பிரான்ஸ் நாட்டில் பிறந்து 122 வயதில் மரணமடைந்த ஜீயன்னே கால்மெண்ட் என்பவர் உலகின் மிக வயதான பெண்மணியாக கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள நிலையில், தங்கள் நாட்டை சேர்ந்தவர் தான் உண்மையில் மிக வயதான பெண்மணி என்று உஸ்பெகிஸ்தான் உரிமை கொண்டாடுகிறது.
அந்நாட்டில் கடந்த மார்ச் 28-ந் தேதி மரணமடைந்த டுட்டி யுசுபோவா, 1880 ஆம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி பிறந்தவர் என்றும், மரணமடைந்த போது அவருக்கு வயது 135 எனவும் யுசுபோவாவின் நண்பர்கள் கூறுகின்றனர். தங்களிடம் உள்ள ஆதாரங்கள் மூலம் இதை நிரூபிக்க முடியும் என கூறிய அவர்கள், யுசுபோவாவின் பாஸ்போர்ட் நகலை வெளியிட்டுள்ளனர். அதில் அவர் 1880 ஆம் ஆண்டு பிறந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து கின்னஸ் சாதனை புத்தகம் யுசுபோவாவை உலகின் மிக வயதான பெண்மணியாக பதிவு செய்து கொள்ளவேண்டும் என அவரது நண்பர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
உஸ்பெகிஸ்தான் நாட்டின் வடமேற்கு பகுதியில் தன்னாட்சி பெற்ற கரகல்பக்ஸ்தானில் நடைபெற்ற யுசுபோவாவின் இறுதி சடங்கில் கலந்து கொண்ட அமைச்சரவையின் தலைவர் பக்சடிர் யாங்கிபேவ் கூறுகையில், யுசுபோவாவின் வயது தொடர்பான ஆதாரங்கள் தெளிவாக உள்ளன. இந்த விவரங்கள் உடனடியாக கின்னஸ் சாதனை புத்தகத்தின் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்றார்.
மேலும் தங்கள் நாடு ஆரோக்யமான வாழ்க்கைக்கு ஏற்ற நாடு என்று கூறிய அவர், தங்கள் நாட்டில் உள்ள 30 மில்லியன் மக்களில் 8700 பேர் 100 வயதை தாண்டியவர்கள் என்றார்.
135 வயதான அப்பெண்மணி “டுட்டி யுசுபோவா- மூன்று தலைமுறைகளின் சாட்சி” என்ற ஆவணப்படத்தில் பேசுகையில், நீண்ட நாள் வாழ்வதற்கான ரகசியங்களை நான் உங்களுக்கு சொல்கிறேன். கவுரமாக வாழவேண்டும் என்றால் நிலத்தில் நன்றாக உழைக்கவேண்டும். பல போர்களுக்கிடையே வாழ்ந்த நான், இன்றைய குழந்தைகளுக்கு கூறுவது என்னவென்றால், நல்ல மக்களுடன் கூடி வாழுங்கள், சமாதானத்தை கையாளுங்கள் என்று கூறுகிறேன்.
ஏற்கனவே உலகின் மிக வயதான பெண்மணியான அறிவிக்கப்பட்ட கால்மெண்ட் கடந்த 1997 ஆம் ஆண்டு மரணமடைந்தார். அப்போது அவருக்கு வயது 122 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.