சர்வதேச வரலாற்றில் ஈழத்தமிழரின் தனித்துவமான இலக்கியமாக உலகளாவிய தமிழ் இலக்கியப் படைப்புக்களில், நின்று நிலைத்திருக்கப்போகும் வலிமைபெற்ற போரியல் இலக்கியத்தின் நீட்சி இன்னமும் தொடர்கிறது.
ஈழத்தின் போரியல் வரலாற்றுக் காலகட்டத்தில் வெளியான அனைத்து இலக்கியப் படைப்புக்களும் போராட்டம் சார்ந்தவையல்ல. போராட்டத்தின் வலிகள், உடன்பிறப்புக்களின் இழப்புக்கள், கொடூர வன்மங்கள், உடமைகளின் அழிப்புக்கள், இடப்பெயர்வின் அவலங்கள், புலம்பெயர்ந்து சென்ற உறவுகளின் பிரிவுத் துயர், போராளிகளின் வீரதீரங்கள், மானிடத்தையும் பெண்மையையும் இழிவுபடுத்தும் சித்திரவதை என ஒரு போராட்ட வாழ்வின் பல்வேறு பக்கங்களையும் போரியல் இலக்கியங்கள் தொட்டுச் செல்கின்றன.
1956 சிங்களம் அரசு மொழி :
பத்தொன்பதாம் நூற்றாண்டுக்கு பிறகு இலங்கை சுதந்திரத்தின் பின்னர், சின்னஞ்சிறு மாங்காய்த் தீவில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. இந்த கால கட்டத்தின் தமிழர்களின் அடையாள அரசியல் என்பது இலக்கியம், கவிதைகளின் மூலம் தெறித்து வந்தது. மேலும் முற்போக்கு சார்ந்த இலக்கியங்கள் ஏராளமாக வரத்தொடங்கின. இந்த இலக்கியங்கள் சமுதாய மாற்றத்தை உள்ளடக்கியும் இருந்தன. இந்த காலகட்டத்தில் வந்த இலக்கிய படைப்புகள் இலங்கை தமிழ்ச் சூழலில் பெரிய வெளிச்சத்தை மக்களுக்கு ஏற்படுத்தின என்றும் கூறலாம்.
குறிப்பாக 1958 ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழ் இலக்கிய போக்குகளில் பல மாற்றம் அடைந்திருக்கின்றன. தமிழரின் பிரதிநிதிகளாகப் பாராளுமன்றம் சென்ற தமிழ் அரசியல்வாதிகள் சாத்விகப் போராட்டங்களின் வழியாக அடக்குமுறைகளுக்குத் தீர்வுகாண முயன்று தோல்வி கண்டமை வரலாறாகி விட்டது. இலங்கையில் தமிழரின் விடுதலைப் போராட்டம் சாத்வீகப் போராட்ட நிலையிலிருந்து ஆயுதப் போராட்டமுறைக்குப் பரிணாம வளர்ச்சி பெற்ற எழுபதுகளின் இறுதிப்பகுதிகளிலேயே போரியல் சார்ந்த நூல்கள் ஆங்காங்கே வெளிவர ஆரம்பித்து விட்டன.
1956 இல் சிங்களம் மட்டுமே அரசு மொழி என்ற சட்டத்தை அரசு கொண்டுவந்தபோது அரசியல், மொழி சார்ந்து தமிழர்கள் தமிழ் மொழியை பாதுக்காக்க எதிர்வினையாற்றும் நிலையும் ஏற்பட்டது. அதனாலேயே போர்க்கால இலக்கியத்தில் அரசியல் மிக முக்கியமான விடயமாக எழுந்தது. இவ் அரசியலை அடியொற்றிதான் ஈழத்து தமிழ் இலக்கியங்கள் பல்வேறு தளங்களில் நிகழ்ந்திருக்கிறது.
