Tuesday, April 23, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் என்றும் வாடாத மல்லிகை என்றும் வாழும் டொமினிக்ஜீவா | ஐங்கரன்விக்கினேஸ்வரா

என்றும் வாடாத மல்லிகை என்றும் வாழும் டொமினிக்ஜீவா | ஐங்கரன்விக்கினேஸ்வரா

5 minutes read

——————————————————-

           – ஐங்கரன்விக்கினேஸ்வரா

( ஈழத்து இதழியல் வரலாற்றில் சாதனை படைத்த ‘டொமினிக்ஜீவா’ 2021 ஜனவரி 28 மாலைதனது 93-வதுஅகவையில்காலமானார். என்றும் வாடாத மல்லிகையான, என்றும் வாழும் டொமினிக்ஜீவாவின் இரண்டாவது ஆண்டு நினைவாக (கடந்த 28.01.2023) நினைவாக இக்கட்டுரை பிரசுரமாகிறது)

பல தசாப்தங்களாக வெளிவந்த மல்லிகையின் வெற்றிக்கு அடிப்படைக் காரணங்களாக மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவாவின் கொள்கைப் பிடிப்பு, அவர் உழைப்பு, பொறுமை, விவேகம், பெருந்தன்மை, தோழமை உணர்ச்சி, நாட்டுப்பற்று, மொழிப்பற்று இவையே முக்கியமாகும். தமிழ் சிங்கள எழுத்தாளர்களின் இலக்கியப் பாலமாக விளங்கிய டொமினிக் ஜீவா, ஈழத்து முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முன்னோடியுமாவார்.

டொமினிக் ஜீவாவின் மல்லிகை, தமிழ் இலக்கியச் சிற்றிதழ்களில் மிக அதிக காலம் தொடர்ந்து வெளிவந்து சாதனை படைத்த மாத இதழாகும். இந்த சாதனையாளர் டொமினிக் ஜீவாவின் இரண்டாவது ஆண்டு 28/1/23 நினைவு தினமாகும்.

மல்லிகை 1966 ஆகஸ்ட் மாதத்தில் இதன் முதல் இதழ் வெளியானது. இதன் ஆசிரியராக டொமினிக் ஜீவா மல்லிகையை ஒரு முற்போக்கு மாத இதழாக வெளியிட்டார். நாற்பதுக்கும் அதிக ஆண்டுகளாக தொடர்ந்து வெளிவந்து சாதனை படைத்தது. இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் மல்லிகை சஞ்சிகைக்கும், டொமினிக் ஜீவா அவர்களுக்கும் முக்கிய பங்குண்டு. அத்துடன் மல்லிகையின்

400 க்கும் அதிகமான இதழ்கள் வெளிவந்துள்ளன.

ஈழத்தின் மூத்த எழுத்தாளரும், பதிப்பாளருமான டொமினிக் ஜீவா இன, மத பேதமின்றி மாற்றுக் கருத்தாளர்களுடனும் நட்பாக தோழமையில் இருந்தவர். மல்லிகை முதல் இதழ் பிறக்கும்போதே (1966) தன்னை ஒரு முற்போக்கு மாத சஞ்சிகை என்று துணிச்சலாகப் பிரகடனம் செய்து கொண்டது. மல்லிகை- டொமினிக் ஜீவா ஆடுதல் பாடுதல் சித்திரம் கவியாதியினைய கலைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர். அத்துடன் மல்லிகை பிறர் ஈனநிலை கண்டு துள்ளுவர் என்ற மகாகவி பாரதியின் வாக்கையும் தனது குறிக்கோள் வாசகமாகப் பொறித்துக் கொண்டார்.

சாகித்திய மண்டலப் பரிசு:

டொமினிக் ஜீவா எழுதிய தண்ணீரும் கண்ணீரும் சாகித்திய மண்டலப் பரிசு பெற்றது. இவரது “எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்”ஈழத்தின் குறிப்பிடத்தக்க ஒரு சுயவரலாற்று நூலாகும். டொமினிக் ஜீவா எழுதிய சிறுகதைத் தொகுப்புகளான தண்ணீரும் கண்ணீரும், பாதுகை, சாலையின் திருப்பம், வாழ்வின் தரிசனங்கள், டொமினிக் ஜீவா சிறுகதைகள் ஆகிய நூல்கள் ஈழத்தின் இலக்கிய வரலாற்றில் குறிப்பிடத்தக்கவையாகும்.

மல்லிகையின் இதழின் முகப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட சிங்கள, தமிழ், முஸ்லீம், தமிழகத்துக் கலை இலக்கியகர்த்தாக்களின் உருவப் படங்களைபிரசுரித்து வெகு சனங்களின் மத்தியில் அவர்களைக் கொண்டு சென்ற , டொமினிக் ஜீவா

ஈழத்து இலக்கிய வரலாற்றில் பாரிய பங்களிப்பை செலுத்தியுள்ளார்.

