பிரிட்டனில் வரும் மே 7-ந் தேதி பொது தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அங்கு தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் இன்று அந்நாட்டு தொலைக்காட்சியில் அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்ற நேரடி விவாதம் நடைபெற்றது.
விவாதத்தின் முடிவில் தற்போதைய அதிபராக உள்ள டேவிட் கேமரூனுக்கு 40 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அடுத்த பிரதமராக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட தொழிலாளர் கட்சியின் மிலிபாண்ட், மற்ற கட்சிகளின் வேட்பாளர்களான ஸ்டர்ஜியன் மற்றும் பரேஜ் ஆகியோருக்கு கிடைத்த ஆதரவால் பின்தங்கினார். மிலிபாண்ட்டுக்கு ஆதரவாக 21.5 சதவீதம் பேரும், ஸ்டர்ஜியனுக்கு ஆதரவாக 20 சதவீதம் பேரும், பரேஜுக்கு ஆதரவாக 21 சதவீதம் பேரும் வாக்களித்ததால் மிலிபாண்ட் பின் தங்க நேர்ந்துள்ளது.
இந்த விவாதத்தின் போது நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் நலிவடைந்து விட்டதாக மிலிபாண்ட் கடும் குற்றச்சாட்டை முன் வைத்தார். இந்த விவாதத்தின் போது ஸ்காட்லாந்தில் ஸ்டர்ஜியன் அமோக வெற்றி பெறுவார் என தெரியவந்துள்ளது. எனினும் இன்றைய தொலைக்காட்சி விவாதத்தில் பார்வையாளர்கள் பகுதியில் இருந்த பெண் ஒருவர் கேமரூனிடம் சவால் விடும் வகையில் கேள்விகளை கேட்டார். விக்டோரியா பிராசர் என்ற அப்பெண், நாட்டின் சாலைகளில் வீடில்லாமல் மக்கள் பலர் தவித்து வருவதாக குற்றஞ்சாட்டினார்.
எனினும் பார்வையாளராக உள்ளவர் பேச அனுமதி கிடையாது என்பதால், அப்பெண் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.