செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் எனக்குக் கிடச்ச செல்லமே | கவிஞர் மருதப்பு தயாகுணன் (கிளி)

எனக்குக் கிடச்ச செல்லமே | கவிஞர் மருதப்பு தயாகுணன் (கிளி)

1 minutes read

பிரண்டைக் காட்டுக் கோயில் தாண்டி
உருண்டு திரிஞ்ச புலவன் வெளிக்க
பிறந்து வந்து நிண்டவளே
சின்னம்மா பேத்தி – நீ
மிரண்டு என்னப் பாக்கிறியே
என்னம்மா ஆச்சு…

உப்புக்காத்து அடிச்சு அரிச்சு
மக்கிப் போன சுவத்து வீட்டில்
சொக்கி வயித்தில் வந்தவளே
சின்னம்மா பேத்தி – நீயும்
விக்கிப் போயிப் பாக்கிறியே
என்னம்மா ஆச்சு…

அம்மாளாச்சிக்கு நேத்தி வச்சு
அத்தனை சாமிக்கும் விளக்கு வச்சு
சும்மா திரிஞ்ச எனக்குக் கிடைச்ச
சொக்கத் தங்கமே – உனக்கு
அம்மா பெயர வச்சுப் பாத்தன்
அப்பன் முன்னமே…

குரக்கனோட மா அரைச்சுக்
குழியப்பம் சுட்டு வச்சுக்
கருக்கலோட தீத்தினியே
சின்னம்மா பேத்தி – உன்னக்
கண்ட பிறகு தானே எனக்கு
வாழ்வொண்டு ஆச்சு…

அப்பனுக்கு நெல் அரிஞ்சு
ஆத்தாளுக்கு மா இடிச்சு
வெக்கத்தோட சிரிக்கிறியே
சின்னம்மா பேத்தி – நீ
வீட்ட வந்த பிறகுதானே
லட்சுமி ஆச்சு…

பட்டணத்தில பட்டு வாங்கிப்
பாவாடை சட்ட தைச்சு
எட்டடுக்கில மடிச்சு வச்சா
சின்னம்மா பேத்தி – எனக்கு
எப்பவுமே நீதானடி
தில்லவெளி ஆச்சி…

சாக்கு நிறைய மிளகா கட்டிச்
சங்கத்து லோஞ்சில பாலம் தாண்டி
வேர்த்து எரிய வித்து நிண்டன்
சின்னம்மா பேத்தி – உனக்கு
வேண்டி வந்த மூக்குத்தியும்
அடைவில போச்சு…

அஞ்சு பேத்திக் கொருத்தி நீதான்
பருத்தி முல்லையே – என்ர
அப்பன் முகத்தில் பிறந்தவளே
கறுப்புத் தங்கமே…

கொஞ்சி உன்ன அணைக்கயில
வம்சம் தெரியுதே – உன்னக்
கும்பிட்டு நிக்கையில
வாழ்க்கை புரியுதே…!!!

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.