வன்னிப் பிரதேசத்தில் பல பாடசாலைகளில் ஆசிரியராக கடமையாற்றி பின்னர் அதிபராக கடமையாற்றிய ஓய்வு நிலை அதிபரின் அனுபவத் தொடர்…….
யா/பலாலி அரசினர் ஆசிரியர் கலாசாலை, வசாவிளான்.
மேற்படி விலாசத்தைப் பார்த்ததுமே பலாலி ஆசிரியர் கலாசாலை வசாவிளானில் இருந்தது புரியும். யா/ வசாவிளான் மத்திய மகா வித்தியாலயமும் அப்போதிருந்த அதிபரின் நிர்வாகத் திறன் காரணமாக புகழ் பெற்றிருந்த காலமது. க.பொ.த. (உயர்தரத்தில்). விவசாயபாடம் கற்பவர்களுக்கு ஏற்றதாக அமைந்திருந்தது.
இந்த இரண்டு கல்வி நிறுவனங்களுடன், கல்லடி வேலர், தோலைகட்டி சகோதர்ர்களின் பண்ணை, அயலில் எலும்பு முறிவிற்கு பாரம்பரிய முறைப்படி புக்கை கட்டி, எண்ணை காய்ச்சி வைத்தியம் செய்யும் ஒட்டகப்புலம், அயலில் பலாலி விமான நிலையம் என்பனவும் வசாவிளானிற்கு பெருமை சேர்த்தன.

யாழ்ப்பாணத்திலிலிருந்து வடக்கு திசையில் வரும்போது உரும்பிராய், புன்னாலைக்கட்டுவன், ஊரெழு தாண்டி வசாவிளான் சந்தி வரும். வசாவிளான் சந்தி தாண்டி நேரே போனால் பலாலி விமான நிலையம், பலாலி இராணுவ முகாம் மைலிட்டி, தையிட்டி வரும். வலப்பக்கம் திரும்பி போனால் வளலாய், இடைக்காடு முதலிய ஊர்கள். தெல்லிப்பளையில் இருந்து கிழக்கு நோக்கி வந்தால் கட்டுவன், வசாவிளான் சந்தி. தொடர்ந்து போனால் ஒட்டகப்புலம், அச்சுவேலி.
நான் கணித ஆசிரியன். பூமிசாஸ்திரம் தெரியாது. சைக்கிளில் ஓடி ஓடி மேலே குறிப்பிட்ட இடங்களுக்கெல்லாம் சென்றிருக்கிறேன். இடையில் சில ஊர்களின் பெயரை தவற விட்டிருக்கலாம். தோலைகட்டி பண்ணையில் எலுமிச்சை, தோடை, பெருநெல்லி, அருநெல்லி, கிறேப்ஸ் எல்லாம் பயிரிட்டிருப்பார்கள். அவற்றிலிலிருந்து நெல்லி ரசம், ஜாம், பழரசம், வைன் முதலியவற்றை சுகாதார முறைப்படி தயாரிப்பார்கள்.
சில சகோதரர்கள் மௌன விரதம் கடைப்படிப்பவர்களாகவும் இருந்தனர். தோலைகட்டி நெல்லி ரசமும் கிறேப்ஸ் வயினும் உலக புகழ் பெற்றவை. சில குறிப்பிட்ட நேரங்களில் பொது மக்களும் அவர்களின் விற்பனை நிலையத்தில் அவற்றை வாங்கலாம். பெரும்பாலும் பிறதர்களே (Brothers) எல்லா வேலைகளையும் செய்வார்கள். இந்த பண்ணையை நம்பி இதைச் சூழ உள்ள காணிகளிலும் பொதுமக்களால் பெருநெல்லி, அருநெல்லி முதலியன வளர்க்கப்பட்டன.
இந்தப் பண்ணையின் பின்புறத்தில் வசாவிளானிலும் ஒரு எலும்பு முறிவு சிகிச்சை நிலையம் இயங்கியது. அந்த நிலையத்தின் தலைவர் இறந்து விட, அவரது மனைவியும் ஒரே மகளும் மட்டுமே அங்கு இருந்தனர். அந்த மகளும் சிஸ்டராக கொன்வென்ரில் சேர்ந்து கற்று, கடும் வருத்தம் காரணமாக விலகி வீட்டிலிருந்தார்.
சிஸ்டரின் தாய்மாமன் சிலகாலம் சிகிச்சை நிலையத்தை நடத்தினார். அவருக்கும் வயது போய் விட, மாமனாரின் ஒரே மகளுக்கு அரைவாசி வீட்டையும் சிகிச்சை நிலையத்தின் வருமானத்தின் அரைவாசியையும் சீதனமாக கொடுத்து, ஒரு சிகிச்சை தெரிந்த இளைஞருக்கு திருமணம் செய்து கொடுத்தனர். அவர் சிகிச்சை நிலையத்தையும் சிறப்பாக நடத்தி, சிஸ்டருக்கும் தாயாருக்கும் உதவியாகவும் இருந்தார்.
அங்கு வைத்தியத்திற்கு வரும் நோயாளர்கள், தங்கி வைத்தியம் செய்வதற்காக கட்டப்பட்ட இரு அறை கொண்ட வீட்டைத் திருத்தம் செய்து ஆசிரியர் கலாசாலையில் பயிற்சி பெறும் ஆசிரியர்களுக்கு வாடகைக்கு விடப்படுகின்றது. அதிலொரு அறையிலேயே நாங்கள் பயிற்சி பெறும் இரு வருடங்களும் வாழ்ந்தோம். எங்கள் அறையின் வாடகை சிஸ்டருக்கும், மற்ற அறையின் வாடகை மைத்துனிக்கும் போகும்.
சிஸ்டரின் வீட்டிற்கு அயலில் வடக்கில் நிர்மலாவின் வீடும், மேற்கில் அரசகுமாரியின் வீடும் இருந்தன. இருவரும் சுசியின் நல்ல நண்பர்களாக ஆனார்கள். சிஸ்டர் வீட்டின் கிழ்க்குத் திசையில் ஓர் ஓய்வு பெற்ற ஆசிரியர் வாழ்ந்தார். அவரது காணியில் ஒரு பகுதி கிறேப்ஸ் தோட்டம். ஏனைய இடங்களெல்லாம் பூந்தோட்டம். ஆசிரியர் காலையும் மாலையும் ரியூஸன் கொடுப்பார். அவருக்கு பிள்ளைகள் இல்லை. பூக்கன்றுகள் தான் கணவனுக்கும் மனைவிக்கும் பொழுது போக்கு.

