7
இலங்கையில் 2009–ம் ஆண்டு ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையேயான உச்சகட்ட போரின்போது நடந்த போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தும்படி ஐ.நா. மனித உரிமைகள் கமிஷன் 2015–ம் ஆண்டு உத்தரவிட்டது. எனினும், இது தொடர்பான விசாரணையை நடத்தாமல் இலங்கை அரசு காலம் தாழ்த்தி வருகிறது.
இந்த நிலையில் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடந்த ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில், போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணையை நடத்துவதற்கு இலங்கை அரசுக்கு 2 ஆண்டுகள் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.
இதற்கு இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்பு தெரிவித்து இருக்கிறது. இதுபற்றி அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ‘‘ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் தீர்மானத்தில் விசாரணையை குறிப்பிட்ட காலத்திற்குள் நடத்தி முடிக்கவேண்டும் என்று கூறப்பட்டு இருப்பதை வரவேற்கிறோம். அதேநேரம் இலங்கை தமிழ் மக்கள் தங்களுடைய பொறுமையின் எல்லையை எட்டிவிட்டனர். எனவே இலங்கை அரசு, தனது வாக்குறுதிப்படி ஆக்கிரமித்த நிலங்களை விடுவிப்பது, தமிழ் அரசியல் விடுதலை செய்வது, காணாமல் போனவர்களின் குடும்பத்தினரின் குறைகளை களைவது உள்ளிட்ட பிரச்சினைகளை குறித்து காலவரையறைக்குள் தீர்த்து வைக்கவேண்டும்’’ என்று கூறப்பட்டு உள்ளது.