தினமும் என்ன சமைப்பது என்பது பல இல்லத்தரசிகள் எதிர்கொள்ளும் பொதுவான சிக்கலாகவே இருக்கிறது. ஒரே மாதிரியான சாம்பார், புளிக்குழம்பு போன்ற உணவுகளை தொடர்ந்து செய்து சலித்துவிட்டதா? அப்படியானால், வீட்டிலேயே சற்று வித்தியாசமான மற்றும் சுவைமிக்க ரெசிபிகளை முயற்சி செய்து பார்க்கலாம்.
அந்த வகையில், பாரம்பரிய சுவையுடன் தனித்துவமான மணமும் ருசியும் கொண்ட ஐயங்கார் ஸ்டைல் மிளகு குழம்பு ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். பொதுவாக ஐயங்கார் சமையல் என்றாலே அதற்கு ஒரு தனி சுவை இருக்கும் என்று பலர் கூறுவார்கள். இந்த மிளகு குழம்பும் அதற்கு விதிவிலக்கல்ல.
காரம், புளிப்பு மற்றும் மிளகின் நறுமணம் கலந்து தயாரிக்கப்படும் இந்த குழம்பு, சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும். மேலும், இதை செய்வதும் மிகவும் எளிது. வழக்கமான குழம்பு வகைகளிலிருந்து மாற்றமாக ஏதாவது சமைக்க விரும்புபவர்களுக்கு இந்த ரெசிபி நிச்சயம் பிடிக்கும்.
இந்த ஐயங்கார் ஸ்டைல் மிளகு குழம்பை எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? கீழே அதன் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:
– புளி – பெரிய நெல்லிக்காய் அளவு
– உப்பு – தேவையான அளவு
– தண்ணீர் – தேவையான அளவு
– மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
– வெல்லம் – சிறிய துண்டு
வறுத்து அரைக்க:
– எண்ணெய் – 1 ஸ்பூன்
– மிளகு – ஒன்றரை ஸ்பூன்
– உளுத்தம்பருப்பு – 1 ஸ்பூன்
– வர மிளகாய் – 2
– சீரகம் – ½ ஸ்பூன்
– கறிவேப்பிலை – 1 கொத்து
சௌ சௌ வாங்குனா இந்த மாதிரி வித்தியாசமா சட்னி அரைச்சு பாருங்க – இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும்சௌ சௌ வாங்குனா இந்த மாதிரி வித்தியாசமா சட்னி அரைச்சு பாருங்க – இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும்
தாளிக்க:
– 1 ஸ்பூன் நல்லெண்ணெய்
– ½ ஸ்பூன் கடுகு
– ½ ஸ்பூன் உளுத்தம்பருப்பு
– ஒரு சிட்டிகை பெருங்காயம்
செய்முறை:
– புளியை வெதுவெதுப்பான நீரில் 10 நிமிடங்கள் ஊறவைத்து, அதன் சாற்றை எடுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
– ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் மிளகு, உளுந்தம்பருப்பு, வர மிளகாய், சீரகம் மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து வதக்கவும்.
– மிளகு வெடிக்கத் தொடங்கி, உளுத்தம்பருப்பு பொன்னிறமாக மாறும் வரை வறுக்கவும். அவை ஆறிய பிறகு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, மென்மையான விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
– அதே கடாயில் சிறிதளவு நல்லெண்ணெயை ஊற்றி கடுகு மற்றும் உளுத்தம்பருப்பு சேர்த்து தாளிக்கவும்.
– பின்னர் புளிக்கரைசல், உப்பு, மஞ்சள் தூள் மற்றும் சிறிது கறிவேப்பிலையைச் சேர்க்கவும். புளியின் பச்சை வாசனை நீங்கும் வரை அதை நன்கு கொதிக்கவிடவும்.
– குழம்பு கொதித்துக்கொண்டிருக்கும்போதே, ஒரு சிறிய துண்டு வெல்லத்தைச் சேர்க்கவும். பிறகு, அரைத்து வைத்துள்ள மிளகு விழுதைச் சேர்த்து, குழம்பு சற்று கெட்டியாகும் வரை நன்கு கொதிக்கவிடவும்.
– குழம்பு நன்கு கெட்டியானதும் அடுப்பை அணைத்தால் சுவையான ஐயங்கார் ஸ்டைல் மிளகு குழம்பு ரெடி. சாதத்தில் சிறிதளவு நெய் சேர்த்து இந்த குழம்பு ஊற்றி சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும்.