அவர்கள் வீட்டினூடாக சென்றால் வசாவிளானின் மிகப் பெரிய தேவாலயம். சிஸ்டரும் ஆசிரியரும் தங்கள் காணிகளின் முத்தத்தினூடாக நடந்து தேவாலயம் செல்பவர்களுக்கு பாதை விட்டிருந்தார்கள். தேவாலயம் செல்லும் பெண்களும் பிள்ளைகளும் சுசிக்கும் தீபாவிற்கும் அறிமுகமாகிவிட்டனர்.
சிஸ்டர் வீட்டிற்கு முன் வீட்டில் ஓர் ஆசிரியை வசித்தார். அவரும் சுமார் இருபது வயதுள்ள அவரது மகளும் அந்தப் பாதையால் தேவாலயம் செல்வது வழமை. அந்த ஆசிரியையின் முகத்தில் தீராத கவலையை நாங்கள் அவதானித்தோம். அவரது எட்டு வயது மகள் நாங்கள் அந்த வீட்டிற்கு வருவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் கொடிய கான்சர் நோயால் இறந்துவிட்டாரென்று அறிந்து மிகவும் கவலை கொண்டோம்.

விவசாயிகளான அம்மக்கள், தங்கள் மத்தியில் வாழ வந்த எம்மையும் தங்கள் சகோதரர்களாக மதித்தார்கள். அதனால் அறுவடை காலங்களில், தங்கள் தோட்டத்தில் விளைந்த கிழங்கு, கிறேப்ஸ், வெண்காயம், வாழைப்பழம் என்று அடிக்கடி தருவார்கள். மறுத்தாலும் கேட்க மாட்டார்கள்.
மன்னாரில் பெற்றோர் தங்கள் வயல் அரிசி, காட்டிறைச்சி, தேன்,கொய்யாப்பழம், பலகாரம் தரும் போது எமது மாணவர்களின் பெற்றோர் என்ற உரிமை இருந்தது. இங்கு பழகிய அன்பு மட்டும் தான். ஆசிரியையும் மகளும் தேவாலயம் செல்லும்போது, மகள் அடிக்கடி சிறு பையில் கிறேப்ஸ் பழங்களைக் கொண்டு வந்து தீபாவிற்கு கொடுப்பார். தீபாவும் ஓடிப் போய் நன்றி சொல்லி வாங்கி வருவாள். தீபாவைக் காணும் போதும் அவளுடைய கதையைக் கேட்கும் போதும் மட்டும் ஆசிரியையின் முகம் சற்று மலரும்.
சிஸ்டர் வீட்டை சூழ இருந்தவர்களில் சில உத்தியோகத்தர்கள் இருந்தாலும் பெரும்பாலானவர்கள் விவசாயிகள். மண்ணும் நல்ல செம்பாட்டு மண். கிறேப்ஸ், உருளைக்கிழங்கு, வெண்காயம், வாழை முதலியன பிரதானமாக விளைவிக்கப்பட்டன. உருளைக்கிழங்கு, கிறேப்ஸ் என்பன பெட்டி பெட்டியாக அடுக்கப்பட்டிருக்கும்.

