சிவாஜிராவ் கெய்க்வாட் ஆக பெங்களூரில் வசித்த காலங்கள் கஷ்டமாகவே நகர்ந்தன. இதுகுறித்து சென்னை தின விழாவில் நடிகர் மோகன்ராமன் பேசிய விவரம் வருமாறு:–
ரஜினி பார்த்த முதல் வேலை ஆபீஸ் பியூன். தொடர்ந்து நிறைய சிறுசிறு வேலைகளில் இருந்தார். அதன் பிறகு கண்டக்டர் ஆனார்.
ரஜினி பணியாற்றிய பஸ்சில் ராஜ்பகதூர் டிரைவராக இருந்தார். அவருக்கு சினிமா பார்க்க பிடிக்கும். இருவரும் ஒரே நாளில் லீவு போட்டுக் கொண்டு சிவாஜி கணேசன் படம் பார்க்க போய் விடுவார்கள்.
ரஜினி நாடகங்களில் நடித்தார். அவரது நடிப்பு ஆர்வத்தை ராஜ்பகதூர் ஊக்குவித்தார். ரஜினி நடிப்பு கல்லூரியில் சேர்ந்து நடிப்பதற்கும் அவரே பண உதவி செய்தார். கட்ட பொம்மன் படத்தில் உள்ள வசனங்களை பேசி பயிற்சி எடுத்தார்.
டைரக்டர் கே.பாலச்சந்தர் ஒருநாள் ரஜினி படித்த கல்லூரிக்கு சென்றார். அங்கு ரஜினி வேகமாக பேசி நடித்த ஸ்டைல் அவருக்கு பிடித்தது. அபூர்வ ராகங்கள் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார்.
அதன் பிறகு சிவாஜி ராவ் கெய்க்வாட் என்ற பெயரை ரஜினிகாந்த் என மாற்றினார் பாலச்சந்தர். மேஜர் சந்திரகாந்த் என்ற பெயரில் படம் எடுத்து இருந்தார். அந்த தலைப்பை மனதில் வைத்தே ரஜினிகாந்த் என்ற பெயரை தேர்வு செய்தார்.
தியாகராயநகரில் உள்ள கிருஷ்ணவேணி தியேட்டரில் டிக்கெட் வாங்கிதான் முதலாவதாக நடித்த படத்தை பார்க்க போனார். யாராவது தன்னை அடையாளம் கண்டு கொள்கிறார்களா என்று சுற்று முற்றும் பார்த்தார். 10 வயது சிறுமி மட்டும் அவரை அடையாளம் கண்டார். அந்த சிறுமிதான் ரஜினியின் முதல் ரசிகை.
1975 மார்ச் 27–ந்தேதி ஹோலி பண்டிகை யன்றுதான் ரஜினிகாந்த் பெயரை பாலச்சந்தர் சூட்டினார். அந்த நாளைதான் சூப்பர் ஸ்டார் பிறந்த நாளாக கொண்டாட வேண்டும்.
ரஜினி படப்பிடிப்பில் அடிக்கடி சிகரெட்டை மேலே சுண்டி விட்டு வாயில் பிடித்து புகை பிடிப்பது உண்டு. இந்த ஸ்டைல் பாலச்சந்தரை கவர்ந்தது. தனது படங்களில் அதை பயன்படுத்தினார்.
ரஜினிக்கு பிடித்த பாடல் ரா…ரா.ரா. ராமையா எட்டுக்குள்ள உலகம் இருக்கு ராமையா.
இவ்வாறு அவர் பேசினார்.
கதாநாயகர்கள் எல்லோரும் ஆரம்பத்தில் மென்மையான கேரக்டர்களில் நடித்தே உயர்ந்தார்கள். ஆனால் ரஜினி வில்லனாக இருந்து கதாநாயகனாக சினிமாவுக்கு வருவதற்கு முன் மேடை நாடகததில் துரியோதனனாக நடித்தார். மூன்று முடிச்சு படத்தில் வில்லன் வேடம். பிறகு புவனா ஒரு கேள்விக்குறி, ஆறிலிருந்து அறுபது வரை படங்களில் மென்மையான கேரக்டரில் வந்தார். பில்லா படத்துக்கு பிறகுதான் ஆக்சன் ஹீரோ ஆனார்.