சிறப்புச் சிறுகதை | உயிர்க் கொடை

மாவீரர் நாள் | வணக்கம் லண்டன் இணையத்தின் சிறப்பு பதிவு …….

 

கார்த்திகை மாதம் வந்தாலே மாமி சரியா சாப்பிட மாட்டா.எல்லோரோடையும் சரியா பேசவும் மாட்டா. எப்ப சாப்பிடுவா எப்ப உறங்குவா என்று எம்மால் கணக்குப் போட முடியாது.

 

ஜீ. ரீ வி க்கு முன்னாலையும் இன்பத்தமிழ் வானொலியையும் கேட்டுக் கொண்டே இருப்பார். மாமி வரமுன்பே ஜீ.ரீ.வி எங்கள் வீட்டில் இருந்தாலும் ஜீ.ரீ.வியை நாங்கள் பார்ப்பது எப்பாகிலும் சில வினாடிகள் தான். மாமா மோசம் போனதுக்குப் பின்னால் மாமியை யாழ்ப்பாணத்தை விட்டுக் கொண்டுவர நாங்கள் போட்ட நாடகங்கள் பல.

 

மாமியை எங்களோட கூப்பிட்டு வைத்தபோது தான் எமக்கே விளங்கிச்சுது  மாமியின் தனிமையும், அவர் பொழுதைக் கழிக்கப் படும் பாடும். வெய்யில் என்றால் அவர் தோட்டத்துக்குள் போய் பொழுதை கழிப்பார்.

 

விசாகனும் சுசியும், கரணியும் பாடசாலையால் வரும் வரையும் மாமியைப் பார்த்துக் கொள்வது ஜீ.ரீ.வியும், இன்பத்தமிழ் வானொலியும் தான். மாமிக்கு வருசத்தில் எல்லா மாதங்களும் நினைவு நாள் மாதங்கள் தான்.

 

30 வருட ஈழப் போராட்டத்தில் மாமாவும் அவர் பரம்பரையும் இழந்தது கணக்கில் அடங்காதது. வருடத்தில் ஒவ்வொரு மாதத்திலும் ஏதாவது இழப்பு இருக்கிறது. சாதாரணமாகக் கணக்குப் பார்த்தால் 1958 இல் மாமி தாதி வேலை செய்யும் போது அவவுக்கு வயது 27. அப்பவே சிங்களம் தனி மொழிச் சட்டம் கொண்டு வரும் போது அனுராதபுரம் வைத்திய சாலையில் தாதியாக வேலையில் இருந்தபோது அடி வேண்டி ஓடி வந்தாராம். 1977 ஆம் ஆண்டு மாமா வைத்திருந்த லொறியை எரித்துப் போட்டாங்களாம். அதில் கிளீனராக இருந்த தனது வளர்ப்பு மகனை பறி கொடுத்தவராம். 1982 இல் உமையாழ்புரக் குண்டு வெடிப்பில் ரோட்டில் மேய்ந்துகொண்டிருந்த பசு மாட்டை இழந்தாராம், 83 இல் திருநெல்வேலிக் குண்டுவெடிப்பு முடிய மாமாவின் பெரியைய்யாவையும் விசுவமடு ராசாத்தி அன்ரியையும் பரந்தனில் வைத்து ஆமி சுட்டுப் போட்டாங்களாம்.

 

ஆயுதப் போராட்டம் தொடங்கியது அவர்களின் இழப்புக்கு அளவே இல்லையாம்.

 

மாமி பெரிசாப் படிக்காவிட்டாலும் எல்லாக் குடும்பத்திலும் அவருக்கு நல்ல மரியாதை. யார் எதையாவது செய்ய வேண்டும் என்றால் அவரையும் கலந்து ஆலோசித்து அவருக்கு ஒரு வார்த்தை சொல்லிவிட்டுத்தான் செய்வார்கள்.

 

மாமி ஒரு மதியஸ்தர். நிறைய குமர்ப் பிள்ளைகளை கரை சேர்த்தவர்.

