Tuesday, April 23, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா இனியாவது முரளி படத்திலிருந்து விஜய்சேதுபதி விலகலாம்: தீபச்செல்வன் 

இனியாவது முரளி படத்திலிருந்து விஜய்சேதுபதி விலகலாம்: தீபச்செல்வன் 

3 minutes read

 

இப்போதாவது முரளிதரன் குறித்த திரைப்படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகலாம் என்று ஈழக் கவிஞர் தீபச்செல்வன் குறிப்பிட்டுள்ளார். முரளிதரன், ஈழத் தமிழர்களுக்கு எதிராக செயற்பட்ட பல்வேறு விசயங்களை ஆதாரம் காட்டி கடந்த மாத குமுதம் இதழில் முரளி படத்திலிருந்து விஜய் சேதுபதி விலக வேண்டும் என்று வலியுறுத்தினார் தீபச்செல்வன். இப்போது, கோத்தபாய ஆதரவுக் கூட்டத்தில் முரளி கலந்து கொண்டு, புலிகள் அழிக்கப்பட்ட நாளே வாழ்வில் தனக்கு மகிழச்சியான நாள் என்று மீண்டும் சர்ச்சைப்பட கூறியுள்ளார். இந்த நிலையில் மீண்டும் தீபச்செல்வன், இவ்விடயம் குறித்து தனது குமுதப் பத்தியில் எழுதியுள்ள கட்டுரையை வாசகர்களுக்கு தருகிறது வணக்கம் லண்டன். 

முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படம் ஒன்றை 800 என்ற தலைப்பில் எடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் விஜய் சேதுபதி முத்தையா முரளிதரன் பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வந்தன. இந்த தகவல்கள் ஈழத் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை தோற்றுவித்தது. இதனை வெறும் சினிமா செய்தியாக யாரும் பார்க்கவில்லை. ஏனெனில் முத்தையா முரளிதரன் ஒரு அரசியல் விளையாட்டு வீரராக ஈழத் தமிழர்களின் எதிர்ப்புக்கு ஆளானவர்.

முரளிதரன் தமிழர்களின் துயரங்கள்மீது பந்தெறிந்து விளையாடியதுதான் இதற்குப் பிரதான காரணம். பிறப்பால் தமிழனாக இருந்தாலும், மனதால் அவர் ஒரு சிங்களன். ஈழத் தமிழர்கள்மீது இனப்படுகொலை நடாத்தப்பட்டது, அவர்களின் நாடு தமிழீழம், அதை சிங்கள தேசம் விடுவிக்க வேண்டும் என்று சொல்லுகின்ற சிங்கள படைப்பாளிகள், அரசியல் தலைவர்கள்கூட உள்ளனர்.

முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் போர்க்குற்றம் நடைபெறவில்லை இனப்படுகொலை நடைபெறவில்லை என்று சிங்களத் தலைவர்கள்கூட சொல்லத் தயங்குவார்கள். விடுதலைப் புலிகள்மீது குற்றங்களை சுமத்த சிங்களத் தலைவர்கள் தயங்குவார்கள். ஆனால் முத்தையா முரளிதரன் ஈழப் போராட்டத்தையும் ஈழத் தமிழர்களையும் விடுதலைப் புலிகளையும் எவ்வித கூச்சமுமின்றி தன் அற்ப நலன்களுக்காக கொச்சைப்படுத்துவார்.

கடந்த சில நாட்களின் முன்பு, வடக்கிற்கு வந்த சிங்கள அமைச்சர் சம்பிக்க ரணவக்க, சொல்கிறார் வடக்கில் மாத்திரமின்றி சிங்கள தேசத்திலும் இலங்கை அரசால் பல்லாயிரம் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர் என்று. இதன் மூலம் வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள், இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டதை அந்த அமைச்சர் ஏற்றுக்கொள்ளுகிறார். அவர் ஜாதிக ஹெல உறுமய என்ற சிங்களப் பேரினவாத கட்சியை சேர்ந்தவர்.

முத்தையா முரளிதரன் கொழும்புவில் என்ன பேசினார் தெரியுமா? 2009இல் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்ட நாளே தனது வாழ்வில் முக்கியான நாள் என்று முரளி கூறியுள்ளார். ஈழத் தமிழர்களின், உலகத் தமிழர்களின் இனப்படுகொலை நாளே தனக்கு வாழ்வின் முக்கிய நாள் என்று சொல்வது பிறழ்வும் வன்மும் கொண்ட மனநிலையல்லவா?

