சுற்றுலா வீசாவில் வரும் வெளிநாட்டவர்கள் அரசியலில் ஈடுபடுகின்றனர்: பாதுகாப்புச் செயலர்சுற்றுலா வீசாவில் வரும் வெளிநாட்டவர்கள் அரசியலில் ஈடுபடுகின்றனர்: பாதுகாப்புச் செயலர்

இலங்கைக்கு சுற்றுலா வீசாவில் வரும் வெளிநாட்டவர்கள் சிலர் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அரசாங்கத்துக்கு தகவல் கிடைத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கையின் குடிவரவு குடியகல்வு சட்ட விதிமுறைகளை மீறி இவ்வாறு செயற்படுவோரை அதிகாரிகள் விசாரணை செய்யும் பட்சத்தில் அது மனித உரிமை மீறல் என அவர்கள் கூறுவதாகவும் கோத்தாபய ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் வழங்கியுள்ள செவ்வியில் கூறியுள்ளதாவது,

தற்போதைய சூழலில் மேற்குலக நாடுகளுக்கு, குறிப்பாக கனடா, ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு வீசா பெற்றுக்கொள்வதில் சிரமம் உள்ளது. ஆனால் எந்தவொரு வெளிநாட்டவருக்கும் இலங்கைக்கு வருகை தருவதற்கு நாம் பூரண சுதந்திரம் அளித்துள்ளோம்.

புலம்பெயர் தமிழர்கள் சிலர் இதனை சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கிறார்கள். எவ்வாறாயினும் இலங்கையின் குடிவரவு குடியகல்வு சட்டதிட்டங்களை மீறுவதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்.

பயங்கரவாதத்தில் ஈடுபடுவோர் மனித உரிமைகள் பற்றிப் பேசுகிறார்கள். அவர்களுக்கு மனித உரிமைகள் என்றால் என்னவென்று கூடத் தெரியாது. எமது நாடு தொடர்பில் சர்வதேசத்தின் மத்தியில் தவறான அபிப்ராயத்தை உண்டுபண்ணுவதே அவர்களுடைய நோக்கமாக இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்