ரஜினியின் வாழ்க்கை பயணம்

பள்ளி தந்த பக்தி

நடிகர் ரஜினிகாந்த் பால்ய பருவத்திலேயே தனது தாயை இழக்க நேரிட்டதால் தனது அண்ணன், அண்ணியின் பராமரிப்பில் வளர்ந்து வந்தார். இவரது தந்தை ராணோஜி ராவ், கர்நாடக காவல்துறையில் காவலராக பணி புரிந்தவர். ஸ்ரீராமகிருஷ்ணா மடத்துப் பள்ளியான ஆச்சார்யா பாட சாலையில் தனது எஸ்.எஸ்.எல்.சி பள்ளிப் படிப்பை படித்து முடித்தார். அதுவரை இவர் உணராத பக்தி அனுபவங்களை இந்தப் பள்ளி இவருக்கு உணர்த்தியது என்றே சொல்ல வேண்டும். மாலைநேர பிரார்த்தனை, தியானம், பிராணாயாமம் போன்ற மூச்சுப் பயிற்சி எல்லாம் இங்கே தான் இவர் முதலில் கற்றுக் கொண்டார்.

தொழிலாளி ரஜினி

இயற்கையிலேயே முரட்டுத்தனமும், பிடிவாத குணமும் உள்ள ரஜினிக்கு இந்தப் பள்ளி, அவர் வாழ்க்கையில் ஒரு நல்ல மாற்றத்தை தந்தது. ஆபிஸ் ப்யூனாக தனது முதல் பணியை ஆரம்பித்த ரஜினி, மூட்டை தூக்கும் தொழிலாளியாகவும், தச்சுப் பட்டறைத் தொழிலாளியாகவும் பணிபுரிந்திருக்கின்றார். பின் கர்நாடக போக்குவரத்துக் கழகத்தில் கண்டக்டர் பணி. சிவாஜி நகர் சாமராஜ்பேட்டையை இணைக்கும் 134 எண் கொண்ட பேருந்தில் கண்டக்டராக பணிபுரிந்தார். இவருக்குள்ளும் ஒரு நடிகர் இருக்கின்றார் என்பதை அறிந்து இவருக்கு அரிதாரம் பூசி நடிகராக்கியது இவருடைய நண்பர் ராஜ் பகதூர்.

சினிமாவிற்கு அடித்தளம் போட்ட நண்பர்

பொழுது போக்கிற்காக நாடகம் போடும் இவருக்கு அப்போதைய ரஜினியின் வேகமான நடை சுறுசுறுப்பு பிடித்துப் போக தனது “குருஷேத்திரம்” நாடகத்தில் துரியோதனன் வேடமேற்று நடிக்க வைத்தார். தொடர்ந்து சினிமாவிலும் ரஜினியை நடிக்க தூண்டியவரும் இவரே. அதன் விளைவு தமிழக அரசு திரைப்படக் கல்லூரிக்கு விண்ணப்பித்தார். நேர்காணலுக்கு ரஜினியை வரச்சொல்லி கடிதம் வர, அதுவரை பார்த்துக் கொண்டிருந்த கண்டக்டர் பணிக்கு நீண்ட விடுப்பு எடுத்துக் கொண்டு சென்னை புறப்பட்டார்.

பாலசந்தர் பார்வை

வசன உச்சரிப்பு, மேக்கப் டெஸ்ட் மற்றும் நடிப்பு என அனைத்து நேர்காணலிலும் வெற்றி பெற்று அங்கே நடிப்பை கற்கத் தொடங்கினார். ஏறக்குறைய இரண்டாண்டுகள் நடிப்பு பயிற்சி முடியும் தருணத்தில் தேர்வு அதிகாரிகளாக பிரபலமான இயக்குநர்கள் வருவது வழக்கம். அந்த வகையில் இயக்குநர் கே பாலசந்தர் வர, அவரோடு மாணவர்கள் தங்களது சந்தேகங்களை கேள்விகளாக கேட்டு உரையாடலாம். அப்போது சக மாணவனான ரஜினி, இயக்குநர் கே பாலசந்தரிடம் நடிப்பைத் தவிர ஒரு நடிகனிடம் நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்ப, அதற்கு கே.பாலசந்தர் ஒரு நடிகன் ஸ்டூடியோவிற்கு உள்ளே தான் நடிக்க வேண்டும் வெளியே அல்ல என்று பதில் அளித்து விட்டு வெளியே வந்து புறப்பட தயாரான போது ரஜினியை மீண்டும் அழைத்து உனக்கு தமிழ் தெரியுமா? என கேட்க, கன்னட வாடையோடு கொஞ்சம் கொஞ்சம் தெரியும் என ரஜினியிடமிருந்து பதில் வர, முதலில் தமிழில் நன்றாக பேசக் கற்றுக் கொள் பிறகு உன்னை நான் பயன்படுத்திக் கொள்கின்றேன் என கூறி சென்று விட்டார்.

“பைரவி வீடு இதுதானா?”

அவர் கூறிய படியே அழைப்பும் வந்து ரஜினி நடித்த முதல் படம் “அபூர்வ ராகங்கள்”. இத்திரைப்படத்தில் ரஜினி நடிகை ஸ்ரீவித்யாவின் கணவர் வேடத்தில் நடித்திருப்பார். திரைப்படத்திற்காக இவர் பேசிய முதல் வசனம் “பைரவி வீடு இதுதானா?”, “நான் பைரவியின் புருஷன்” என்று தனது முதல் காட்சியிலேயே தனது நண்பர் கமல்ஹாசனிடம் பேசி நடிக்கும் வாய்ப்பும் கிட்டியது ரஜினிக்கு. இத்திரைப்படத்திற்குப் பிறகுதான் சிவாஜிராவாக இருந்த இவர், ரஜினிகாந்த் என கே பாலசந்தரால் பெயர் மாற்றம் செய்யப்பட்டு தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன்பின் தொடர்ந்து கே.பாலசந்தரின் அடுத்தடுத்த படங்களான “மூன்றுமுடிச்சு”, ‛அவர்கள்’ போன்ற படங்களில் பிரதான வில்லன் வேடமேற்று நடித்து மிகப் பிரபலமானார்.

