புகைப்படத் தொகுப்பு

Home சினிமா “LTTE“ புலிகளுக்கு எதிரான திரைப்படமா? தேவர் அண்ணா வணக்கம் லண்டனுக்குப் பேட்டி

“LTTE“ புலிகளுக்கு எதிரான திரைப்படமா? தேவர் அண்ணா வணக்கம் லண்டனுக்குப் பேட்டி

7 minutes read

மண்ணுக்காக என்ற ஈழத்திரைப் படத்தில் நாயகனாக நடித்தவர் தேவர் அண்ணா எனப்படும் ஆறுமுகம் தங்கவேலாயுதம். தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்ப கால உறுப்பினர்களில் ஒருவராக இருந்த தேவர் அண்ணா, விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுச் செயற்பாடுகளிலும் தன்னை ஈடுபடுத்தியவர். ஜீவா நடித்த இராமேஸ்வரம் படத்தில் நடித்த இவர், தேன்கூடு என்ற ஈழம் தொடர்பான படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழக திரைப்படங்களில், குறிப்பாக ஈழம் தொடர்பான படங்களில் தன்னுடைய பங்களிப்பை செய்துவரும் தேவர் அண்ணா, வணக்கம் லண்டனுக்கு அளித்த நேர்காணல் இது.

உங்களது சினிமா பிரவேசம் பற்றி சொல்லுங்கள்?

எனது சினிமா பிரவேசம் என்பது 1994ஆம் ஆண்டு ஆரம்பமாகியது. புலிகளின் குரல் வானொலிக்கென நான் எழுதி 28,07,93 இல் ஒலிபரப்பான ‘மண்ணுக்காக நாடகத்தை தேசியத்தலைவர் அவர்கள் செவிமடுத்தபின் என்னை அழைத்து அதனைப் படமாக்கும்படி கேட்டுக்கொண்டார்.

அப்போது நான் விடுதலைப் புலிகள் கலை பண்பாட்டுக் கழகத்தின் துணைப் பொறுப்பாளராக பணி புரிந்துகொண்டிருந்தேன். அதுபற்றி பொறுப்பாளர் திரு.புதுவை ரத்தினதுரை அவர்களோடு கலந்து பேசி அவரின் ஒத்துழைப்போடு படமாக்கும் முயற்சியில் இறங்கினேன்.அதற்கான நிதி வழங்கலை கலை, பண்பாட்டுக்கழகமே பொறுப்பேற்றது.

எனது நண்பரும் காங்கேசந்துறை இளந்தமிழர் மன்றத்தைச் சேர்ந்தவருமான திரு.பொன்.கணேசமூர்த்தி அவர்களும் அந்த அமைப்பைச் சேர்ந்தவர்களும் எம்மோடு இணைந்து வானொலி,மேடை நாடகங்களை வழங்கிக் கொண்டிருந்தார்கள். அமரர் திரு.பொன். கணேசமூர்த்தி அவர்களே படத்திற்கான உரையாடல், பாடல்கள் நெறியாள்கைப் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டார்.

Image may contain: 6 people

‘மண்ணுக்காக’கதையை ஒரு தனிமனிதன் எவ்வாறு விடுதலைப் போராட்டத்திற்கு பங்களிப்புச் செய்யலாம் என்பதை எடுத்துச் சொல்வதாக அமைத்திருந்தேன்.

2006இல் தமிழ்த்திரையுலகில் திரு.செல்வம் சுப்பையா அவர்களின் இயக்கத்தில் உருவான ‘ராமேஸ்வரம்’ படத்திலும் நடிப்பதற்கான வாய்ப்புக் கிடைத்தது. ஜீவா,பாவனா,மணிவண்ணன் ஆகியோருடன் இணைந்து நடித்திருந்தேன்.