யாழ் தமிழாராய்ச்சி மாநாடு 1974:
1974ம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது தமிழாராய்ச்சி மாநாட்டு இறுதி நாளில் பதினொரு அப்பாவித் தமிழ் மக்களின் உயிர்ப்பலியுடன் இலங்கை அரசு தமிழ் மக்களுக்கெதிராக விடுத்த வெளிப்படையான அச்சுறுத்தலானது, கல்வித்துறையின் திட்டமிட்ட தரப்படுத்தல்களால் எதிர்காலத்தையே இழந்துநின்ற தமிழ் இளைஞர்களை ஆயுதப் போராட்டத்தின்பால் தள்ளியது.
இலங்கை அரசுகள் கொண்டு வரும் கொடூர சட்டங்கள் மூலம் தமிழ் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும்போது இலக்கியத்தில் மாற்றங்கள் ஏற்பட்டது. 1980 ஆண்டுக்கு பிறகு போர் சூழல் குறித்த இலக்கியங்கள் ஏராளமாக வந்தன. போர் அவலம் என்பது 30 ஆண்டுகாலமாக தவிர்க்க முடியாததாக இருந்தது. இந்த கால கட்டத்தில் ஏராளமான ஆண், பெண் படைப்பாளர்கள் உருவாகி போர் சூழல், தமிழ் மக்களின் துயரம் குறித்த படைப்புகளை உருவாக்கினர். போரில் ஈடுபட்டவர்களும், போரை வெளியில் நின்று பார்த்தவர்களும் ஏராளமான புதிய படைப்புகளை உருவாக்கினர். போருக்குப் பிறகு இப்போது ஏராளமான புலம் பெயர் இலக்கியங்கள் உருவாகின.
திட்டமிட்ட இனப் படுகொலைகள்:
தொடர்ந்து சிங்கள அரசியல்வாதிகளால் 1977, 1983 ஆண்டுகளில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இனக்கலவர வன்முறைகளும் தமிழ் மக்களுக்கான சுயநிர்ணய உரிமைக்கான அவசியத்தையும் தனி நாடு ஒன்றிற்கான தேவையையும் வலியுறுத்தின. இந்த காலகட்ட போராட்ட வாழ்வே ஈழ இலக்கியப் படைப்புகளில் ஏற்பட்ட மாற்றம் என்றும் கருத இடமுண்டு.
1981இல் யாழ்ப்பாண மண்ணில் யாழ்ப்பாணப் பொது நூலகம், ஈழநாடு பத்திரிகை அலுவலகம், பூபாலசிங்கம் புத்தகசாலை ஆகிய தமிழரின் அறிவியல், ஊடகவியல் நிறுவனங்களை சிங்கள அரசின் கூலிப்படைகளால் பகிரங்கமாகத் தீயிட்டுக் கொழுத்தப்பட்ட சம்பவமானது, அதுவரை காலமும் கொரில்லாப் போராட்டமுறைகளை இளைஞர்கள் மட்டுமே பங்கேற்றி வந்த சூழல் மாறி, அறிவுசார்
புத்திஜீவிகளையும் விடுதலைப் போராட்டத்தின்பால் ஈர்த்தது.
1981யாழ் நூலகம் எரிப்பு :
ஈழ ஈழவிடுதலைப் போராட்டத்துக்கு முன்னோடியாக பல நூல்கள் ஆரம்பகாலத்தில் வெளிவந்திருந்தன. பண்டிதர் க.பொ.இரத்தினம், கவிஞர் காசி ஆனந்தன் போன்றேரின் விடுதலை உணர்ச்சிமிக்க படைப்புகளை சுதந்திரன், தீப்பொறி போன்ற அரசியல் ஏடுகள் எழுபதுகளில் தாங்கி வந்தன.
சிறிலங்கா அரசின் பாரிய வன்முறை கெடுபிடிகளுக்கு மத்தியில் ஈழ விடுதலைப் போராட்டம் பற்றிய பிரசுரங்களை தாயக மண்ணில் வெளிப்படையாக அச்சிட முடியாத நிலை அக்காலத்தில் காணப்பட்டது.
