வானம்! | கவிதை | முல்லைஅமுதன்

வானம்
திடிரென
கதவைத் தட்டியது

அவசரமாக
வந்து
மூலையில் குந்திக்கொண்டது
பயத்தினால்
அல்லது வெறுப்பினால்
நடுங்கியபடியே
இருந்தமை
ஆச்சரியமாக இருந்தது
மேசையில்    அமர்ந்தபடி நான்..

சந்திரனுக்கும்,
சூரியனுக்கும்
அடிக்கடி சண்டை..
இதற்குள்
தங்களுக்குள்
நட்சத்திரங்களைப் பங்கிட்டுக்கொணடன

துப்பாக்கி சுடப் பழகுபவனும்
என்னைப் பார்த்தே சுடுகின்றான்.
வானம்வசப்படும்
என்று யாரும் இப்போ சொல்வதில்லை..

என்ன செய்தாய்?
என்னைக்
களங்கப்படுத்தாதீர்கள் என்றேன்..
நிர்வாணப்படுத்தாதீர்கள் என்கிறேன்..
என்னை வைத்தே
அணுவாயுதங்களை ஏவுகிறார்கள்..
தட்டிகேட்டேன்.
ஒளிந்துகொண்டேன்.
தேடிக்கொண்டிருக்கிறர்கள்

கதவு தட்டப்பட திறந்தேன்..
ஆயுததாரிகள்..
திபு திபு என உள்நுழைந்தபடி தேடினார்கள்

மேசையிலிருந்த
கவிதைகளைப் பொறுக்கியபடி
ஒருவன் நகர..
கைது செய்யப்பட்ட
நான் நடந்தேன்..

வானம் முழித்தபடி
தப்பித்தேனென்று முணுமுணுத்தது..
ஆனாலும்,
நான்
கவிஞன் வீட்டில்    ஒளிந்திருக்கக்கூடாது
எனவும் நினைத்தது..
கவிதை வெளியில்
வானம் எப்போதும் இல்லை..

 

– முல்லைஅமுதன்

ஆசிரியர்