
விடியாத இரவொன்றே இல்லையென
என்னை நிரப்பியவனாய்
சமாளிப்பின் படுக்கையிலிருந்து எழுகின்றேன்
இப்போதும் என் கனவுப் பாயில்
உந்தன் புன்னகைத் தேனீர் இல்லை
வருடல்ப் பூக்களில்லை
ஏமாற்றக் குளியலுக்காய் விரைகிறேன்
சூரியனை அழைத்தவாறு
யாரும் விழிக்காத போதும் விழிக்கும் காந்தி போல்
என்னுள் கர்வக் காந்தியை நிரப்பி
சமாளிப்பின் வேர்களில் விழுதெறிகிறேன்
முத்தக் குளியலும் முகந்தேடும் வித்தைக்
களரியும் ஒரு பெருஞ் சுகத்தின் ஔடதமே
அக்கிரகாரம் இல்லா
இனிய கிராமத்தின் ஆனந்தமே
நீ ஒரு கற்பனைக் குழந்தையைத் தந்தெறிந்து சென்றுவிட்டாய்
நானுங் குழந்தையும் விடிய விடிய இப்படித்தான் நட்சத்திரத் தெருக்களில் உன்னைத் தேடுவோம்
இந்த நிலாத்தேடலின் உலா முடிகையில்
விடியலின் கதவு மூடிக் கிடக்கிறது
எந்தன் தேடலில் தொடக்கம் மீண்டும் நீள்கிறது
ஆன போதும் வானம் வானமாயிருக்க
நெஞ்சம் வசந்தமாயிருப்பதும் வெம்மித்துளிர்ப்பதும் நியதியாயிற்று
நிலாவின் ஒளியில் குளிப்பது
அருகிய போது
மின்னலின் ஒளியும்
அது வகன்ற போது
மின்மினியின் ஒளி
அதுவும் அகல
காரிருழைக் கிழித்து பளிச்சிடும்
உன் பற்களின் ஒளியென
ஒளிகளுக்கு குறைவில்லை கண்மணியே
என்பதால்த்தான்
என்னைப் பற்றும் இருளின் போதெல்லாம்
விடியாத இரவே இல்லையெனும்
தேசிய கீதத்தை இசைக்கத் தொடங்குகிறேன்
எங்கோ ஒளிர்க்கும் உந்தன் பற்களின் ஒளி
மீண்டும் மீண்டும் வந்தென்
இருள் கிழிக்கையில்
நான் ஒளி அள்ளித் திரவியஞ் சேர்க்கும் குழந்தையுமாகி தெளிவைச் சூடுகிறேன்
மாற்றம் மலர்ந்தபடியிருக்கும் ஊற்றை இரசித்தவாறு.
த.செல்வா