(அதற்காக அவர் கல்யாணப் புரோக்கர் இல்லை) கோவில் திருவிழாவில தேவாரம் படிக்கிறது, வீடு குடிபூரல் வீட்டில கும்பம் வைக்கிறது, தலைப் பிள்ளைக்குப் பெயர் வைத்துத் தொட்டிலில் போடுவது என்று ஒரு சமூக சேவகி. வன்னி இருந்த காலத்தில் மாவீரர் பணிமனைக்குப் பொறுப்பாகவும் இருந்தவர்.

 

மகேசன் ஏதோ ஒரு தாக்குதலுக்குப் பொறுப்பாகப் போனவன். திரும்பி வரவேயில்லை. உயிரோடு இருக்கிறானா, இல்லையா என்ற முடிவு தெரியாமல் அவனை மாவீரர் பட்டியலில் சேர்க்காமலே பல ஆண்டு மாமாவும் மாமியும் அவன்ர வரவுக்காக ஒரு யோக தவம் செய்தார்கள். மகேசனின் முடிவு தெரிய முன்பே மாமாவும் யுத்தத்துக்குள் பலியாகிப் போனார்.

 

மாமியை அம்மா என்று சொல்ல ஆயிரம் பிள்ளையள் வன்னியிலையும் யாழ்ப்பாணத்திலையும்.

 

மாமி மட்டக்களப்பு வைத்தியசாலையில் நீண்ட காலம் வேலை செய்தவராம். கிழக்கு மாகாணத்திலிருந்து போராட்டம் பின்வாங்கி வன்னியில் பெடியள் வந்திருந்தபோது பெடியளுக்கெல்லாம் அம்மாள் வருத்தம் வந்திட்டுதாம். உடனே மாமி மாமாவோடு பேசி பெரிய வீட்டை பெடியளிட்டைக் கொடுத்துப் போட்டு தோட்டக் காணியில இருந்த கொட்டில் வீட்டுக்குப் போனவவாம்.  அதால புதுவீட்டு அம்மா, புதுவீட்டு அம்மா என்று அவங்கிட மனசிலையும் அத்திவாரம் போட்டு அமர்ந்திருந்தாவாம். அந்தப் பொடியள் இரண்டாகப் பிரிந்து சண்டை போட்டபோது அவாவுக்கு நெஞ்சுவலி வந்து வைத்தியசாலையில் இருந்தவராம்.

 

முள்ளி வாய்க்காலில் மாமியையும் இழந்திட்டம் எண்டு தான் நாங்கள் இருந்த நாங்கள். எத்தனை மரணக் குழிகளை எல்லாம் தாண்டி ஒரு பிணக்காட்டில் எடுத்த எலும்புக் கூடு முள்ளுக் கம்பிச் சிறைக்குள் இருந்து யாரோ சொந்தக் காரர் தான் அறிவித்தார்கள். உடனே யாழ்ப்பாணம் கொண்டுபோய் இப்படி ஒரு மனிசியாக மாமி எங்கிட கைக்கு வந்தது.

அவா ஊருக்குச் செய்த நன்மையும் புண்ணியம் தான். மாமி இப்படி வரவில்லை என்றால் என்ர மனிசனை கண்ணால பார்த்திருக்க முடியாது.மாமியை இறைவன் தந்ததால தான் நான் என்ர மனிசனை மீட்க முடிந்தது.

 

தேசியத் தலைவரின் பிறந்தநாள் நிகழ்வு இன்பத்தமிழ் வானொலியில் போகின்ற போது கொஞ்சம் அப்படி இப்படி ஜீ. ரீ. வீ லையும் பார்த்து முகம் மலரும் எத்தனையோ தடவை தம்பியை சந்தித்திருந்தாலும் மகன் மகேசனைக் காணவில்லை என்றதும் வீடுதேடி வந்து தன்ர கையைப் பிடித்து கண்ணில வைத்தபோது தன்ர கையில ஈரம் இருந்ததாம்.

 

27 செவ்வாய்க் கிழமை மாவீரர் நாளுக்கு போக முந்தி வீட்டைக் கூட்டி மொப்பண்னி விளக்கெல்லாம் கழுவி விளக்கு வைக்கப் போனவா கை தவறி குப்பி விளக்கு தரையில் விள ஓவென்று அழத் தொடங்கி விட்டா.

