March 26, 2023 10:05 pm

அண்ணாவின் வீர மரணம் | ந. பிரதீப்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

பொல்லாத அந்த இருண்ட விடிகாலை வாராமல் போயிருக்கலாம். ஒரு முடி உதிர்தலைக்கூட ஏற்றுக்கொள்ள முடியா மனித மனதுக்கு உன்னை இழத்தல் என்பது தான் இந்த யுகத்தில் எனக்கு நேரிட்ட மிகப்பெரிய இழப்பு…

தமையன் என்பவன் தோழனாய் கிடைத்த பாக்கியவான் நான்.

யூனியன்குளம் 12ம் துண்டு காணியில ஒரு தொகை சனம் . வேலிக்கு நேரே தெருவில் மஞ்சள் சிவப்புகொடிகள். கார்த்திகை மழையோடு தெரு நெடுக சடைத்து வளர்ந்திருக்கும் வாகை மரங்களை வருடும் வயல்க்காற்றில் எந்த சலனமும் இல்லை.

மன்னாரில் இருந்து முறுகண்டி வரை பேருந்துப் பிரயாணம். சாதாரணமாக கடந்து விட முடியாத முதலாவது பிரயாணம். அது எப்படிச் சாத்தியம் இனியொரு போதும் அவனை சந்திக்க முடியாதென்பதும், அவனோடு கதைக்க முடியாதென்பதும் நினைத்தும் கூட பார்க்க முடியாததொன்று. யன்னலோர இருக்கையினூடே தெரியும் ஒரு கோவிலையும் கூட மிச்சம் விடாது பிரார்த்தனைக்குமேல் பிரத்தனைகளோடு மிகவேகமாகநானும் மெதுவாகநேரமும் கடந்து போய்க்கொண்டிருந்த நாள் அதுமட்டும் தான்.

முறுகண்டி வந்து இறங்கியதுமே கண்ணா மாமாவோடு இன்னும் சிலர் உந்துருளிகளில் வந்திருந்தார்கள் எங்களைக்கூட்டிப்போக. அரைமணி நேர பயணத்துக்கு பிறகு தான் யூனியன்குளத்தில சலனமில்லாத காற்று ஓடிக்கொண்டிக்கும் உந்துருளியின் எதிர்விசையின் பொருட்டு முகத்தில் ஒங்கி அறையும்போது தான் பிரக்ஞை திரும்பியது.

நான் அதிகம் நேசிக்கும் வரிச்சீருடைகளோடு துப்பாக்கிகளோடு நிறைய அண்ணாமாரும், அக்காமாரும் காணிமுழுக்க நிக்கினம். தலைமாட்டில பெரிய புலிக்கொடி கட்டின படி அண்ணையின்ர வித்துடல பார்த்த உடன எல்லாமே முடிஞ்சு போனது போல இடிஞ்சு போயிற்றன். இவளா நேரமும் கும்பிட்டுக்கொண்டு வந்த கடவுள்மார் முழுப்பேரையும் உள்ளநாட்டு தூசனத்தால கிழிக்க வேணும் போல கிடந்துச்சு. அந்த நாயல் நெத்தியில சுட்டிருக்கிறாங்கள். என்ர அண்ணையின்ர முகத்தில சாகிற கடைசி நேரத்திலயும் ஒருதுளி பயம் இருந்ததுக்கான அறிகுறி இருந்ததா தெரியல்ல. அவன் என்னைமாதிரி இல்லை என்னை விட வடிவு, சரியான நல்லவன், ரோட்டில கிடக்கிற குட்டை நாயல கொண்டுவந்து மருந்து பூசிவிடுவான் எங்கட சொந்தக்காரர் எல்லாரும் என்னை பேசுறதென்டால் “கொண்ணைய பாரனடா அவனுக்கு இருக்கிற ஒரு நல்ல பழக்கமென்டாலும் உனக்கு இருக்குதே” என்டுதான் பேசுவின. எங்கட அப்பா கூட “கொண்ணையின்ர மூத்திரத்தில கொஞ்சம் வாங்கி குடி அப்பிடியென்டான திருந்திருயோ பாப்பமென்டு” கனதடவை பேசி இருக்கிறார். அந்த மனிசன் இனி என்னை என்ன சொல்லி திட்டும்.

அங்க அழுதுகொண்டு இருந்தவையல விட என்ன செய்யிறதென்டே தெரியாமல் விக்கிப்போய் நின்டவையல் தான் நிறைய பேர். அண்ணையின்ர நகம் எப்பயுமே சுத்தமா தான் இருக்கும் ஆனால் கொஞ்சம் வளர்ந்து இருந்த அவனின்ர நகத்துக்குள்ள இண்டைக்கு நிறைய மண் கிடந்துச்சு. வெடி விழுந்த உடன கிழ விழுந்து இருப்பான். வலி தாங்க முடியாத அந்த கடைசி நேரத்தில மண்ணை விராண்டி இருப்பான் போல பல்லிடுக்கிலயும் ரத்தம் கசிஞ்சு கிடந்தது. முதல்முதலா உள்ளுக்குள்ள ஒரு கொலைவெறி எட்டிப்பார்க்க வெளிக்கிட்டுது. ஆமிக்காரனென்டால் பிடிக்காதுதான் அது எப்பிடி என்டால் எங்கட ஊரில அவன் இருக்க கூடாது என்ட அளவுக்கு பிடிக்காது. ஆனால் அந்த நிமிசம் துப்பரவா பிடிக்காமல் போயிற்று அது எப்பிடி என்டால் ஒரு ஆமிக்காரனும் ஊரில உயிரோட இருக்கக்கூடதென்ட அளவுக்கு துப்பரவா பிடிக்காமல் போயிற்று….

அண்ணையென்டால் சரியான விருப்பம் எனக்கு. நானென்டாலும் அவனுக்கும் சரியான விருப்பம். அண்ணா எனக்கு சொல்லி நான் நிறைய விசயம் கேட்டுநடந்து இருக்கிறன். இயக்கத்துக்கு வரக்கூடாதென்டு ஒரே சொல்லுவான். குடும்பத்தை உன்னை நம்பி விட்டுப்போட்டு போறனென்டும் சொல்லுவான். என்னால இயக்த்துக்கு போகாமல் இருக்க முடியாமல் போயிற்று. ஆனால் நீ சொன்ன மாதிரி வாழணுமென்டு வாழ்ந்துட்டு இருக்கிறன்.

உன் மீதான அன்பிலும் அவர்கள் மீதான வெறுப்பிலும் துளியேனும் மாற்றமில்லை.

கார்த்திகை 27 பூக்களோடு வருவேன் உனக்கும் நம் தோழர்களுக்கும்

நா. பிரதீப்

 

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்