தமிழகத்தின் இளம் நாடகவியலாளரும் பாண்டிச்சேரிப் பல்கலைக்கழகத்தின் வருகைப் பேராசிரியருமான கலாநிதி ஞா. கோபி அவர்களின் சிறப்புரை இன்று (17.05.2023) பிற்பகல் இரண்டு மணிக்குப் பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் இடம்பெற்றது.
துறைத் தலைவர் பேராசிரியர் ஸ்ரீ.பிரசாந்தன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், ‘தமிழ் அரங்கின் சமகாலப் போக்குகள்’ எனும் பொருண்மையில் கலாநிதி ஞா. கோபி அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்.
சிறப்பு உரையின் பின்னர் நீண்ட நேர உரையாடல் இடம்பெற்றது. உரையாடல் நிகழ்வில் மாணவர்கள் ஆர்வத்தோடு கலந்துகொண்டு பல வினாக்களையும் முன்வைத்தனர். அவற்றுக்கு உரிய முறையில் சிறப்புரையாளர் பதிலளித்தார். கலந்துரையாடலின்போது கலாநிதி ஞா.கோபி அவர்கள் பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை தமிழ் நாடக வளர்ச்சிக்கு ஆற்றிய காத்திரமான பணிகளைப் பாராட்டியும் அப்பணிகள் ஈழத்தில் மட்டும் அல்லாது தமிழக அரங்குக்கும் வழிகாட்டும் முக்கியமான அரங்கச் செயற்பாடுகள் என்றும் தெரிவித்தார்.
நிகழ்வின் இறுதியில் பேராதனைத் தமிழ்த்துறையின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெளியீடான “ஈழத்தில் தமிழ் நாடக இலக்கியம்” என்ற ஆய்வுத்தொகுதியை உரையாளருக்குப் பரிசாகத் துறைத்தலைவர் வழங்கினார்.
சபை நிறைந்த இந்த நிகழ்வில் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், நாடகக் கலைஞர்கள் கலந்து பயன் பெற்றார்கள்.
நிகழ்வின் நிழற்படப் பதிவுகள் இவை.