கொடி நஞ்சு | கவிதை | வ.அதியமான்  

எனை ஆள்கிறது
இதுவரை உன்னிடம்
நான்
பேசாத சொற்கள்
பேசி இருக்க வேண்டிய சொற்கள்
பேசவே முடியாமல் போன சொற்கள்

ஒரு வேளை
உன்னிடமும்
இருக்கவும் கூடும்
இதுவரை என்னிடம்
நீ
பேசாத சொற்கள்
பேசி இருக்க வேண்டிய சொற்கள்
பேசவே முடியாமல் போன சொற்கள்

இக்கணத்தில்
முட்டை பொறித்து
வெடித்து சிதறும்
நதி ஆழத்து
மீன்குஞ்சு திரள்களில்
கூடி கலந்து மகிழ்ந்திருக்கட்டும்
அச்சொற்கள்

என் நாவில்
பத்திரமாய் பதுங்கி
நானிருப்பதை போலவே
உன் நாவில்
கமுக்கமாய் பதுங்கி
நீயும் இரு

கனிந்த ஓர் கணத்தில்
இரு ஊமைகளின்
உரையாடல்
ஏனோ
ஓர் இசையெனவே எழுகிறது
எல்லோருக்கும்

நன்றி : வ.அதியமான் | சொல்வனம்

ஆசிரியர்