அத்துடன் 2009இல் விடுதலைப் புலிகள்தான் ஈழத் தமிழ் மக்களை படுகொலை செய்தார்களாம். முரளியின் இந்தப் பேச்சைக் கேட்டு ஈழத் தமிழ் மக்கள் கொதித்துப் போயுள்ளனர். ஒன்றரை இலட்சம் ஈழத் தமிழ் மக்களை இனப்படுகொலை செய்தவர் கோத்தபாய ராஜபக்சே. உலகமே அஞ்சுகின்ற கொடிய மனிதர். இசைப்பிரியாவின் படுகொலையை, சிறுவன் பாலச்சந்திரன் படுகொலையை மனசாட்சி உள்ள எவரும் மறக்கார். ஊடகவியலாளர்களை வெட்டி இராட்ச மீன்களுக்கு உணவாக போட்ட கோத்தபாயவின் அருகில் இருந்து கொண்டு இப்படி பேசும் முரளியை பார்க்க மனசாட்சி உள்ள எந்த மனிதனுக்கும் நிச்சயம் மனம் கொதிக்கும்?

ஏற்கனவே, முரளிதரன் கூறிய சர்ச்சையான கருத்துக்களால் அவர்மீது எதிர்ப்பு கடுமையாக இருந்த நிலையில் இப்போது இன்னமும் எதிர்ப்பையும் வெறுப்பையும் சம்பாதித்துள்ளார். பிள்ளைகளைப் பறிகொடுத்துவிட்டு, வீதியில் கிடந்து போராடும் மக்களைப் பார்த்து, முப்பது தாய்மார்கள் போராடுவதால் அரசு மீதான குற்றச்சாட்டுக்கள் உண்மையாகிவிடாது என்று சொன்னவர். புலிகளை அழித்தமையால்தான் இன்று தாம் சந்தோசமாக இருப்பதாகவும் தானும் ஒரு தமிழன் தனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் கூறினார்.

ராஜபக்சேவின் தரப்பு வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ச அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அவரது தேர்தல் பிரசார மேடையில் முத்தையா முரளிதரன் தோன்றி, தான் யாரென்பதை இன்னும் நன்றாக காண்பித்து தெளிவுபடுத்தியுள்ளார்.

யாரையும் காயப்படுத்துகிற காட்சியில் நடிக்க மாட்டேன் என்று, இந்த விவகாரம் குறித்து விஜய் சேதுபதி கூறியிருந்தார். அத்துடன் சமூக ஒற்றுமையை வலியுறுத்துகிற படம்தான் முத்தையா முரளிதரன் படம் என்றும் ஆஸ்ரேலியா வானொலி ஒன்றுக்கும் கூறியிருந்தார்.

ஒட்டுமொத்த ஈழத் தமிழ் இனத்தையே காயப்படுத்துகின்ற, வரலாறு முழுவதும் காயப்படுத்துகின்ற, ஒன்றரை இலட்சம் ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்த இனப்படுகொலையாளியை தலைவனாக கொண்ட முரளிதரன் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கத்தான் வேண்டுமா?

காஷ்மீர் மக்களுக்காகவும் தமிழகத்தின் விளிம்புநிலை மக்களின் பிரச்சினைகளுக்காகவும் தீர்க்கமாக குரல் எழுப்பும் விஜய் சேதுபதி இந்த விடயத்தில் மாத்திரம் நழுவுவது ஏன்?

போர் முடிந்து சில வருடத்தில், நடிகை அஸின் ராஜபக்சேவின் மனைவி சிராந்தி ராஜபக்சேவுடன் யாழ்ப்பாணம் வந்தார். சிராந்தி ராஜபக்சே ஒரு வார்த்தையேனும் தமிழருக்கு எதிராகப் பொதுவெளியில் பேசியவரல்ல. ஆனாலும் அதுவே அஸினின் தமிழ் திரையுலக வாழ்க்கைக்கு முடிவானது.

சிங்களவர்கள்கூட சொல்லத் தயங்குகிற பொய்யை தன் அற்ப சொற்ப நலன்களுக்காக பேசுகின்ற அற்ப மனிதரான முரளி ஒரு நாயகன் கிடையாது. அவரது கிரிக்கெட் வாழ்வு சாதனையாக இருக்கலாம். அதற்கு அப்பாலிருக்கும் யதார்த்தமான அவரது வாழ்வும் கருத்துக்களும் ஒடுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட ஈழ இனத்திற்கு எதிரானது.

எனவே, தனது திறமையால், நடிப்புலகில் தனக்கென ஒரு இடத்தை வகிக்கும் விஜய் சேதுபதி இந்தப் படத்தில் நடிப்பது, தனது நடிப்புலக சாதனையை நிச்சயமாக பாழாக்கும். தவிர்ப்பது ஆயிரம் படங்களை நடித்தாலும் கிடைக்காத அபிமானத்தையும் தரும். உலகம் எங்கும் சிதறிப் பரந்து வாழும் ஈழத் தமிழர்களின் ரசிப்பாதரவை பெற்றும் தரும்.

நன்றி: குமுதம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More