அதன்பின் இயக்குனர் இகோர் அவர்களது இயக்கத்தில் வெளியான ‘தேன்கூடு’ படத்தில் கதாநாயகியின் அப்பாவாக நடித்தேன். விரைவில் வெளிவரவுள்ள கவிஞர் சிநேகனின் ‘பொம்மி வீரன்’ படத்திலும் ஒரு சிறு பாத்திரத்தில் நடித்துள்ளேன். சென்ற ஆண்டு பாண்டிச்சேரியில் எனது நண்பர் ஹர்சத் கானின் ‘மீண்டும் புன்னகை’ படத்தில் வயதான ஒரு ஓவியக் கலைஞராக நடித்துள்ளேன்.

Image may contain: 2 people, people smiling, people standing and outdoor

எல்ரிரி படம் புலிகளுக்கு எதிரான படமா?

LTTE படம் புலிகளுக்கு எதிரான படமா? நிச்சயமாக இல்லை.இது விடுதலைப் புலிகளுக்கு எதிரான படமாக இருந்தால் கடந்த பல மாதங்களாக இடம்பெற்று வருகின்ற இப்படம் பற்றிய கதை உரையாடலில் நான் பங்குபற்றியிருக்க மாட்டேன். இந்தப்படத்தின் தயாரிப்பு மற்றும் இயக்குனராக செயற்படும் திரு.Amr ரமேஷ் அவர்கள் முன்பு சயனைட்(குப்பி)படத்தை எடுத்தவர். அந்தப் படத்தை அவர் எடுத்த காலகட்டத்தில் இயக்கத்தைச் சேர்ந்த யாருடனும் அவர் தொடர்பில் இருக்கவில்லை.ஆனால் அந்தப்படத்தை புலிகள் அமைப்பைச் சேர்ந்த பலர் பார்த்துள்ளார்கள்.அந்தப்படம் புலிகளுக்கு எதிரான படம் என்றோ,அதனைத் தடை செய்ய வேண்டும் என்றோ யாரும் கூறவில்லை.அந்தப்படம் வன்னிக்கு அனுப்பப்பட்டு பலரும் பார்த்துள்ளார்கள். திரைப்பட வெளியீட்டுப்பிரிவு மற்றும் நிதர்சனத்தைச் சேர்ந்த சேரலாதன் மற்றும் சிலரோடு அவர் பேசியுள்ளார்.LTTE பற்றி படம் எடுக்கப்போவது பற்றியும் அவர்பலரோடும் பேசியுள்ளார்.

இயக்கம் பற்றிய ஒரு சிறந்த ஆவணமாக இதைக் கொண்டுவரவேண்டும் என்ற நோக்கில் பல வருடங்களாக பலவித சிரமங்களுக்கும் மத்தியில் அதற்கான ஆக்க வேலைகளில் ஈடுபட்டு வருகின்றார். சென்ற வருடம் சுவிஸில் இருந்து இயக்கத்தின் முன்னாள் போராளிகள் என்னோடு தொடர்பு கொண்டு இப்படி ஒரு படவேலை ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் ,என்னை இயக்குனரோடு இணைந்து வேலை செய்யுமாறும்,இயக்கம் பற்றிய ஆரம்பகால வரலாறு தெரிந்தவன் என்ற வகையில் அந்தப் படத்தயாரிப்பில் இணைந்து செயற்படுமாறு கூறி இயக்குனரோடு என்னை தொடர்புபடுத்தி விட்டார்கள்.

இயக்குனர் ரமேஷுடன் செயற்படத் தொடங்கிய பின்பே அவர் இந்தப் படைப்பிற்காக எந்தளவுக்கு உழைத்திருக்கின்றார் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.தேசியத்தலைவரோடு வாழ்ந்த பழகிய பலரை பல நாடுகளுக்கும் சென்று சந்தித்து அவர்களை நேர்காணல் கண்டு அவர்களது அனுபவங்களைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

தேசியத்தலைவரின் அண்ணர் உட்பட பலரைச் சந்தித்து தலைவரது ஆரம்பகால வாழ்க்கைகள் பற்றி தெரிந்து கொண்டுள்ளார்.நாம் ஆரம்பகால போராளிகளிடம் நேர்காணல் செய்துள்ளோம்.இன்னமும் பலவற்றை சேகரித்துக் கொண்டிருக்கின்றோம்.

