கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் 40 பேர் பொலிஸாரால் கைதுகூட்டமைப்பின் ஆதரவாளர்கள் 40 பேர் பொலிஸாரால் கைது

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவாக தென்மராட்சி கொடிகாமம் பகுதியில் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அக்கட்சியைச் சேர்ந்த 40 ஆதரவாளர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர் எனவும் இவர்களில் நால்வரை தொடர்ந்தும் பொலிஸார் தடுத்து வைத்திருப்பதாகவும் கூட்டமைப்பின் செய்திக்குறிப்பொன்று தெரிவிக்கின்றது.

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் பிரசார நடவடிக்கைகளை நாம் தற்போது மேற்கொண்டு வருகின்றோம். இதற்கமைய எமது ஆதரவாளர்கள் நேற்றுக் காலை கொடிகாமம் பகுதியில் எமது கட்சி சார்பிலான துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

இதன் பொழுது அவ்விடத்திற்குச் சென்ற இராணுவத்தினரும் பொலிஸாரும் எமது பிரசார நடவடிக்கைகளை தடை செய்யும் நோக்குடன் எமது கட்சியின் ஆதரவாளர்கள் 40 பேரை கைது செய்தனர். இதன்பின்னர் நால்வரைத் தடுத்து வைத்துக்கொண்டு 36 பேரை விடுதலை செய்துள்ளனர். தடுத்து வைத்துள்ள நால்வருக்கு எதிராகவும் தேர்தல் சட்ட விதிமுறைகளுக்கும் முரணாகச் செயற்பட்டவர்கள் என்ற அடிப்படையில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஆனால் எமது கட்சி ஆதரவாளர்கள் சட்ட ரீதியாக எமது கட்சியின் தேர்தல் இலட்சினை பொருத்தப்பட்ட துண்டுப் பிரசுரங்களை மட்டுமே விநியோகித்து பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இந் நடவடிக்கை எந்த வகையிலும் சட்டமுரணானதாக அமையாது என்பதை நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்ற அதேவேளை எமக்கு எதிராக பொலிஸார் தடைகளைப் பிரயோகித்து வருகின்ற விடயங்கள் தொடர்பாக எமது கட்சியின் தலைமைப்பீடத்திற்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அறிவித்துள்ளோம் என அச்செய்தி தெரிவிக்கின்றது.

இதேவேளை இவ்விடயம் தொடர்பாக கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் கருத்துத் தெரிவிக்கையில்,

கூட்டமைப்பின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளைக் குழப்புவதற்காக பொலிஸார் எமது கட்சியின் ஆதரவாளர்கள் 40 பேரை நேற்றுக் கைது செய்துள்ளனர். இவர்களில் நால்வரைத் தொடர்ந்தும் இன்று (நேற்று) மாலை வரை தடுத்து வைத்துள்ளனர்.

இது வன்மையாகக் கண்டிக்கத்தக்க ஒரு விடயமாக எமது கட்சியால் பார்க்கப்படுகின்றது. எமது கட்சிக்கு எதிராக பொலிஸார் செயற்பட்டு வருகின்றமையினையும் இராணுவமும் பொலிஸ் படையும் கூட்டமைப்பின் பிரசார நடவடிக்கைகளுக்கு தடைகளைப் பிரயோகித்து வருகின்றமையினையும் இது சுட்டிக்காட்டுவதாக அமைகின்றது என்றார்.

ஆசிரியர்