வில்லன் அவதாரம்

இதே காலக்கட்டத்தில் இயக்குநர் பாரதிராஜாவின் அறிமுகப் படமான “16 வயதினிலே” திரைப்படத்தில் ரஜினி ஏற்று நடித்த “பரட்டை” கதாபாத்திரமும் அதில் அவர் அடிக்கடி பேசும் “இது எப்படி இருக்கு” என்ற வசனமும் இன்றும் ரசிகர்களால் பெரிதும் விரும்பக்கூடியவை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இவ்வாறு தொடர்ந்து வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடித்து தமிழ் ரசிகர்கள் நெஞ்சங்களில் சிம்மாசனமிட்டு இருந்த ரஜினியால் குணச்சித்திர வேடத்திலும் ஜொலிக்க முடியும் என்று அவருக்குள் இருந்த அந்த குணச்சித்திர நடிகரை அடையாளம் காட்டியவர் எஸ்.பி.முத்துராமன். இவர் இயக்கத்தில் வெளிவந்த “புவனா ஒரு கேள்விக்குறி” திரைப்படத்தில் முழுக்க முழுக்க குணச்சித்திர வேடத்தில் நடித்து ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றார்.

Rajinikanth History
ஹீரோ டூ சூப்பர் ஸ்டார்

ரஜினி முழு ஹீரோவாக அவதாரம் எடுத்த முதல் திரைப்படம் “பைரவி”. தயாரிப்பாளர் கலைஞானத்தால் அவர் ஹீரோவாக்கப்பட்டார். படத்தின் இயக்குநர் எம் பாஸ்கர். இதுவரை எம் ஜி ஆரை வைத்து படமெடுக்காத தயாரிப்பாளர் கே.பாலாஜி, முக்தா சீனிவாசன் போன்றோரும் அதேபோல் சிவாஜியை வைத்து படமெடுக்காத தேவர் பிலிம்ஸ், சத்யா மூவீஸ் போன்றோரும் ரஜினியை வைத்து பல வெற்றிப் படங்களை கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

70களின் கடைசியிலும், 80களின் ஆரம்பத்திலும் பல வித்தியாசமான படங்களில், வித்தியாசமான கதாபாத்திரங்களில் அன்றைய ரசிகர்களுக்கு மிகவும் நெருக்கமான நடிகராக மாறினார். அந்த ஈர்ப்பு தான் அப்படியே மாறி மாறி அவரை சூப்பர் ஸ்டார் ஆக உருமாற்றியிருக்கிறது. வேறு யாரையும் அந்தப் படத்திற்கு நினைத்துக் கூடப் பார்க்கமுடியவில்லை என்பது தான் உண்மை.

ரஜினிகாந்த் திரைக்கதை எழுதி தயாரித்த திரைப்படம் “வள்ளி”. குறிப்பாக 1990களில் வெளிவந்த “தளபதி” “மன்னன்” “அண்ணாமலை” “உழைப்பாளி” “வீரா” “பாட்ஷா” “முத்து” “அருணாச்சலம்” மற்றும் “படையப்பா” என அனைத்து படங்களும் மிகப் பெரிய வெற்றி பெற்றவை. இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, பெங்காலி மற்றும் ஆங்கிலம் என அனைத்து மொழிகளிலும் ஏறக்குறைய 200 படங்கள் வரை நடித்திருக்கின்றார்.

காளி முதல் சிட்டி வரை

காலம் மாற மக்களின் ரசனை மாறும் என்பார்கள். ஆனால், ரஜினிகாந்தைப் பொறுத்தவரை அது பேட்ட வரையிலும் மாறாமலேயே தொடர்ந்து கொண்டிருக்கிறது, அதன் பின்னரும் தொடரத்தான் போகிறது. எந்தக் கதாபாத்திரத்திலும் தன்னை அப்படியே பொருத்திக் கொள்ளும் சாத்தியம் ரஜினியிடம் இருக்கிறது. அவரை ராகவேந்திரர் ஆகவும் ஏற்றுக் கொள்ள முடிகிறது, எந்திரன் ஆகவும் ஏற்றுக் கொள்ள முடிகிறது, கபாலி ஆகவும் ஏற்றுக் கொள்ள முடிகிறது.

சினிமாவுக்கு என்று இருந்த இலக்கணத்தை உடைத்து இன்றும் பலர் தங்களை ஹீரோவாக நினைத்துக் கொண்டு திரையுலகத்திற்குள் நுழையவும், அப்படி நுழைந்தவர்களும் தங்களை சூப்பர் ஸ்டார்கள் ஆன நினைத்துக் கொள்வதற்கும் அப்போதை பாதை போட்டுத் தந்தவர் ரஜினிகாந்த்.

இந்த 43 ஆண்டுகள் திரைப்பட வாழ்க்கையில் கே.பாலசந்தர் தொடங்கி இன்றைய இளம் இயக்குநர்களான பா.ரஞ்சித் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் வரை அனைத்து இயக்குநர்களிடமும் பணியாற்றியும், பணிபுரிந்து கொண்டும் இருக்கும் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டுமே.

நன்றி : cinema.dinamalar.com

ஆசிரியர்