 

விசாகனும் அபியும் அவரைக் கட்டி அழுதார்கள்.  அப்பம்மாவோட நிற்கப் போவதாகவும், இன்று பாடசாலைக்குப் போகவில்லை என்று அவர்கள் அடம்பிடிக்க ஒருவாறு தன்னைச் சுதாகரித்துக் கொண்டு பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்பிவிட்டு விசாகன் போய் மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்தார் மாமி.

கிட்டு மாமாவுக்கும்  மற்றும் மாவீரர் நிற்கும் படங்களுக்கு விளக்கு வைத்துத் தேவாரம் பாடினார்.

மாலை மாவீரர் தினத்துக்குப் போய் எல்லாம் நல்லாய்த்தான் செய்தவர். பாலனும் அவருடைய போக்குக்கே விட்டு விடுவார். நான் தான் பாலனை வற்புறுத்தி – போய் மாமியைச் சமாதானம் செய்யச் சொல்லி அனுப்புறன்

“ அம்மா எல்லாம் முடிந்து நல்லாத் தானே வந்திட்டியள். இன்னும் ஏன் அழுகிறியள்.

 

“ போடா நீயும் இவங்களைப் போல மாறித்தான் போகிறாய்.  இன்று மாவீரர் தின நாளுக்கு வந்த ஆட்களின் அளவைப் பார்த்தியே. எங்கிட சனம் மறந்து போகுதுகள். அதுகளுக்கு முல்லைதீவு முகாம் தாக்குதல் ஆனையிறவு முகாம் தாக்குதல் மாதிரியான விமான நிலையம் தாக்குதல் மாதிரியான திறில் இன்னமும் நடக்க வேண்டும் அப்பத்தான் மாவீரரின் நினைவு வரும் போல இருக்கு.

 

போராட்டம் நடத்தினவர்களே பல பாகங்களாகப் பிரிந்து சிதறி நிற்கிறார்கள். இந்த சந்தர்ப்பத்தை எதிரி சரியான முறையில் பாவிக்கிறான்.

இனிப் புலம் பெயந்தவர்கள் ஊர் போய் வருகிறார்கள். மாவீரர் மண்டபத்திற்குப் போய் மாவீரருக்கு வணக்கம் செய்ய  எப்படி வருவார்கள்.

 

அய்யையோ இதுக்காகவா இத்தனை செல்வங்களை இழந்தோம்.அவர்கள் இதுக்காகவா உயிக் கொடை தந்தார்கள். ஐயோ இதைப் பார்க்கவா என்னையும் உயிரோட வைத்திருக்கிறாய்.

 

ஐயோ மகேசா என்னையும் உன்னோடு கூப்பிடடா. மாமி ஓவென்று அழுகிறார் நெஞ்சைப் பிடிக்கிரார். நான் ஓடிப் போகின்றேன்.

பாலன் அம்புலன்சுக்குப் போன் பண்ணுறார். அம்புலன்சு வந்து அவரை கொண்டு போகுது நான் அழுத கண்ணீரோடு வீட்டுக்குள் போகிறேன். மாவீரருக்கு வைத்திருந்த விளக்கு அணைந்து போய் புகை வீட்டில் பரவிக்கொண்டிருந்தது.

 

மாமி யின்  ஏக்கமும் அவரின்  ஆத்மாவின் தவிப்பும்  மாவீர்ர்களின் உயிர்க் கொடை வீண் போகக் கூடாது . போராட்டம் புதிய பாதையில்     மாறி இன்று புலம் பெயர்ந்தவர்களின் கைளில் போய் விட்டது புலம் பெயந்த தமிழர்கள் மாவீர்ரின் தியாகத்தையும், உயிர்க் கொடையையும், மறந்து போகாமல் இருக்க வேண்டும் என்பது தான்.

நானும் பாலனும்  மாமியின் படத்தை எடுத்து மாவீர்ரின் படத்துக்குப் பின்னால் வைத்து விளக்கு நிறைய எண்ணையை விட்டு விளக்கை ஏற்றி வைத்த்தோடு ஒரு உறுதி மொழியையும் எடுக்கிறோம் “மாவீர்ர்களின் கனவும் மாமியின் ஆத்மாவின் துடிப்பும் நிறைவாகும் வரை எமது பங்களிப்பை தொடர்ந்து செய்வோம்”

–       புதுவைதாசன் | ஆஸ்திரேலியாவிலிருந்து – 

ஆசிரியர்