.
ஈழத் திரையுலகில் “சினம்கொள்” திரைப்படம் ஒரு புதிய செய்தியை சொல்ல முனைகின்றது. ஈழத்தமிழர் மத்தியில் இத்திரைப்படம் ஏன் கவனத்தைப்பெற்றது? கதையமைப்பா, காட்சியமைப்பா, ஒளிப்பதிவா, பாடல் வரிகளா அல்லது இதனூடாக சொல்லப்படும் செய்தியா? ஆனாலும் ஈழத்திரைத்துறை அடுத்த கட்டத்துக்குச் செல்வதற்கான நுழைவாயிலில் நாம் இருக்கின்றோம் என்பது நிச்சயம்.
கனடாவில் வாழும் ஈழத்தமிழ் இயக்குனர் ரஞ்சித் ஜோசப் இயக்கத்தில் கடந்த 3ம் திகதி வெளிவந்த “சினம்கொள்” திரைப்படம் கனடா, பிரித்தானியா, பிரான்ஸ், நோர்வே மற்றும் ஏனைய ஐரோப்பிய நாடுகளில் ஒரே நேரத்தில் பல திரையரங்குகளில் திரையிடப்பட்டது. பொதுவாக ஈழத்தமிழரின் ஈழத்திரைப்படங்கள் இவ்வாறு திரையிடப்படுவது மிகக்குறைவு. அதிலும் சில காட்சிகள் அரங்கம் நிறைந்து காணப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
போருக்குப் பின் ஈழமண் எதிர்நோக்கும் பிரச்சனைகளை வைத்து கதையமைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களை கதைக்களமாக கொண்டு தடுப்புமுகாமிலிருந்து வெளிவரும் ஒரு போராளியின் கதைதான் “சினம்கொள்” திரைப்படம். இயக்குனர் இந்த பெயரை எதற்காக வைத்துள்ளார் என்று படத்தினை பார்க்கும்போது புரிகின்றது. ஒவ்வொரு பாத்திரங்களையும் உருவாக்கி அவற்றை கனதியாக்கி கதைக்குள் உலாவ விட்டுள்ளார்.
மென்மையான இசை கதையை அள்ளி மனசுக்குள் இதமாக கொண்டுசெல்கின்றது. கதை நகரும் நேரத்தை உணரமுடியவில்லை. சலிப்பில்லாத நகர்வு. எரிச்சலூட்டாத இசை, தேவையற்ற உரையாடல்களின் தவிர்ப்பு என மிகவும் கவனமாக இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இயக்குனர் ரஞ்சித் ஜோசப் கனடாவை வாழ்விடமாக கொண்டாலும் சினிமாத்துறையில் போதிய அறிவும் அனுபவமும் இருப்பது புரிகின்றது. இந்திய தமிழ் திரைத்துறையில் உதவி இயக்குனராக பணியாற்றிய அனுபவம் இவரை சிறந்த இயக்குனராக அடையாளப்படுத்த உதவியிருக்கலாம் அத்துடன் இவர் இத்துறையிலேயே உயர்கல்வியையும் கற்றுள்ளார்.
நம்மவர் சினிமா எனும் உரிமையுடன் இலண்டன் திரையரங்கு சென்ற வேளை சுமார் முக்கால்வாசி இருக்கைகள் நிரம்பியிருந்தது. திரையிடப்பட்டு நான்காம் நாள் இத்தனை பேர் வந்திருப்பது ஆச்சரியப்பட வைத்தது. கிளிநொச்சி புகையிரத நிலையத்துடன் காட்சிகள் ஆரம்பமாக அட நம்ம ஊரு என நிமிர்ந்து இருந்தோம். காட்சிகள் மெல்ல மெல்ல விரிய மெல்லிய காற்றில் மிதக்கும் இளகிய இறகுகள் போல் நாமும் கூடவே பயணித்தோம். ஆர்ப்பாட்டமில்லாத இசை கதையின் வீச்சுடன் இயல்பாக பயணித்தது. தீபச்செல்வனின் பாடல் வரிகள் மிகவும் அருமை. அவ்வரிகளுக்கேற்ற நுணுக்கமான காட்சியமைப்புக்கள். முக்கியமாக தனிமரம் ஓன்று…மற்றும் வீரன் கண்கள் கலங்கிடுமோ…இவ் இரண்டு பாடல்களும் இப்போது யு டியூப் இல் அதிகம் பரவப்பட்டு வருகின்றது. அர்த்தம் பொதிந்த பாடல் அமைப்பு கண்கள் கலங்காது இருக்கமுடியவில்லை.