டொமினிக் ஜீவாவின் கட்டுரைத் தொகுப்புகளான அனுபவ முத்திரைகள், எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம், அச்சுத்தாளினூடாக ஓர் அனுபவ பயணம், நெஞ்சில் நிலைத்திருக்கும் சில இதழ்கள், முப்பெரும் தலைநகரங்களில் 30 நாட்கள் ஆகிய நூல்களும் பிரபல்யமானவையாகும்,

அத்துடன் மல்லிகையில் வெளிவந்த இருபத்தைந்துக்கும் மேற்பட்ட சிங்களச் சிறுகதைகளை ஒன்று சேர்த்து “சிங்களச்சிறுகதைகள்”என்ற பெயரில் நூலாகவும் வெளியிட்டார்.

கொள்கைப் பிடிப்பும் மொழிப்பற்றும்:

மல்லிகையின் வெற்றிக்கு அடிப்படைக் காரணங்களாக மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவாவின் கொள்கைப் பிடிப்பு, அவர் உழைப்பு, பொறுமை, விவேகம், பெருந்தன்மை, தோழமை உணர்ச்சி, நாட்டுப்பற்று, மொழிப்பற்று இவையே முக்கியமாகும்.

மல்லிகையில் எழுதிய எழுத்தாளர்கள், இன்னுமொரு விடயத்துக்காகவும் மல்லிகையின் பங்களிப்பு முக்கியமானது. அது இலங்கைத் தமிழ் இலக்கிய வரலாற்றினை வெளிப்படுத்தும் ஆவணங்களாக இருந்தன மல்லிகை இதழ்கள். இதனாலேயே ஜீவா பற்றிய ஆய்வு நூல்களை வேறு பல அறிஞர்களும் எழுதியுள்ளனர்.

“டொமினிக் ஜீவா – கருத்துக் கோவை”எனும் தொகுப்பை மேமன்கவி எழுதுயுள்ளார். “மல்லிகை ஜீவா நினைவுகள்” எனும் நூலை லெ.முருகபூபதி, 2001 வெளியிட்டார். பின்னர் “பட்டம் மறுதலிப்பும் பல்வேறு சர்ச்சைகளும்” என்ற தொகுப்பு மேமன்கவியால் எழுதப்பட்டதையும் பலர் அறிவர். 2004 “மல்லிகை ஜீவா – மனப்பதிவுகள்” என்ற நூலை திக்குவல்லை கமால் ஆய்வு செய்து வெளியிட்டார்.

ஜீவாவின் இலக்கிய சாதனைகள்:

இத்தகைய இலக்கிய சாதனைகளை படைத்த மல்லிகை ஜீவாவுக்கு 2013இல் “இயல் விருது”கனடா தமிழ் இலக்கியத் தோட்டமும், ரொறொன்ரோ பல்கலைக்கழக தென்னாசியக் கழகமும் இணைந்து வழங்கியது. 2007இல் “சங்கச் சான்றோர் விருது”இலங்கை பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்கம் வழங்கியது.

1966 இலிருந்து மல்லிகை மாத இதழை ஆரம்பித்து நாறபதுக்கும் அதிக ஆண்டுகளாக தொடர்ந்து நடத்தி வந்ததன் வெற்றிக்கு மற்றொரு முக்கிய காரணம், இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் குரலாக அது ஒலித்தது தான்,

இச்சங்கத்தின் கொள்கைகளைப் பட்டிதொட்டியெங்கும் பரப்பும் செயல் வீரனாக விளங்கினார் மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா.

மல்லிகை அவரது ‘சொந்தப் பத்திரிகை’ என்றபோதிலும்—அதனால் ஏற்படும் பொருளாதார லாப நஷ்டங்களுக்கு அவரே பொறுப்பு என்ற போதிலும்—மல்லிகையை மக்கள் உடைமை என்றே ஜீவா கருதினார். இதற்குக் காரணம், மார்க்ஸியம் லெனினியத்திலும் அதன் செயல்பாட்டிலும் அவர் கொண்டுள்ள அதிக பற்றும் உறுதியும் ஆகும்.

மக்கள் சஞ்சிகையான மல்லிகையின் சாதனைகளாக யாழ்ப்பாணத்தில் மூத்திர ஒழுங்கை என்ற இடத்தில் இருந்து கொண்டே “மல்லிகைப் பந்தல்” பிரசுரத் தளத்தையும் உருவாக்கி் இன்று அறுபதுக்கும் கூடுதலான தரமான நூல்களை வெளியிட்டுள்ளமை மல்லிகை ஜீவாவின் மற்றொரு சிறப்புகளில் தனித்துவமானது.

