மெக்சிகோவின் ஏரோமெக்சிகோ நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று டோரியான் நகரில் இருந்து மெக்சிகோ நகருக்கு புறப்பட்டு சென்றது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது பயணிகளின் இருக்கைக்கு மேலே பொருட்கள் வைக்கும் இடத்தில் ஏதோ நெளிந்து கொண்டிருப்பதை பயணி ஒருவர் கவனித்தார். அது ஒரு பாம்பு என தெரிந்ததும் அவர் அலறினார். இதையடுத்து அந்த பாம்பு மேலே இருந்து பயணிகள் இருக்கையில் விழுந்தது. பயணிகள் அனைவரும் அலறிஅடித்துக்கொண்டு இருக்கைகளை விட்டு எழுந்து ஓடினர். இதனால் விமானத்துக்குள் பீதியும், பரபரப்பும் தொற்றிக்கொண்டது.
இதையடுத்து விமான சிப்பந்திகள் விமானிக்கு தகவல் தெரிவித்ததும், அவர் அவசர அவசரமாக விமானத்தை மெக்சிகோ நகருக்கு செலுத்தி தரையிறக்கினார். அங்கிருந்த விமான ஊழியர்கள் அந்த பாம்பை பத்திரமாக பிடித்தனர். அதன் பின்னரே பயணிகள் அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
விமானத்தில் பாம்பின் நடமாட்டத்தை பயணி ஒருவர் செல்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பரவவிட்டார். பச்சை நிறத்தில் இருந்த அந்த பாம்பு கொடிய விஷத்தன்மை கொண்டது என கூறப்படுகிறது. 5 அடி நீளம் உடைய அந்த பாம்பு விமானத்துக்குள் எப்படி வந்தது என்பது தெரியவில்லை. இது குறித்து விரைவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாக ஏரோமெக்சிகோ நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.