இந்தியா – பெங்களூர், சின்னசாமி மைதானத்திற்கு வெளியே ஆர்.சி.பி, ஐ.பி.எல். வெற்றி கொண்டாட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
50க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பெங்களூர் அணியின் முதல் வெற்றியும் கொண்டாட்டமும்
18ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் இரவு நிறைவுபெற்றது. இதன் இறுதிப்போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை அகமதாபாத்தில் எதிர்கொண்டது.
இதில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி வெற்றி பெற்று, கோப்பையை வென்றது.
ஐ.பி.எல். போட்டிகள் தொடங்கப்பட்ட பின்னர் பெங்களூர் அணி வெற்றி பெறுவது இதுவே முதல் முறை. இதனால் அந்த அணி ரசிகர்கள் மட்டுமின்றி, கர்நாடக மக்களும் அந்த வெற்றியை உற்சாகமாக கொண்டாடினர்.
இதையடுத்து பெங்களூர் அணி நிர்வாகம் சார்பில் பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதனால் வீரர்களை காணும் ஆர்வத்தில் சிறுவர், சிறுமிகள், இளம்பெண்கள் என குடும்பத்தினருடன் பல்லாயிரக்கணக்கானோர் குவிந்தனர். இதனால் அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
தமிழகத்தை சேர்ந்த பெண் மரணம்
இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 11 பேரில் பெண்ணொருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. திருப்பூர் மாவட்டம் – உடுமலையைச் சேர்ந்த காமாட்சி தேவி (வயது 28) என்பவர் உயிரிழந்துள்ளார்.
அமேசான் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர், வீரர்களை காணும் ஆர்வத்தில் சென்று நெரிசலில் சிக்கியுள்ளார்.
இந்தியாவையே உலுக்கியுள்ள இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
காயமுற்றோர் விரைவில் குணமடைய வேண்டுகிறேன் : பிரதமர் மோடி
சின்னசுவாமி கிரிக்கெட் அரங்கத்திற்கு வெளியே நேர்ந்த கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்து சம்பவம் வருத்தமளிப்பதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
அது குறித்துப் பிரதமர் அலுவலகம் ‘X’ தளத்தில் பதிவிட்டிருந்தது.
“பெங்களூர் நகரில் நேர்ந்த சம்பவம் வருத்தமளிக்கிறது. அன்புக்குரியவர்களை இழந்தோரின் குடும்பத்தினர் நினைவில் உள்ளனர். சம்பவத்தில் காயமுற்றோர் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்,” என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.
விராட் கோலி வருத்தம்
இந்த சம்பவம் தொடர்பில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி (Virat Kohli) தமது சமூக ஊடகப் பக்கத்தில் பகிர்ந்துள்ளதாவது, சம்பவத்தை எண்ணி அணி வருந்துவதாகவும் அதை விவரிக்க வார்த்தைகள் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அனைவரின் பாதுகாப்புக்கும் நலனுக்கும் எப்போதும் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ள அவர், பாதுகாப்புடன் இருக்கும்படி ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டார்.
எடப்பாடி பழனிசாமி இரங்கல்
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
பெங்களூர் கூட்டநெரிசலில் சிக்கி 5 தமிழர்கள் உள்ளிட்ட 11 பேர் உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.
மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் பூரண உடல்நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் எனக் கூறியுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் இரங்கல்
பெங்களூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பெங்களூரில் நடந்த துயரச் சம்பவம் மிகவும் வேதனையளிக்கிறது. இந்தத் துயரமான தருணத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுகிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
![]()