நாயகனாக நடித்த அரவிந்தன் மிகவும் அழுத்தமாகவும் கச்சிதமாக நடித்திருந்தார். அவரது உடல் நடித்ததைவிட அவரது கண்களே பெரிதும் நடித்திருந்தன. அமுதன் என்ற கதாபாத்திரம் மனதுக்குள் ஏற்படுத்திய அழுத்தம் நீங்க எத்தனை நாள் எடுக்குமோ? முக்கிய கதாபாத்திரங்களான மாலதி, யாழினி தமிழ்செல்வன் எல்லோரும் மிகவும் இயல்பாக நடித்துள்ளனர். திரையிலும் சரி அரங்கிலும் சரி நடித்தேயிராத உள்ளூர் மக்களைக்கூட இயக்குனர் நடிக்கவைத்துள்ளமை அவரது திறமை. இவர்களுடன் சிறு காட்சிகளில் பாடலாசிரியர் தீபச்செல்வன் மற்றும் இயக்குனர் ரஞ்சித் ஜோசப் நடித்திருப்பது மேலதிக செய்தி. மட்டுப்படுத்தப்பட்ட வசதிகளைக்கொண்டு அழகாக ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நாம் நடந்து திரிந்த இடங்களை திரையில் காணும்போது ஒரு மகிழ்வு வரத்தான் செய்கின்றது.
எல்லாம் முடிந்துபோய்விட்டது என்று மனம் சோர்ந்து இருப்பவர்களுக்கு இத்திரைப்படம் பல செய்திகளை சொல்ல முனைகின்றது. நாம் கல்வியால் உயர்ந்து பலமான சமூகமாக உருபெறவேண்டுமென்று அழுத்தமாக சொல்லும் அதேநேரம் எமக்கு ஏற்படும் துன்பத்தை நீக்க நாமே ஒன்றுபடவேண்டுமெனவும் கூறுகின்றது. முக்கியமாக அடுத்த சந்ததியிடம் எவற்றை கையளிக்கப்போறோம் என்பதை படத்தின் முடிவில் கச்சிதமாக இயக்குனர் சொல்லியிருக்கின்றார்.
களத்தில் மற்றும் புலத்தில் இருக்கும் அடுத்த தலைமுறை பிரதிகளாக அந்த காட்சியில் வந்து சேர்கின்றார்கள். ஆனாலும் முடிவின் அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளமுடியவில்லை. அத்தனை பார்வையாளர்களின் மனங்களும் கனத்துப்போய் இருக்க கைகள் எம்மை மீறி கரகோஷம் எழுப்பின. எல்லோருக்கும் தெரியும் திரைப்பட குழுவில் யாரும் அங்கே இல்லையென்று. அது எம்மவருக்கான பாராட்டுக்கள். அவை இயக்குனர் ரஞ்சித் ஜோசப் மற்றும் அவரது குழுவினருக்கும் போய்ச்சேரட்டும்.
ஈழ தமிழ் திரையுலகு விருதுகளை நோக்கி ஓடாமல் மக்களை நோக்கி பயணிக்கவேண்டும் அப்போதுதான் அது மக்கள் சினிமாவாக மாறும். இயக்குனர் ரஞ்சித் ஜோசப் “சினம்கொள்” திரைப்படம் மூலம் அதனை முயன்றிருக்கின்றார் – பாராட்டுக்கள்
சுப்ரம் சுரேஷ்
Art