Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் அட்டாளைக் கனவுகள் நூலின் வெளியீடு

அட்டாளைக் கனவுகள் நூலின் வெளியீடு

3 minutes read

ஈழத்தின் ஒட்டுசுட்டானில் இடம்பெற்ற யாழ் வாகீஷ் ஆக்கிய ‘அட்டாளைக் கனவுகள்’ நூலின் வெளியீட்டு விழா.

‘அட்டாளையை எங்கள் சமூகம் மறந்து அதிக நாள் ஆகிவிட்டது. சிலர் அதனை பற்றிப் பிடித்துள்ளனர். உணவோடும் உணர்வோடும் அது கலந்திருந்தது. பரணாக பதுங்கு அரணாக என அது விரிந்திருந்தது. அந்தக் கனவுகள் தனியானவை’ என்று தனது தலைமை உரையில் மொழிந்தார் ‘கம்பீரக் குரலோன்’ சி.நாகேந்திரராசா அவர்கள்.

யாழ்ப்பாணம் நெடுந்தீவினைச் சேர்ந்தவரும் முல்லைத்தீவு முத்துஐயன்கட்டு ஊரில் வசிப்பவருமாகிய படைப்பாளி யாழ் வாகீஷ் ஆக்கிய ‘அட்டாளைக் கனவுகள்’ கவிதை நூலின் வெளியீட்டு விழாவானது 13.11.2022 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 09.30 மணிக்கு ஈழத்தின் முல்லைத்தீவு ஒட்டுசுட்டானில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலைய கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது. நிகழ்விற்கு ஒட்டுசுட்டான் மகா வித்தியாலய அதிபர் ‘கம்பீரக் குரலோன்’ சி.நாகேந்திரராசா தலைமை வகித்தார். முதன்மை அதிதியாக முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கனகசபாபதி கனகேஸ்வரன் பங்கேற்றார்.

நூலின் தலைப்பிற்கு அமைய அரங்கில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டிருந்த அட்டாளை அமைப்பு சிந்திக்கவும் நோக்கிப் பார்க்கவும் வைத்திருந்தது.

முன்னதாக பங்கேற்பாளர்கள் வரவேற்பு இடம்பெற்றது. ஈழத்தில் அறியப்பட்ட சந்தக் கவிஞர் வே.முல்லைத்தீபன் அவர்கள் நிகழ்ச்சிகளை சீர்பட தொகுத்து அளித்தார். மங்கல விளக்கேற்றலினைத் தொடர்ந்து ஒட்டுசுட்டான் மகா வித்தியாலய மாணவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து இசைத்தனர்.

ஆசியுரையினை ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய பிரதமகுரு கிரியாஜோதி, சிவஸ்ரீ கீர்த்திவாச குருக்கள் வழங்கினார். வரவேற்புரையினை கவிஞர் கண்ணகி மைந்தன் வழங்கினார். வரவேற்பு நடனமாக கரகாட்டத்தினை மாணவி அசோக் வாணிகா வழங்கினார்.

வாழ்த்துரையினை உலக சிறுவர் நலன் காப்பக இலங்கை நிர்வாகி லோகேஸ்வரன் தீபா, ஓய்வு பெற்ற ஆசிரிய ஆலோசகர் ஞானசோதி பத்மநாபன் ஆகியோர் வழங்கினர். நூலாசிரியரின் புதல்வனான முல்லைக்கவி சாருஜன் வாழ்த்துக் கவிதை மொழிந்தார். மாணவன் பானுசனின் தமிழ்ப்பாடல் நிகழ்வில் இடம்பெற்றது. மாணவி ஜெயச்சந்திரன் எழிலினி கவிவாழ்த்து வழங்கினார்.

வெளியிட்டுரையினை யோ.புரட்சி நிகழ்த்தினார். வெளியீட்டு நிகழ்வு இடம்பெற்ற நாளாகிய 13.11.2022 நூலாசிரியரின் 49ஆவது அகவை நாளுமாகும். அகவை நாளை குடும்பமாக மகிழ்வுடன் பகிர்ந்துகொள்ளும் நிகழ்வும் இடம்பெற்றது.

‘அட்டாளைக் கனவுகள்’ நூலினை நூலாசிரியர் குடும்ப சகிதம் வெளியிட்டு வைக்க, முதற்பிரதியினை நிகழ்வின் முதன்மை அதிதியான முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கனகசபாபதி கனகேஸ்வரன் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து பங்கேற்பாளர்கள் நூலினை பெற்றுக் கொண்டனர்.

நூலின் ஆய்வுரையினை தமிழாசிரியர் தேவகுரு ஸ்ரீகமலன் நிகழ்த்தினார். நிகழ்வின் அதிதிகளுக்கான நினைவுப்பரிசில் நூலாசிரியரால் அளிக்கப்பட்டது. நிகழ்வில் பங்கேற்ற வடமாகாண முன்னாள் மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், ஒட்டுசுட்டான் இந்த தமிழ் வித்தியாலய அதிபர் நித்தியகலா ஆகியோர் படைப்பாளருக்கு வாழ்த்து வழங்கினர்.

தொடர்ந்து நிகழ்வின் பிரதம அதிதி முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கனகசபாபதி கனகேஸ்வரன் உரை நிகழ்த்தினார். ஏற்புரையுடன் கூடிய நன்றி உரையினை ‘அட்டாளைக் கனவுகள்’ நூலின் ஆசிரியர் யாழ் வாகீஷ் நிகழ்த்தினார். யாழ் வாகீஷ் அவர்கள் உலக சிறுவர் நலன் காப்பகத்தின் இளந்தளிர் கல்வி நிலைய நிர்வாகியாகவும், ஆசிரியராகவும் செயற்பட்டு வருகின்றார். யாழ்ப்பாணம் நெடுந்தீவினை பிறப்பிடமாகக் கொண்ட இவர் போர்க்காலத்தில் புலம்பெயர்ந்து இந்தியா தமிழ்நாட்டில் ப வசித்தவர். 1995ஆம் ஆண்டு மீளவும் இலங்கையில் குடியேறினார். தமிழ்நாட்டின் தர்மபுரி மாவட்டத்தில் 1995ஆம் ஆண்டு இலங்கைத் தமிழர்களின் அவலங்களை மையப்படுத்திய கவிதைப் போட்டியில் முதலாம் இடம் பெற்றுக் கொண்டவர்.

இன்றைய நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. நிகழ்வானது குறித்த நேரத்திற்கு ஆரம்பிக்கப்பட்டதோடு, ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு சீர்பட நிறைவு பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பதிவு – யோ. புரட்சி

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More