அத்துடன் ஆரம்பகால விடுதலைப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பல்வேறு போராட்ட அமைப்புக்களும் தமது தளங்களை தமிழகத்திலும் கொண்டியங்கியதால் அக்காலகட்ட வெளியீடுகள் அதிகளவில் தமிழகத்தில் அச்சிடப்பெற்று, தாயகத்துக்குக் கொண்டுவரப்பட்டு விநியோகிக்கப்பட்டன.
அதேவேளை இனவிடுதலைப் போராட்டத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்த துணிச்சலுடன் முன்வந்த பல ஈழத்துப் படைப்பாளிகளும் அந்நாட்களில் புனைபெயரினுள் மறைந்திருந்தே இத்தகைய இலக்கியங்களைப் படைக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருந்தது என்பதும் உண்மையே.
மரணத்துள் வாழ்வோம் :
1985இல் ‘மரணத்துள் வாழ்வோம்’ என்ற பெயரில் உ.சேரன், அ.யேசுராசா, இ.பத்மநாப ஐயர், மயிலங்கூடலூர் பி.நடராஜன் ஆகிய நால்வரும் தொகுத்து ஒரு போரியல் கவிதைத் தொகுதியை வெளியிட்டிருந்தார்கள். முதலில் யாழ்ப்பாணம் தமிழியல் வெளியீடாகவும், பின்னர் கோவை விடியல் பதிப்பகத்தின் வாயிலாக உப்பிலிபாளையத்திலிருந்து 2வது பதிப்பாக டிசம்பர் 1996 இலும் இந்த நூல் 170 பக்கங்களில் வெளிவந்திருந்தது.
ஈழத்தின் 31 இளம் கவிஞர்களின் 82 கவிதைகளின் தொகுப்பு இதுவாகும். சமகால ஈழத்து இனப் பிரச்சினையைப் பகைப்புலமாகக் கொண்ட இக் கவிதைத் தொகுப்பில் மூன்று பெண் கவிஞர்களின் பெண்நிலைப்பட்ட அநுபவங்கள் உயிர்த்துடிப்புடன் வந்துள்ளமையும் சிறப்பம்சமாகும்.
இந்த போராட்ட இலக்கியங்கள் வாழ்விடத்தை தொலைத்த அவலத்தையும், மக்கள் படும் துயரத்தையும் முன்னிறுத்தி இந்தப் படைப்புகள் உருவாகி வெளிவந்தன.
பூவரசம் வேலியும் புலுனிக் குஞ்சுகளும் என்ற புதுவை இரத்தினதுரையின் கவிதைத் தொகுப்பு யாழ்ப்பாணம் நங்கூரம் வெளியீடாக, பங்குனி 2005இல் வெளியானது. இத்தொகுப்பில், வெளிச்சம் இதழில் கார்த்திகை 1993இல் வெளிவந்த “தூரப் பறந்துவிட்ட துணிவுப் பறவைகளே” என்ற கவிதையில் தொடங்கி, வெளிச்சம் சஞ்சிகையின் மாசி 2005இல் வெளியான “இருந்ததும் இல்லையென்றானதும்” என்ற கவிதை வரை 12 ஆண்டுகளில் கவிஞர் புதுவை இயற்றிய மொத்தம் 155 கவிதைகள் இடம் பிடித்திருக்கின்றன.
ஈழத்தின் போர்க்கால கவிதைத்துறையில் நினைவுகொள்ளத்தக்க மற்றொரு கவிஞர் மறைந்த கி.பி.அரவிந்தன் ஆவார். பிரான்ஸ் தேசத்தில் புலம் பெயர்ந்து, வாழ்ந்து காலமான இவர் ஈழப் போராட்டத்தில் விடுதலைப் போராளியாக இருந்தவர்.
இவரது படைப்புக்களில் ஈழவிடுதலைப் போராட்டமும், ஈழத்தமிழரின் புகலிட வாழ்வியலும் முனைப்புடன் காணப்படுகின்றன. மூன்று படைப்புக்களை தமிழகத்திலிருந்து வெளியீடு செய்தவர் இவர். இனி ஒரு வைகறை அவர்்எழுதிய முதலாவது கவிதைத் தொகுப்பாகும்.
