1980களில் பாடசாலையாக இருந்த ஒரு கட்டிடம் பல் கலைக்கழகமாக மாறத் தொடங்கியது
பாடசாலை பரமேஸ்வரா கல்லூரி .
பல்கலைக்கழகம் யாழ்ப் பாண பல்கலைக்கழகம்.
பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப்பட்ட பீடங்களில் ஒன்று கலைப்பீடம்.
அதன் கீழ்ச் சில துறைகள் ஆரம்பிக்கப்பட்டன.
கலைப் பீடத்தின் ஆரம்ப வளர்ச்சியிலும் அதற்கான அடித்தளம் இட்டதிலும் பலர் முன்னின்ற போதிலும் இருவர் மிக முக்கிய மானவர்கள்.
ஒருவர் பேராசிரியர் கைலாசபதி.
இன்னோருவர் பேராசிரியர் இந்திரபாலா.
இரட்டையர்களாக இருவரும் பணிபுரிந்தனர்.
அன்று ஏற்பட்ட சவால்களையும் எதிர்ப்புகளையும் எதிர்கொண்டு கலைப்பீடத்தைக் கட்டி எழுப்பியதில் இருவருக்கும் முக்கிய பங்கு உண்டு.
கைலாசபதி கலைப்பீடம் கட்டப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் பேராசிரியர் இந்திரபாலாவுடன் சென்று அடிக்கடி அதனை பார்த்தது எனக்கு ஞாபகம் வருகிறது.
அதை அவர் கனவு கண்டார்.
அதை அமைப்பது பற்றி அவர் எம்மோடு பேசி மகிழ்ந்தார்.
கைலாசபதி இறந்ததும் அந்தக் கட்டிடத்திற்கு கைலாசபதி கலையரங்கு எனப் பெயரிடப்பட்டது.
கலைப் பீடத்தின் சார்பில் அதனை முன்மொழிந்து பேரவை அனுமதியும் பெற்றார் பேராசிரியர் இந்திரபாலா.
வரலாற்று துறை ஆய்வாளரான அவர் கண்ட கனவுகளுள் ஒன்று தொல்லியல் துறை ஆகும்.
அவரது விருப்புத்துறையும் தொல்லியல் ஆய்வாகும்.
முற் கற்பிதங்கள் இன்றி தொல்லியல் சான்றிதழ் தேடுவதும்.
வரலாற்றுக்கு அவற்றைப் பயன்படுத்துவதும்.
அவரது பணியாக இருந்தது.
அவரது நிதானமான தொல்லியல் ஆய்வுப் பணியே அவரது ஆளுமை ஆகும்.
கைலாசபதி இறந்த பின்னரே கைலாசபதியை நினைவு கூரும் கைலாசபதி கலையரங்கு உருவானது.
ஆனால் இந்திரபாலா உயிரோடு இருக்கும்போதே அவரை நினைவு கூரும் தொல்லியல் அரும்பொருள் காட்சியகம் உருவாகி யுள்ளது.
இந்த உருவாக்கலில் பலரின் பங்கு இருப்பினும் இதனை முன்னெடுத்தவர் பேராசிரியர் புஷ்பரட்டினம் ஆவர்.
இந்திர பாலாவின் மாணாக்கர் அவர்.
இத்தொல்லியல் பொருட்காட்சியகத் திறப்பு விழா வைபவம் 24.05.2023 அன்று கைலாசபதி கலை யரங்கில் நடைபெற்றது.
யாழ்ப்பாணத்தில் நின்ற நான் அதிலேயே கலந்து கொள்ள விரும்பி புஷ்பரத்னத்தையும் பதிவாளர் காண்டீபனையும் தொடர்பு கொண்டேன்.
மகிழ்ச்சியோடு என்னை வரவேற்றதுடன் அதற்கான பிரயாண ஒழுங்குகளையும் அவர்கள் செய்திருந்தார்கள்.
அவர்களுக்கு எனது நன்றிகள்.
1960 களில் பேராசிரியர் கைலாசபதியிடம் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நான் தமிழ் பயின்றேன்.
அதே நேரம் அங்கு பேராசி ரியர் இந்திர பாலாவிடம் வரலாறு பயின்றேன்.
இருவரும் எனது விருப்புக்குரிய ஆசிரியர்கள்.
ஒருவர் தமிழ் வழிகாட்டி.
இன்னொருவர் வரலாற்று வழிகாட்டி.
இருவடனும் நெருக்கமாக இணைந்து பணி செய்யும் சந்தர்ப்பம். 1980 களில் யாழ் பல்கலைக்கழகத்தில் கிடைத்தமை ஒரு பேறு.
அதேபோல கைலாசபதி கலையரங்க திறப்ப விழாவிலும் இந்திரபாலா தொல்பொருள் காட்சியக திறப்பு விழாவிலும் கலந்து கொள்ள கிடைத்தமையும் இன்னொரு பேறே.
விழாவுக்கு சென்றபோது பல பழைய நண்பர்களைக் காணும் வாய்ப்புக் கிடைத்தது.
முன்னாள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத் துணைவேந்தரான பேராசிரியர் பாலசுந்தரம் பிள்ளையும்.
முன்னாள் வரலாற்றுத் துறைப் பேராசிரியரும் தொல்லியல் நாட்டம் உடையவருமான பேராசிரியர் சிற்றம்பலமும்.
நானும் ஒன்றாக இருந்து பேராதனை பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் வித்தியானந்தனிடம் 1960 தமிழ் பயின்ற காலம் ஞாபகம் வருகிறது.
நண்பன் பேராசிரியர் பாலசுந்தரம் பிள்ளையை அங்கு கண்டபோதும் இதைப் பேசி மகிழ்ந்தோம்.
பேராசிரியர் சிற்றம் பலத்தையும் எதிர்பார்த்து இருந்தேன்.
அவரைக் காண முடியவில்லை.
ஓய்வு பெற்ற பேராசிரியர்களாக சத்தியசீலன். சிவநாதன்.
சிவலிங்கராஜா போன்றோரைக் கண்டு பேசி மகிழ்ந்தேன்.
பழையதைப் பேசுவதில் முதியவர்களுக்கு. ஒரு மகிழ்ச்சி தானே ?.
. மிகப் பலர் என்னைப் போல மூப்படைந்து உடல் தளர்ந்து இருந்தனர்.
ஆனால் உறுதியோடு இருந்தனர்.
துணைவேந்தர் பேராசிரியர் ஸ்ரீ சற்குண ராஜா அவர்களும்.
புஷ்பரத்தினம் அவர்களும் நீண்ட இரு உரைகள் நிகழ்த்தினர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறையின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் புஷ்பரத்தினத்தின் உரை உள்ளடக்கமாக கொள்ள அதன் இன்றைய அவசியத்தையும். இன்றைய காலப் பின்னணியிலும் இன்றைய அறிவுலகப் பின்னணியிலும் வளர்க்க வேண்டும் என்பதை துணை வேந்தரின் உரை உள்ளடக்கமாகக் கொண்டிருந்தது.
தொல்லியல் காட்சியகத்தை துணைவேந்தர் திறந்து வைத்தார்.
காட்சியகத்தோடு ஆய்வுக்கூடமும் அங்கிருந்தமை குறிப்பிடத்தக்க ஒன்று.
பேராசிரியர் இந்திரபாலா காட்டிய திசையில் யாழ் பல்கலைக் கழகத் தொல்லியல் துறை பணி ஆற்றுவதாக.
-பேராசிரியர் கலாநிதி மௌனகுரு