இன்னமும் கதை பற்றிய உரையாடல்கள்தான் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.நான் மட்டுமல்ல,பல ஆண் பெண முன்னாள் போராளிகள் இயக்குனரோடு தொடர்பில் உள்ளார்கள்.அவ்வப்போது அவர்களது ஆலோசனைகளும் பெறப்பட்டு வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

Image may contain: 5 people, people smiling, people standing and outdoor

இது வெப் சீரிஸ் ஆகத்தான் வெளிவரும்.தலைவர் அவர்களது பிறப்பில் இருந்து முள்ளிவாய்க்கால் இறுதிவரையான சம்பவங்களை உள்ளடக்கியதாக இது வெளிவரவுள்ளது. உலகத்தின் பல பாகங்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் இயக்க திரைப்படத்துறையோடு தொடர்புபட்டவர்கள் படப்பிடிப்பின்போது நேரடியாக பங்கேற்பார்கள். இயக்க வரலாற்றைச் சொல்லும் மிகப்பெரிய ஆவணமாக இது வெளிவரும்

விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளராக முன்னாள் போராளியாக இருந்து கொண்டு எப்படி ஒற்றை பனைமரம் படத்தில் நடித்தீர்கள்?

ஒற்றைப் பனைமரம் படத்தில் நான் நடித்தமை பற்றி உறவுகள் முன்பே வினா தொடுத்துள்ளார்கள். நான் இன்னும் அந்தப் படத்தைப் பார்க்கவில்லை. விடுதலைப் புலிகளுக்கு எதிராக புதியவன் என்ன சொல்லியிருக்கின்றார் என்பதும் எனக்குத் தெரியாது.

Image may contain: one or more people and people sitting

2005இல் ‘மண்’ படத்தை அவர் இயக்கிய காலத்தில் இருந்து இருவரும் நட்பு பாராட்டி வருகின்றோம். ஒற்றைப் பனைமரம் படத்தில் சிங்கள இராணுவ அதிகாரியாக நடிக்குமாறு கேட்டார்.  சிங்கள இராணுவத்தின் கொடுமைகளை எனது நடிப்பின் மூலம் வெளிக்கொணர முடியும் எனறு எண்ணியதால் நடித்தேன்.

Image may contain: 1 person, sitting

பொதுவாக ஒரு படத்தில் பிரதான பாத்திரங்களில் நடிப்பவர்கள்தான் கதையை கேட்டு நடிப்பார்கள். ஒரு நாள் படப்பிடிப்பில் ஒரு காட்சியில் வரும் ஒருவருக்கு முழுக்கதையும் சொல்லிக் கொண்டிருக்க மாட்டார்கள். சிதம்பரம் பகுதியில் ஒரு நாள் படப்பிடிப்பில் பங்கேற்றேன். படத்தில் வரும் இயக்குனரின் கருத்துக்களை நான் ஏற்றுக்கொண்டதாக யாரும் எண்ண வேண்டாம்.

தமிழக சினிமாவில் ஈழப் பிரச்சனை படமாக்கப்படுவது வெற்றி அளித்துள்ளா?

தமிழக சினிமாவில் ஈழப்பிரச்சனை படமாக்கப்படுவது வெற்றி அளிக்குமா என்றால் இல்லை என்பதே எனது பதில்.புலிகள் இயக்கத்தை கேவலப்படுத்தும் விதமாக படம் எடுத்தால் தணிக்கை கிடைக்கும். உண்மையான பிரச்சனைகளை சொல்ல முனைந்தால் தணிக்கை கிடைக்காது.உதாரணத்திற்கு தேன்கூடு படத்தை சொல்லலாம். நந்தாவின் தயாரிப்பில் ஆனந்த் மூர்த்தியின் இயக்கத்தில் எடுக்கப்பட்ட ‘ ‘திலீபன்’ படம் நிதிப்பிரச்சனையால் முடங்கிக் கிடக்கிறது. இனம்,புலிப்பார்வை’ போன்ற போராட்டத்தையும், இயக்கத்தையும் கொச்சைப்படுத்தி எடுத்தால் சென்சார் கிடைக்கும்.

நேர்காணல் மற்றும் தொகுப்புவணக்கம் லண்டனுக்காக தீபன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More