கவிஞர் / எழுத்தாளர் தீபச்செல்வன் எனக்கு தன்னுடைய கவிதைகள் மூலம் அறிமுகமாகிய காலத்தில் நான் எழுத வந்திருக்கவில்லை. தீவிரமாக இலக்கிய வாசிப்பை தொடங்கிய காலம் என்று அதைக் குறிப்பிடலாம். தீபச்செல்வன் ஈழத்தின் மிகவும் முக்கியமான கவிஞர் என்பது தமிழகத்தின் படைப்புலகமும் நன்கு அறிந்த ஒன்று. நடுகல் அவருடைய முதல் நாவல். தன்னுடைய இரண்டாவது நாவலாக பயங்கரவாதி என்ற இந்த நாவலை தீபச்செல்வன் எழுதியிருக்கிறார்.

நடுகல் நாவலைப்போலவே பயங்கரவாதி நாவலையும் ஒரு நாவல் என்ற அளவில் மட்டுமே என்னால் எடுத்துக் கொள்ள முடியவில்லை. அவை எம்முடைய ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றின் முக்கியமான பகுதிகள். ஈழ போராட்டம் என்பதை ஆயுதப்போராட்டம் மட்டுமே என்று கருதுகின்ற பலர் இருக்கிறார்கள். ஈழப்போராட்டம் என்பதில் ஈழத்தில் வாழ்ந்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனிப்பட்ட பங்குகள் இருக்கிறது. ஈழ விடுதலைப்போராட்டம் என்பதில் இருந்து ஈழத்தின் தனி மனிதர்களை, அவர்களின் குடும்பங்களை பிரித்து அணுகுவது சாத்தியமில்லை.
இந்த நாவாலின் ஒவ்வொரு பக்கத்தை புரட்டும் போதும் எனக்கு நன்கு தெரிந்த பலருடைய வாழ்வுடன் பொருத்தி பார்ப்பதை தவிர்க்க முடியவில்லை. ஒரு வேளை இந்த நாவலை தீபச்செல்வன் எழுதாமல் விட்டிருந்தால் நானும் இதே களத்தை எழுதியிருக்க கூடும் என்பது உண்மை. தீபச்செல்வன் மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் யாழ்.பல்கலைக்கழகத்தில் படித்தவர் என்பது அவரை இந்த நாவலை ஆழமாக எழுத துணை புரிந்திருக்கின்றது.
ஈழ விடுதலைப்போராட்டத்தில் எப்போதும் யாழ்.பல்கலைக்கழகத்திற்கு ஒரு வரலாற்று பாத்திரம் இருக்கிறது. அது முதலாம் கட்ட ஈழப்போராட்டமாக இருந்தால் சரி மூன்றம் கட்ட ஈழப்போராட்டமாக இருந்தாலும் சரி ஒரு தனி வாரலாற்றை யாழ்.பல்கலைக்கழகம் படைத்திருக்கிறது.
என்னுடைய நண்பர்கள் வட்டத்தில் எப்போதாவது எழுப்பப்படும் கேள்வி (தமிழகத்தில் மட்டுமல்ல) சமாதான காலகட்டத்தின் பின் தொடங்கி முள்ளிவாய்கல் வரையான காலகட்டம் வரை யாழ்ப்பாணம் ஈழப்போராட்டத்தில் வழங்கி பங்கு என்ன என்பதுதான். அதிலும் மிகவும் குறிப்பாக யாழ்.பல்கலைக்கழகத்தின் பங்கு என்ன என்பதுதான். அந்த மிகவும் நெருக்கடியான கிட்டத்தட்ட “பெட்டி” அடிக்கப்பட்ட வாழ்வை அறியாதவர்கள் நிறையவே இருக்கிறார்கள். அந்த அடிப்படையில் பயங்கரவாதி நாவல் ஒரு முக்கியமான வரலாற்று சாட்சியமாக மாறுகின்றது.
ஏன் எழுதுகிறோம்? ஒரு படைப்பாளியின் பொறுப்புகள் என்ன? என்பதில் தீபச்செல்வனிடம் ஒரு தீர்க்கமான பார்வை இருக்கிறது. அதில் அவர் எந்த சமரசமும் இல்லாமல் எழுத விரும்புகிறார். அதை இந்த நாவலின் மூலம் இன்னும் ஒரு முறை உரத்துக் கூறியிருக்கிறார்.
நான் ஒரு கதை சொல்ல விரும்புகிறேன். என்னுடைய பால்யகாலத்தில் என் பக்கத்து வீட்டில் ஒரு சிறுவன் இருந்தான். என்னை விட இரண்டு வயது குறைந்தவன். நாங்கள் இருவரும் ஒரே பாடசாலையில்தான் அப்போது படித்து வந்தோம். ஊரில் கோவில் திருவிழாக் காலங்களில் நடைபெறும் சைவசமய பாடத்த தேர்வுகளில் நாங்கள் அடுத்தடுத்து மேடை ஏறி பரிசுகளை தட்டிச்சென்ற காலம் அது. என்னுடைய புத்திரன் நாவலின் ஒரு பகுதியில் கூட அந்த சிறுவனை நீங்கள் பார்க்கலாம். காலம் கருணையற்று சுழட்டி அடித்ததில் என்னுடைய வாழ்க்கை ஊரைத்தாண்டி நகரத் தொடங்கியது. ஒரு காலகட்டத்தில் அந்த பக்கத்து வீட்டு சிறுவன் யாழ்.பல்கலைக்கழகத்தின் மாணவர்களின் தலைவன் ஆனார். எப்போதும் எண்ணை வடிய வாரி இழுத்த தலையுடன் என் தோளோடு நின்ற சிறுவனிடம் காலம் கொடுத்த பொறுப்பு அளப்பரியது. அந்த பொறுப்பில் பெருமை இருந்த அளவுக்கு ஆபத்தும் இருந்தது. யாழ்ப்பாணத்தில் இலங்கை இராணுவத்தின் கவசவாகனங்கள் சூழ தமிழீழ உணர்வை காவி நின்ற இளைஞர்கள் காலம் அது!. ஒரு நாள் அதிகாலையில் செய்தி வருகின்றது. தம்பியை சுட்டு விட்டார்கள். சுட்டவன் யாராவது ஒரு சிங்கள சிப்பாயாக இருக்கும் என்றா நினைக்கிறீர்கள்?. இல்லை, தம்பியின் நம்பிக்கைக்குரிய தோழன்!.
இந்த நாவலை ஏன் படிக்க வேண்டும் என்பதற்கு இதைப்போன்ற பல கதைகள் இருக்கிறது. இவை வெறும் கதைகள் அல்ல. சுவடற்று மறைந்து போய்க்கொண்டிருக்கும் எங்களின் உன்னதமான ஈழ விடுதலைப்போராட்ட காலம். வாசித்து பத்திரப்படுத்தி கொள்ளுங்கள். நம் அடுத்த தலைமுறைக்கு கொடுப்புதற்கு நம்மிடம் வேறென்ன மிஞ்சி இருக்கிறது?
வாசு முருகவேல் 08/02/2022
புத்தகம்: பயங்கரவாதி
வகை: நாவல்
ஆசிரியர்: தீபச்செல்வன்
வெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ்
தொடர்புகளுக்கு: 0091994046650