தமிழ் மக்களின் நிலம் திருப்பி ஒப்படைக்கவேண்டும் | அனந்திதமிழ் மக்களின் நிலம் திருப்பி ஒப்படைக்கவேண்டும் | அனந்தி

எமது மக்களின் நிலம் அரசாங்கத்தின் பணத்தை விடவும் பெறுமதியானது. வடக்கு மக்கள் தமது நிலங்களை நம்பியே வாழ்கின்றனர் என்பதை அரசாங்கம் விளங்கிக்கொள்ள வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் சுயநலப் போக்கினை நிறுத்திக்கொள்ள வேண்டும். தமிழ் மக்களின் நிலங்களை அவர்களிடமே ஒப்படைத்து தமிழர்களையும் பாதுகாக்க முன்வர வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

அரசாங்கத்தினால் அபகரிக்கப்பட்டுள்ள வடக்கு மக்களின் நிலங்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று அமைச்சர் ஜனக்க பண்டாரதென்னக்கோன் தெரிவித்த கருத்திற்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கை­யில்,

வடக்கில் வாழ்ந்துவரும் தமிழ் மக்கள் தமது நிலங்களை நம்பியே பிழைப்பு நடத்தி வருகின்றனர். பல ஆண்டுகளாக அவர்கள் வாழ்ந்துவந்த நிலங்களை அரசாங்கம் பாதுகாப்பு வலையங்கள் என்ற பெயரில் இராணுவ முகாம்களை அமைத்து வருகின்றது. இன்று எம் தமிழ் மக்கள் வாழ்வதும் எமது நிலங்களை மீண்டும் பெற்று வாழ்க்கை நடத்தலாம் என்ற நம்பிக்கையிலேயே இவ்விடயத்தில் அரசாங்கம் மீண்டும் தவறிழைத்துவிடக் கூடாது.

எமது தமிழ் மக்களின் நிலங்கள் அரசாங்கம் எமக்கு கொடுக்கும் பணத்தை விடவும் பெறுமதியானது. தமிழ் மக்களின் வாழ்வாதாரமும் அவர்களின் எதிர்காலமும் அவர்களின் நிலங்களை நம்பியே உள்ளது. அவற்றிற்கு விலைபேசி தமிழர்களின் வயிற்றில் அடித்துவிடக் கூடாது.

மேலும் இன்றைய காலக் கட்டத்தில் நிலத்தின் பெறுமதியானது மிக உயரிய மட்டத்தில் உள்ளது. இந்நிலையில் அரசாங்கம் குறிப்பிட்டுள்ள 20 ஆயிரத்து 11 ஏக்கர் நிலப்பரப்பும், அதில் உள்ள சொத்துக்கள் மட்டும் விவசாய பயிர்களும் ஒட்டுமொத்தமாக அரசாங்கம் மதிக்கும் தொகையினை விடவும் உயர்வானதே. இதை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு வழங்குமென்பது சாத்தியமற்ற விடயமே.

அரசாங்கம் சுயநலமாக செயற்படுவதை நிறுத்தி க்கொள்ள வேண்டும். அரசாங்கத்தின் வாக்குறுதிகள் எப்போதும் பொய்யானதாகவே அமை­கின்றது. தொடர்ந்தும் தமிழ் மக்களை ஏமாற்றி தமது காரியங்களை அரசாங்கம் செயற்படுத்திக் கொள்ளக்கூ­டாது. வடக்கு வாழ் தமிழ் மக்களின் நிலங்களையும் எம் மக்களிடமே ஒப்படைத்து வடக்கை பாதுகாக்க முன்வரவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு எனவும் அவர் தெரிவித்தார்.

ஆசிரியர்