்டைப்பொரியல் என்பவற்றை ஒரு பிடி பிடித்துவிட்டு படுத்தது தான் தெரியும்.மாலை நான்கு மணியளவில் மனைவி எழுப்பிய பின்னர் தான் எழுந்தேன்.
இரண்டு நாட்கள் றால் பொரியல், கணவாய்க்கறி, மீன்குழம்பு என்று பம்பலாக கடந்து போயின. அந்த நிகழ்வு, இன்று நினைக்கும் போதும் இனிக்கின்றது. மாணவர்களின் கல்விக்கு இடையூறு ஏற்படுத்தாமல் இது போன்ற மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சிகள் பலவற்றில் கலந்திருக்கிறோம்.
தொடரும்….
மகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வுநிலை அதிபர், குமரபுரம், பரந்தன்.
முன்னையபகுதிகள் ….
http://www.vanakkamlondon.com/m-pathmanaban-part-1-09-15-16/
http://www.vanakkamlondon.com/m-pathmanaban-part-2-09-22-16/
http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-3-09-29-16/
http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-4-10-06-16/
http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-5-10-03-16/
http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-6-10-20-16/