தன் மீதான அனைத்து பொருளாதார தடைகளையும் அகற்றினால் மட்டுமே, அணு ஆயுத விவகாரத்தில் இறுதி ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுவோம் என வல்லரசு நாடுகளுக்கு ஈரான் திடீர் நிபந்தனை விதித்து அதிர்ச்சி அளித்துள்ளது.
ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்காகத்தான் அணுசக்தி திட்டங்களை நிறைவேற்றி வருகிறது என்று பல்லாண்டு காலமாக மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்டி வந்தன. ஈரான் அதை மறுத்து வந்தது. மின்சார உற்பத்திக்காகத்தான் அணுசக்தி திட்டங்களை தீட்டி நிறைவேற்றி வருவதாக அந்த நாடு கூறியது. இருந்தபோதிலும், அதை ஏற்காமல் அந்த நாட்டின் மீது அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தன. இதனால் அந்த நாட்டின் பொருளாதாரம் சீர் குலைந்தது.
ஈரானின் அணுசக்தி திட்டங்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக நீண்ட காலமாக பேச்சுவார்த்தையும் நடந்து வந்தது.
கடைசியாக சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள லுசானே நகரில் ஈரானுடன் வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், ரஷியா, இங்கிலாந்து, சீனா ஆகியவை பேச்சுவார்த்தை நடத்தின. நீண்ட பேச்சு வார்த்தையின் முடிவில், கடந்த 2-ந் தேதி உடன்பாடு ஏற்பட்டது.
இதன்படி ஈரானில் யுரேனியத்தை செறியூட்டி, அணு குண்டாக மாற்ற பயன்படும் ‘சென்ட்ரிபியூஸ்’ எண்ணிக்கை மூன்றில் இரு பங்குக்கும் கீழாக குறைக்கப்படும், அடுத்த 15 ஆண்டுகளுக்கு 3.67 சதவீதத்துக்கு அதிகமாக யுரேனியத்தை செறிவூட்டக் கூடாது, ஜூன் 30-ந் தேதிக்குள் இறுதி உடன்பாட்டினை செய்து கொள்ள வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.