வடமாகாணத்தின் கிழக்கு கரையோரம் சீரற்ற காலநிலை | அனர்த்த முகாமைத்துவ நிலையம் அவசர எச்சரிக்கை வடமாகாணத்தின் கிழக்கு கரையோரம் சீரற்ற காலநிலை | அனர்த்த முகாமைத்துவ நிலையம் அவசர எச்சரிக்கை

யாழ். மாவட்டத்தில் சீரற்ற காலநிலை காணப்படுவதனால் மீனவர்களை கடலுக்குச் செல்ல வேண்டாம் என யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரித்துள்ளது.

யாழ். மாவட்டத்தை ஊடறுத்தே தாழமுக்கம் செல்லும் சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றது. இதனால் 100 கிலோ மீற்றருக்கு காற்று வீசக்கூடும்.

அத்துடன் கடல் அலையானது 3மீற்றருக்கும் மேல்  எழும் சாத்தியக் கூறுகளும் காணப்படுகின்றது. அதன்படி யாழ்.குடா கடற்பகுதி மற்றும் முல்லைத்தீவு உள்ளிட்ட வடக்கு கடற்பகுதியில் குறித்த தாக்கம் இருக்கும் என்றும்  எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை வடமராட்சி கிழக்கு பகுதியில் இராணுவத்தினரால் எச்சரிக்கை அறிவிப்புக்களும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதையடுத்து கரையோர கிராம மக்கள் தற்காலிகமாக வீடுகளைவிட்டு வெளியேறி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடும் காற்றுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளதை அடுத்தே அந்த பகுதிகளைச்சேர்ந்த மக்கள் பாதுகாப்பாக இடம்பெயர்ந்துள்ளனர். முல்லைத்தீவு கடல் பகுதி  கொந்தளிப்புடன் காணப்படுவதுடன். பலத்த காற்றும் வீசுவதாக அங்கிருக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன

யாழ்ப்பாணம் வடமராட்சி கரையோரப்பகுதிகளில் கடல் நீர் மட்டம் வழமைக்கு மாறாக உள்ளதுடன் காற்றும் பலமாக உள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த பகுதியில் கடல்மட்டம் அதிகரித்து இருப்பதால் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அறுவுறுத்தப்பட்டதையடுத்து  கரையோரங்களிலுள்ள மக்கள் தற்காலிகமாக வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். மேலும் கடற்பகுதியில் கட்டப்பட்டிருந்த படகுகளும் கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் தற்போது மழை மழையுடன் கூடிய காலநிலையே காணப்படுகின்றது. எனினும் ஒரு கிலோமீற்றர் தூரத்திற்கு அப்பால் சென்றிருப்பது நல்லதென இராணுவத்தினர் அறிவுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்