முல்லைதீவில் வளச்சூறையாடல் | தொடரும் கருங்கல் அகழ்வுமுல்லைதீவில் வளச்சூறையாடல் | தொடரும் கருங்கல் அகழ்வு

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பகுதியில் அமைந்துள்ள தட்டயமலை கருங்கற் பாறை நிர்ணயிக்கப்பட்ட அனுமதியை விட மீண்டும் அகழும் நடவடிக்கை இடம்பெற்று வருவதாக வடமாகாண சபை உறுப்பினர் ரி . ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் பின்னணி உள்ள சில நிறுவனங்கள் குறித்த இடத்தில் அனுமதியைப் பெற்று கருங்கல் அகழ்வில் ஈடுபட்டுவருகின்றனர். எனினும் அகழ்வதற்கு என அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் அவற்றையும் பொருட்படுத்தாது சட்டத்திற்கு புறம்பான வகையில் தொடர்ந்தும் மேலும் பல அடி ஆழத்திற்கு தோண்டுகின்றனர்.

எமது மாவட்டத்தின் குறிப்பாக ஒட்டுசுட்டான் பகுதியின் இயற்கை ஒழுங்கமைப்பில் கருங்கல் பாறைகளும் மலைகளும் முக்கிய இடத்தை வகிக்கிறது.

யுத்த முடிவிற்கு பின்னர் தமிழர் வாழ்வியலை சிதைக்கும் நோக்குடன் முன்னெடுக்கப்படும் செயல்களில் இதுவும் ஒன்றாக அமைகிறது.

தமிழர் பிரதேசங்களில் எதுவித கவனிப்பும் காட்டாத நிறுவனங்களுக்கு இவ்வாறான அனுமதிகளை கொடுப்பதும் விதிமுறைகளை தாண்டியதாக அகழ்வுகளை மேற்கொண்டு இயலுமான அளவு கருங்கல் சூறையாடப்படுவதும் எமது இயற்கையையும் தமிழர் குடியிருப்புகளையும் சிதைப்பதாகவே அமைகிறது.

சில நாட்களுக்கு முன்னர் தட்டயமலை பகுதி வாழ் மக்கள் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க அவ்விடத்தை பார்வையிட சென்ற போது சுமார் 50 அடி ஆழத்திற்கு மேல் கருங்கல் அகழப்பட்டிருப்பதையும் அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

அதன்படி நீர்ப்பாசன பிரதிப்பணிப்பாளர், மத்திய சுற்றாடல் அதிகார சபை, புவிச்சரிதவியல் சுரங்கவியல் திணைக்களம், வன இலாகா அதிகாரிகள், பிரதேச செயலாளர் ஆகியோர் எச்சரித்த பின்னரே மேற்படி அகழ்வுகள் நிறுத்தப்பட்டதாக அறியவருகிறது.

பொறுப்பற்ற முறையில் வளச்சூறையாடலை நடாத்தும் நிறுவனத்தை தாண்டி இதற்கு அனுமதி கொடுப்பவர்கள் இவற்றை பார்வையிடுவதில்லையா என்ற கேள்வியும் என்னுள் எழுகிறது.

எமது மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பல மலைகள் இப்படியாக தோண்டப்பட்டு வளங்களை சூறையாடி இயற்கை சமநிலையை கேள்விக்குறியாக்கி வருகின்றனர்.

இவ்வாறான  நாசகார செயல்களை அத்துமீறி செய்பவர்களும் இதற்கு துணை போகின்றவர்களுக்கும் மன்னிப்பு வழங்கக் கூடாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்

ஆசிரியர்