1992 இல் வெளியான முகம்கொள் கி.பி.அரவிந்தனின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு ஆகும். கனவின் மீதி. இவரது மூன்றாவது கவிதைத் தொகுதியாகும். கி.பி.அரவிந்தனின் கவிதைகள் வரலாற்று அனுபவங்களில் தோய்ந்து எழுந்தவை மட்டுமல்ல, அவ்வனுபவங்கள் அலாதியான ஒரு கற்பனைத் திறத்தால் பளிங்கு போன்றதொரு தெளிவான மொழியால் சீரமைக்கப்பட்டு பண்படுத்தப்பட்டு கவிதைகளாக வார்த்தெடுக்கப் பட்டுள்ளன எனக்கூறலாம்.
புதுவை இரத்தினதுரை கவியுகம்:
கவிஞர் புதுவை இரத்தினதுரை ‘வியாசன்’ என்ற புனைபெயரில் எழுதிய கவிதைகளின் தொகுப்பு “வியாசனின் உலைக்களம்” எனும் நூலாகும். போரியலையும் அது சார்ந்திருக்கும் அரசியலின் ஆழப்பாடுகளையும் சுழியோடி, நுகர்ந்து, மென்று விழுங்கி, அதை அக்கு வேறு ஆணி வேறாகத் தனது பேனாமுனையால் உலைக்களத்தின் மூலம் வெளிக்கொண்டு வந்துள்ளார்.
‘செம்மணி’என்ற தலைப்பில் வெளியான நூலில் 24 கவிஞர்களின் கவிதைகள் வெளிச்சம் வெளியீடாக 1998இல்யாழ்ப்பாணத்தில் இராணுவ முற்றுகையின் போது கடத்திச் செல்லப்பட்டு காணாமற் போனோராக்கப்பட்டு வதையின் பின் புதைக்கப்பட்ட எம் உறவுகளுக்கான கவிதைகள் இவையாகும்.
சிங்கள இராணுவம் அப்பாவி மக்களை யாருங்காணாமற் பிடித்துச்சென்று படுகொலைசெய்து செம்மணியிற் புதைத்த வஞ்சகச்செயலை அம்பலப்படுத்தும் பதிவுகளாக இவை அமைகின்றன. செம்மணிப் புதைகுழிகள் எம்மக்களிடையே ஏற்படுத்திய கொதிப்புணர்வின் அடையாளமாகவே இக்கவிதைகள் அமைகின்றன.

தீபச்செல்வன் போர் எதிர்ப்பு இலக்கியம்:
முள்ளி வாய்க்கால் துயரத்தின் பின், ஈழத்துக் கவிஞரும், எழுத்தாளரும், சுயாதீன ஊடகவியலாளருமான தீபச்செல்வன் போர் முடிவின் பின்னரான முக்கியமான கவிதைகளை தொடர்ந்தும் எழுதிவருகிறார். ஈழநிலத்தின் வாழ்வை தன் கவிதைகளில் பதிவுசெய்யும் தீபச்செல்வன்மிக இளம் வயதிலேயே பரவலாக அறியப்பட்ட இவர் சமகாலத்தின் மிக வலிமையுடைய குரலாக கருதப்படுகிறார்.
2011 – இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நெருக்கடிச் சூழலில் செய்தித் தேடலுக்கான சிறந்த ஊடகவிலாயளருக்கான பேராசிரியர் கைலாசபதி விருதையும், 2013இல் கணையாழி விருதையும் 2014 – இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் மற்றும் இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கம் இணைந்து வழங்கும் நெருக்கடிச் சூழலில் இயங்கியமைக்கான 2014 ஆம் ஆண்டின் சிறந்த ஊடகவியலாளர் விருதையும் 2019இல் இயல் விருதையும் பெற்ற தீபச்செல்வன் சாட்சிகளற்ற போரின் மனச்சாட்சிகளாக தீபச்செல்வனின் கவிதைகள் பரணமிக்கின்றன.
-நவீனன்