வெண்காயம் சாக்குப் பைகளில் நிரப்பப்பட்டிருக்கும். வாழைக் குலைகள் இன்னொரு பக்கம் அடுக்கப்பட்டிருக்கும். லொறிகளில் வரிசை வரிசையாக வந்து வியாபாரிகள் விலை பேசி ஏற்றிக்கொண்டு கொழும்புக்கு செல்வார்கள். சந்தைப்படுத்தல் இலகுவாக இருந்தது. விவசாயிகள் எல்லோரும் வளமாகவே வாழ்ந்தார்கள். யாவரும் அழகிய வீடுகளிலேயே வசித்தார்கள். அண்மைக் காலமாக வெளி நாட்டுக்கு தொழில் தேடிப் போகும் இளைஞர்கள் தொகையும் கொஞ்சம் அதிகரித்தது. அதனால் கணவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி விட்டு, அவர்களுக்காக தேவாலயத்தில் வணங்க வரும் பெண்கள் தொகையும் அதிகரித்தது.
சூழலிலிருந்த இளம் பெண்களிடம் காணப்பட்ட ஓர் உயர்த்த கருணை நிறைந்த செயற்பாடு என்னையும் சுசியையும் திகைக்க வைக்கும். இந்தப் பெண்கள் கிழமையில் ஒரு நாள், தேவாலயத்தில், மாலை நான்கு மணியளவில் கூடி தமது அயலில் நோயுற்று இருப்பவர்களுக்காக, அவர்களுக்கு சுகம் வேண்டி பிரார்த்தனை செய்வார்கள். எல்லோரும் எழுந்து நிற்க ஒருவர் நோயாளியின் பெயரையும் நோயையும் கூறுவார். பின்னர் முழங்காலில் நின்று அவர் குணம் பெற வேண்டி பிரார்த்திப்பார்கள். பின்னர் மற்ற நோயாளியின் பெயரை வேறொருவர் கூற அவருக்காக பிரார்த்தனை இடம் பெறும்.
ஒரு முறை சுசிக்கு வருத்தம் வந்த போது அப்பெண்களில் சிலர் வந்து “சுசி அக்கா, இன்று நாங்கள் உங்களுக்காகவும் பிரார்த்திக்கப் போகின்றோம்” என்று கூறி சென்றார்கள். முதல் நாள் வைத்தியரிடம் பெற்ற மருந்தாலோ, அந்தப் பெண்களின் பிரார்த்தனையாலோ சுசிக்கு வருத்தம் மாறியது மட்டும் உண்மை.
தீபாவிற்கு மூன்று வயதாகும் போது ஒருமுறை சுசியின் அக்கா, அத்தானுடனும் அரசியுடனும் வசாவிளானுக்கு வந்தார்கள். அரசிக்கு நான்கு வயதிருக்கும். எல்லோருமாக பலாலி விமான நிலையம் சென்றோம். அதிகாரிகளிடம் அனுமதி பெற்று, பயணிகள் இறங்கி, புதிய பயணிகள் ஏறக் காத்திருந்த இடைவெளியில் விமானத்தினுள் ஏறி சுற்றிப் பார்த்தோம். எயார் ஹோஸ்டஸ்கள் அரசிக்கும் தீபாவிற்கும் கை நிறைய சொக்கிளேற்களை அள்ளிக் கொடுத்தார்கள்.

விமானத்தில் ஏறிப் பார்த்ததும், அவர்கள் தந்த சொக்கிளேற்களை சாப்பிட்டதும் திறில் நிறைந்த புதிய அனுபவமாகவே இருந்தது. பின்னர் வெளிநாடு செல்ல பிரமாண்டமான விமானங்களில் ஏறியபோதும், விமானத்தில் வழங்கப்பட்ட சுவையான உணவு வகைகளைச் சாப்பிட்ட போதும் முதல் முறை அந்த சிறிய விமானத்தில் ஏறிப் பார்த்த ஞாபகம் வருவது வழக்கம்.
அன்றே நாங்கள் காங்கேசன்துறை சென்று ‘பீச்’சையும் சுற்றிப் பார்த்து வந்தோம். நாட்டில் பிரச்சினை வரப்போவதும், வசாவிளானின் இந்த இன்பமான வாழ்வு சிதையத் போவதையும், பலாலி, காங்கேசன்துறை முதலிய இடங்களை விட்டு மக்கள் யாவரும் ஓடப்போகின்றார்கள் என்பதையும் நாங்கள் அன்று அறிந்திருக்கவில்லை.
தொடரும்….
மகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வுநிலை அதிபர், குமரபுரம், பரந்தன்
முன்னைய பகுதிகள் ….
http://www.vanakkamlondon.com/m-pathmanaban-part-1-09-15-16/
http://www.vanakkamlondon.com/m-pathmanaban-part-2-09-22-16/
http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-3-09-29-16/
http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-4-10-06-16/
http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-5-10-03-16/
http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-6-10-20-16/
http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-7-10-27-16/
http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-8-11-03-16/
http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-9-11-10-16/
http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-10-11-17-16/
http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-11-11-24-16/
http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-12-12-01-16/
http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-13-12-08-16/
http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-14-12-15-16/
http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-15-12-22-16/
http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-16-12-29-16/
http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-17-01-05-17/
http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-18-01-12-17/
http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-19-01-19-17/
http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-20-01-26-17/
http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-21-02-09-17/
http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-22-02-16-17/