மல்லிகைப் பந்தல் வெளியீடுகள் :

“மல்லிகைப் பந்தல்” வெளியீடுகளான

அந்தக்காலக்கதைகள்அந்நியம்அல்சேஷனும்ஒருபூனைக்குட்டியும், ஒருடாக்டரின்டயரியில்இருந்து,

நிலக்கிளிமீன்குஞ்சுகள்ஆகியநூல்கள்முக்கியமானவையாகும் .

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த இலக்கிய மாதப் பத்திரிகை ‘மல்லிகை’ நாற்பது ஆண்டுகளாக வெற்றிகரமாக வளர்ந்து முன்னேறியமை எழுத்தாளர் டொமினிக் ஜீவா, இலட்சியத் துடிப்போடும் கடின உழைப்போடும் உற்சாகமாக மல்லிகையை வளர்த்து வந்தார் என்றே குறிப்பிடலாம். சமூக, அரசியற் செயற்பாட்டாளரான அவர் தனி மனிதராக எழுத்தாளர்களை அரவணைத்து மல்லிகையைக் கொண்டு வந்தார். அதன் இதழ்களூடாக எழுத்தாளர்களுக்குக் களம் அமைத்துக்கொடுத்தார். ‘உழைப்பது, மல்லிகைக்காக உழைத்துக் கொண்டேயிருப்பது’ தான் ஜீவாவின் வாழ்க்கையாக இருந்தது.

கடந்த நாற்பது ஆண்டுகளாக வந்துள்ள ‘மல்லிகை’ இதழ்களை ஒவ்வொன்றாகப் புரட்டி ஆராய்ந்தால், இன்றைய தமிழ் இலக்கியம் மற்றும் திறனாய்வின் வளர்ச்சிக்கு மல்லிகை ஆற்றியுள்ள அருந்தொண்டு நன்கு விளங்கும். குறிப்பாக, திறனாய்வுத் துறையின் வளர்ச்சிக்கு ’மல்லிகை’ யின் வாயிலாகக் கைலாசபதி, சிவத்தம்பி, நுஃமான் மற்றும் பல ஆய்வாளரது பங்களிப்பு சாலச் சிறந்ததாகும்.

மறைந்து— மறைக்கப்பட்டு— வாழும் கலைஞர்கள், படைப்பாளிகளை மக்கள் மத்தியில் நேர்மையாக அறிமுகப்படுத்துவதுதான் மல்லிகையின் முக்கிய பணியாக இருந்தது. காத்திரமான பங்களிப்பு. கட்டுரை, கவிதை, சிறுகதை, மொழிபெயர்ப்பு, விமர்சனம் எனத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்தன மல்லிகை இதழ்கள்; வளம் சேர்த்தார்கள். என்னதான் பாரிய கருத்து வித்தியாசங்கள் படைப்பாளிகளிடையே இருந்தபோதிலும்கூட, மல்லிகை எந்தக் கட்டத்திலும் சின்னத்தனமாகக் குறுகிய பார்வையுடன் நடந்துகொண்டதில்லை.

இதனை டொமினிக் ஜீவா மல்லிகையின் இதழில் தெளிவாக அறிவித்திருக்கிறார். ’நான் சத்தியத்தைப் போல உண்மையானவனாக இருக்க விரும்புகிறேன்’ என்பது ஜீவாவின் இதய ஒலி. அவருடைய ’இதய நேர்மையும் இலக்கிய நேர்மையும்’ அவரை அறிந்திருப்பவர்களுக்கு நன்கு புரியும்.

சரித்திரமாகிய மல்லிகை சஞ்சிகை:

டொமினிக் ஜீவா 2021 சனவரி 28 மாலை தனது 93-வது அகவையில் கொழும்பில் கோவிட் பெருந்துயர காலத்தில் காலமானார். டொமினிக் ஜீவா இறந்த பின்னர் இவருக்கு எமக்கு வெகு தெளிவாகவும் துல்லியமாகவும் ஒன்று தெரியும். சரித்திரத்தில் பேசப்படப் போகும் சஞ்சிகை மல்லிகை என்று.காலம் பல கடந்த பின்னரும் நின்று நிலைத்துப் பேசப்படப்போகும் இதழ் மல்லிகை.

அவரது படைப்புகள் இலங்கைத்தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்தன. அவரது இலக்கியப்பங்களிப்புகளில் நாம் பிரதானமாகக் கருவதுவது அவரது இதழாசிரியற் பங்களிப்பினையே.

மல்லிகையை ஆராய்ந்து கலாநிதிப் பட்டம் வாங்கக்கூடிய ஒரு காலம் வரத்தான் போகின்றது என இலக்கிய ஆய்வாளர்கள குறிப்பிடுவர்.

        – ஐங்கரன் விக்கினேஸ்வரா

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More