
நீ தான் என்று என்னால்
உன்னை அடையாளம்
காட்ட இயலும்
ஆயினும் அதற்கான
மறு பிறவியை
இறைவன் தந்தாக வேண்டும்
என் பள்ளி ஆடையும்
என் புத்தகமும் ஓரமாய் கிடக்கிறது
நான் வளர்ந்த வீடும்
நடந்த பாதையும்
துள்ளி மகிழ்ந்த மைதானமும்
மயானமாய்க் கிடக்கிறது
காரணம் நீ
நீ மட்டும் தான்!!!!!
வெந்த நீரிலே அமிழ்த்தி
இறகுகள் பிய்த்து எறிந்து
உடலை இரு கூறாக்கி
சதைகளை துண்டாக்க
இரத்தங்களை கழிவி ஊற்றும்
பிறொயிலர் கோழியைப் போல்
நான் என்று எண்ணி விட்டாய்
வீதியிலே விளையாட்டாய் போன என்னை
சத்தமற கைபொத்தி காட்டிலே இழுத்துப் போனாய்
அம்மா என்றேன்
அப்பா என்றேன்
அல்லாஹ்வும் என்றழைத்தேன்
பீதியால் என்னை நீ நரகத்தில்
அனுப்ப முடிவாய் இருந்தாய்
விளை நிலம் நுகர்ந்த பசளையாக
மாடுகளும் இயந்திரங்களும் கிளறிய
சேற்றுத் தரையிலே
என் உடலை உன் இரு காலினால்
அழுத்தி புதைத்த வேளையில்
நான் உணர்ந்த வலியினையும் விடுபட்ட
என் இறுதி மூச்சினது ரணத்தினையும்
சொல்வதற்கு ஒரு கணம் இடம் தரவில்லை நீ
பல நாள் என் வீட்டில் உண்டு விட்டுப் போனாய்
சில நாள் மாமாவின் தட்டென்று அலசிக் கொள்வேன்
திண்ட என் வீட்டில்
நஞ்சதை விதைத்து விட்டதை
இப்போதே உணர்கிறேன்
என் அன்னையை பார்
தந்தையையும் பார்
நான் இல்லை என்றெண்ணி ஏங்கிக் கொண்டிருக்கிறார்
கண்களில் ஆழத்து நீர் தெரிகிறது
அல்லல் பட்டு நான் இறந்ததையும்
இங்கெனை புதைத்தாய் என்பதையும்
காணாதெனை தேடி அலைபவர்க்கு
சொல்லி வரப் போகிறேன்
மோப்ப நாயும் பாதுகாவலரும்
பல நாள் திரிகிறார்கள் இன்று தான் அவர்களுக்கு
என் சேற்று உடல் கிடைத்திருக்கின்றது
சிலர் என் உடலைப் பார்க்க
சிலர் என்னைச் செய்தி ஆக்க
பலர் என் நிலை அறிந்து புறம் பேச
எத்தனை முகங்கள்
என்னோடு போதும் இந்த விதி
என் போன்ற வேறு யார்க்கும்
வேண்டவே வேண்டாம்
முல்லையின் ஹர்வி