போர்க்குற்றங்களை மறைக்க தடயங்கள் அழிப்பு – அம்பலப்படுத்தும் புதிய அறிக்கைபோர்க்குற்றங்களை மறைக்க தடயங்கள் அழிப்பு – அம்பலப்படுத்தும் புதிய அறிக்கை

சிறிலங்கா படைகள் போரின் இறுதிக் கட்டங்களில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதை நிரூபிக்கும் வகையில், புதிய அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

போரின் இறுதி மாதங்களில் இடம்பெற்ற பெரும்பாலான போர்க்குற்றங்களுக்கு சிறிலங்கா படையினரே பொறுப்பு என்றும், பொதுமக்கள் புதைக்கப்பட்ட இடங்களில் தடயங்களை முறைப்படி அழிப்பதற்கு வெளிப்படையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இந்தப் புதிய ஆய்வு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

சிறிலங்கா அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட போர் தவிர்ப்பு வலயத்தில், பொதுமக்கள் மீது திட்டமிட்டு, கண்மூடித்தனமான பீரங்கித் தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து இந்த அறிக்கையில் ஆராயப்பட்டுள்ளது. இந்த ஆட்டிலறித் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக நம்பப்படுகின்றது.

பொதுநல ஆலோசனை மையத்தின் அனைத்துலக குற்றவியல், ஆதாரத் திட்டத்தினால் இந்த ஆய்வு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன், உள்ளிட்ட சரணடைந்த விடுதலைப் புலிகளின் பிரமுகர்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்தும் இந்த விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொது மக்கள் மீதான பாலியல் வல்லுறவு, சித்திரவதை, மருத்துவமனைகள் மீதான பீரங்கித் தாக்குதல், பொதுமக்களுக்கு உணவு, மருந்து கிடைக்கவிடாமல் தடுக்கப்பட்டமை, குறித்தும் விசாரிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கையில் பொதுமக்களும், சிறார் போராளிகளும், புலிகளால் மனித கேடயங்களாகப் பயன்படுத்தப்பட்டது குறித்தும் ஆராயப்பட்டுள்ளது. எல்லா சந்தர்ப்பங்களிலும், போர்க்குற்றங்களும், மனித குலத்துக்கு எதிரான குற்றங்களும் இழைக்கப்பட்டுள்ளன என்று கண்டறிந்துள்ள இந்த அறிக்கை குறித்து அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

இரு தரப்பினராலும், வன்முறைகள் இழைக்கப்பட்டிருந்தாலும் இந்த ஆய்வு நடத்தப்பட்ட, 2008 செப்டம்பர் தொடக்கம் 2009 மே வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற பெரும்பாலான குற்றச் செயல்களுக்கு சிறிலங்கா படையினரே பொறுப்பாக இருந்துள்ளனர் என்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளதான இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் சிறிலங்கா படைகள் போர் முடிந்த பின்னர், பொதுமக்கள் புதைக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று மனித எச்சங்களை திட்டமிட்டு அழித்து விட்டதாக ஒரு சாட்சி குற்றம்சாட்டியுள்ளார்.

ஆசிரியர்