ஈராக் நாட்டின் பாலைவனப்பகுதியான கர்பலாவில் முஹம்மது நபியின் மகள் வயிற்றுப் பேரனாகிய இமாம் ஹுசைன் என்பவருக்கும் இஸ்லாமுக்கு எதிரான கொடுங்கோல் மன்னனின் படைகளுக்கும் இடையில் கி.பி. 680-ம் ஆண்டு நடைபெற்ற கர்பலா போரில் இமாம் ஹுசைன் வெட்டிக் கொல்லப்பட்டார்.
இந்த துக்கநாளை நினைவுகூரும் வகையில் உலகம் முழுவதும் வாழும் முஸ்லிம்களில் ஒருபகுதியினர் ஆண்டுதோறும் முஹர்ரம் மாதத்தில் 40 நாட்கள் துக்கம் அனுசரித்து, தங்களை வருத்திக்கொள்வது வழக்கமாக உள்ளது. முஹர்ரம் துக்கத்தின் 40-வது நாள் நிறைவு இன்று கடைபிடிக்கப்படுகிறது.
இந்நிலையில், கர்பலா போர் நடைபெற்ற கர்பலா நகரில் உள்ள ஐன் அல்-டம்ர் பகுதியில் இன்று தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய மனிதகுண்டு தாக்குதலில் ஆறுபேர் பலியானதாகவும், பலர் காயமடைந்ததாகவும் ஈராக் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.