பாடசாலை ஆசிரியையின் கோப்பியில் விஷத்தைக் கலந்து கொல்ல முயற்சித்த 10 வயது மாணவர்கள் – பிரித்தானியாவில் அதிர்ச்சியூட்டும் சம்பவம்பாடசாலை ஆசிரியையின் கோப்பியில் விஷத்தைக் கலந்து கொல்ல முயற்சித்த 10 வயது மாணவர்கள் – பிரித்தானியாவில் அதிர்ச்சியூட்டும் சம்பவம்

cg

தமது பாடசாலை ஆசிரியரின் கோப்பிப் பானத்தில் விஷத்தைக் கலந்து அவரை படுகொலை செய்ய 10 வயதுடைய மாணவர்கள் இருவர் முயன்ற அதிர்ச்சியூட்டும் சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது. 
வார்விக் ஷியரில் லீமிங்டன் ஸ்பாவிலுள்ள கிளப்ஹாம் ரெரேஸ் ஆரம்பப் பாடசாலையைச் சேர்ந்த எமா பிளேஸ் (39வயது) என்ற ஆசிரியை கொல்லும் முகமாக அந்த மாணவர்கள் இருவரும் அவரது சுடுநீர் போத்தலிலிருந்த கோப்பியில் அபாயகரமான இரசாயனத்தை கலந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் எமா கோப்பியை அருந்த முயற்சித்த போது அங்கிருந்த பிறிதொரு மாணவர் கோப்பியில் நஞ்சு கலக்கப்பட்டுள்ளமை குறித்து அவரிடம் தெரிவித்தார்.

இதனையடுத்து கோப்பியிலிருந்து மூக்கை அரிக்கும் நச்சு மருந்தின் வாசனை வெளிப்படுவதை அவதானித்த எமா அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் குறிப்பிட்ட சுடுநீர் போத்தலை பெற்று அதனை பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர்.

அந்த இரு மாணவர்களும் மேற்படி அந்த பாடசாலையிலிருந்து தம்மைத்தாமே குற்றச் செயலில் ஈடுபடும் குழுவென அழைத்துக் கொள்ளும் குழுவொன்றைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படுகிறது.

மேற்படி குழுவின் தாக்குதல் பட்டியலில் 6 ஆசிரியர்கள் உள்ளடங்குவதாக கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் பிரித்தானியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் வார்விக்ஷியர் பொலிஸ் பேச்சாளர் விபரிக்கையில், இந்த விவகாரத்தை குறித்து பாடசாலை நிர்வாகம் தாமே கையாளுவதாக தெரிவித்ததையடுத்து, மேற்படி சம்பவம் தொடர்பில் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்று கூறினார்.

ஆசிரியர்