1
நடை மெலிந்தாலும் – ஆறு
கடலை நோக்கி – எவ்வளவு
சினேகத்தோடு செல்கிறது…
கன்னத்தில் குழி விழவும் – சின்ன வளைவினில்
திரும்பிப் பார்த்து
“கிழுக்..” எனச் சிரித்துவிட்டு
வழுகிச் செல்லும்
அதன் அழகை
இந்தக் கோடையிலும்கூட – என்னால்
ரசிக்காமல் இருக்க முடியவில்லை..
“காற்றுக்கு இங்கே – என்ன
பஞ்சம் வந்தது?, – வெயில்
ஏன் இப்படிக் கொழுத்துகிறது..?”- என்று
அடுக்கடுக்கான – கேள்விகளை
கேட்கும் குழந்தைக்கு – பதிலாய்
ஒரு புன்னகையைத் தந்துவிட்டு – நெற்றியில்
ஒரு முத்தம் தருகிறாள்..
அவளது அம்மா.
பாதி விழியோடு – குழந்தை
எனக்கு – அவளது
கையொன்றைத் தருகிறாள் – நான்
பற்றிக்கொள்கிறேன்..
நிழல்கள் – எங்கள்மீது விழுந்து
ஒரு குடைபோலப் படர்கிறது…
முல்லைக் கமல்