‘‘சினிமாவில் தொடர்ந்து நடிக்கவே திருமணத்தை ரத்து செய்தேன்’’ என்று நடிகை திரிஷா கூறினார்.
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் திரிஷா. இவரது சினிமா வாழ்க்கை 1999–ம் ஆண்டு ‘ஜோடி’ படத்தில் துணை நடிகையாக தொடங்கியது. அதில் சிம்ரன் தோழியாக வந்தார். அதன்பிறகு ‘லேசா லேசா’ படத்தில் கதாநாயகியானார். அந்த படத்துக்கு பின் கதாநாயகி வாய்ப்புகள் குவிந்தன.
கமல்ஹாசன், விஜய், அஜித்குமார், சூர்யா, விக்ரம், விஷால், ஆர்யா, உள்பட பெரிய கதாநாயகர்கள் பலருடன் ஜோடியாக நடித்து உள்ளார். 15 வருடங்களாக சினிமாவில் நடித்து வரும் திரிஷாவுக்கு தற்போது 33 வயது ஆகிறது. தனுஷ் ஜோடியாக நடித்த ‘கொடி’ படம் சமீபத்தில் வெளியானது. இதில் அரசியல் பதவிக்காக தனுசை குத்திக் கொலை செய்யும் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து பரபரப்பாக பேசப்பட்டார்.
தற்போது மோகினி, சாமி–2, போகி ஆகிய படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார். திரிஷாவையும், தெலுங்கு நடிகர் ராணாவையும் இணைத்து கிசுகிசுக்கள் வந்தன. இருவரும் நட்பாகத்தான் பழகுகிறோம் என்று மறுத்தார்கள்.
இந்த நிலையில் திரிஷாவுக்கும், பட அதிபர் வருண் மணியனுக்கும் கடந்த வருடம் ஜனவரி மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டார்கள். திருமணத்துக்கான ஏற்பாடுகளும் நடந்தன.
ஆனால் ஓரிரு மாதங்களிலேயே திரிஷா–வருண்மணியன் திருமணம் திடீரென ரத்து செய்யப்பட்டது. இதற்கான காரணத்தை இருவரும் தெரிவிக்கவில்லை. திரிஷா மீண்டும் சினிமாவில் தீவிரமாக நடிக்க தொடங்கினார்.
தற்போது திருமணம் முறிந்ததற்கான காரணத்தை திரிஷா முதல் தடைவையாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
தனுசுடன் நடித்த ‘கொடி’ படம் தெலுங்கில் வெளியாவதையொட்டி ஐதராபாத்தில் திரிஷா நிருபர்களை சந்தித்தார். அப்போது உங்கள் திருமணம் நின்று போனதற்கு என்ன காரணம்? என்று அவரிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்து திரிஷா கூறியதாவது:–
‘‘எனக்கு எல்லாமே சினிமாதான். சினிமாவை விரும்புகிறேன். கடைசி மூச்சு வரை நடித்துக்கொண்டு இருக்க வேண்டும் என்பதே எனது ஆசையாக இருக்கிறது. திருமணத்துக்கு பிறகு என்னால் சினிமாவை விட்டுவிட்டு இருக்க முடியாது. திருமணம் முடிந்ததும் என்ன செய்வது என்ற கேள்வி எழுந்தது. என்னால் சினிமாவை விட்டு விலக முடியாது என்பதால் திருமணத்தை ரத்து செய்து விட்டேன். தற்போது கதாநாயகியாக நடித்துக்கொண்டு இருக்கிறேன். கதாநாயகி வாய்ப்புகள் கிடைக்காமல் போனால் கூட குணசித்திர வேடங்களில் தொடர்ந்து நடிப்பேன்.’’
இவ்வாறு அவர் கூறினார்.