ஐரோப்பாவை தாக்கிய புயலில் மூவர் பலி | போக்குவரத்துகள் பாதிப்புஐரோப்பாவை தாக்கிய புயலில் மூவர் பலி | போக்குவரத்துகள் பாதிப்பு

வட ஐரோப்பாவை தாக்கிய பிரதான புயலொன்றால் போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பல தசாப்த காலங்களிலில்லாத மோசமான கடற்கோள் ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

ஸ்கொட்லாந்தில் புயலில் லொறியொன்று சிக்கியதில் அதன் சாரதி உயிரிழந்துள்ளார்.

இங்கிலாந்தில் சரிந்து விழுந்த மரமொன்றின் கீழ் சிக்கி நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

அதேசமயம் டென்மார்க்கில் கடும் காற்றால் லொறியொன்று குடை சாய்ந்ததில் பெண்ணொருவர் பலியாகியுள்ளார்.

ஜேர்மனியில் ஹம்பேர்க் துறைமுகத்தில் பாரிய கடற்கோள் தாக்கியுள்ளது. அந்நகரில் 1962ஆம் ஆண்டு 300 பேர் பலியாவதற்கு காரணமாக அமைந்ததையொத்த பாரிய வெள்ள அனர்த்தம் ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது.

வட ஐரோப்பாவை வியாழக்கிழமை தாக்கிய மேற்படி ஸாவெர் புயலால் பல்லாயிரக் கணக்கான வீடுகளுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

மணிக்கு 228 கிலோ மீற்றர் வேகத்தில் வீசிய இந்தப் புயலால் மரங்கள் சரிந்து விழுந்ததால் எடின்பேர்க் நகருக்கு அருகில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இங்கிலாந்தின் கிழக்கு கடற்கரையானது கடந்த 60 ஆண்டுகளில் இடம்பெறாத மோசமான கடற்கோளை எதிர்கொண்டது.

பிரித்தானிய கடற்கரை பிராந்தியங்களில் வெள்ள அனர்த்தம் ஏற்படும் அபாயமுள்ளதாக அந்நாட்டு சுற்றுச்சூழல் முகவர் நிலையம் எச்சரித்துள்ளது.

இந்நிலையில் லண்டனை வெள்ள அனர்த்தத்திலிருந்து பாதுகாக்கும் முகமாக தேம்ஸ் தடுப்பு பகுதி மூடப்பட்டுள்ளது.

டென்மார்க் விமான சேவையான கே. எல். எம். 1 அம்ஸ்டர் டாம் ஹிபொல் விமான நிலையத்திற்கான 89 விமான சேவைகளையும் ஹம்பேர்க் விமான நிலையத்துக்கான 120 விமான சேவைகளையும் இரத்துச் செய்துள்ளது.

அதேசமயம் கிளாஸ்கோ எடின் பேர்க் மற்றும் அபெர்டீன் நகர்களுக்கான விமான சேவைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

மேலும் ஸ்கொட்லாந்து மற்றும் வட இங்கிலாந்திலான புகையிரத சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

சுவீடன் மற்றும் டென்மார்க்கிலான புகையிரத சேவைகளும் இரத்துச் செய்யப்பட்டன.

அத்துடன் ஜேர்மனி, சுவீடன் மற்றும் டென்மார்க்கிலிருந்து ஜேர்மனிக்கான கப்பல் சேவைகளும் இரத்துச் செய்யப்பட்டு்ள்ளது.

ஆசிரியர்