செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை கல்வியா? கலையா? சமூகத்தின் தவறான கற்பிதத்தை உடைத்த கில்மிசா! | அ. நிக்ஸன்

கல்வியா? கலையா? சமூகத்தின் தவறான கற்பிதத்தை உடைத்த கில்மிசா! | அ. நிக்ஸன்

2 minutes read

* படிப்பிற்கென நேரத்தை ஒதுக்கிய பன்முக ஆற்றல்!

* போரின் வடுக்களைச் சுமந்தபடி கல்வியில் தடம் பதித்த பிள்ளைகளும் உண்டு…

* பொருளற்ற தற்பெருமைகளை விட ‘மன அடக்கம்’ என்றும் அவசியம்!

— — —

உலகப் புகழ்பெற்ற ஈழத்து பாடகி, சிறுமி கில்மிசா, (Kilmisha Yaazhisai) கலைத்துறையில் மாத்திரமன்றி, தனது கல்வியிலும் அசாத்திய திறமையை (Exceptional Talent) வெளிப்படுத்தியுள்ளார்.

“கலை, விளையாட்டு போன்ற பிற துறைகளில் குழந்தைகள் ஈடுபட்டால் அவர்களால் கல்வியில் கவனம் செலுத்த முடியாது” என்ற தவறான பொதுப் புத்தி இன்றும் பல பெற்றோர்களிடம் வேரூன்றியுள்ளது.

ஆனால், அந்தச் சிந்தனையைத் தனது சாதனையின் மூலம் தகர்த்தெறிந்துள்ளார் கில்மிசா.

தற்போது வெளியான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் அவர் மிகச் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று (7A, 1B, 1C) சாதனை படைத்துள்ளார்.

அதேநேரம், கில்மிசா தனது கல்விப் பொதுத் தராதர உயர்தரம் வரை மாத்திரமன்றி, அதற்கு அப்பாலுள்ள உயர்கல்வியையும் வெற்றிகரமாகப் பூர்த்தி செய்ய வேண்டும்…

அதுவரை, தற்போதைய புகழின் பெருமிதங்களைத் தனது மனதில் அடக்கத்துடன் பேணிக்கொள்வது அவசியமாகிறது.

பொருளற்ற தற்பெருமைகளுடன் புகழின் உச்சிக்குச் சென்றுவிடக் கூடாது என்ற கருத்தை மனதில் இருத்தி, கில்மிசா தனது ஆற்றல்களை மேலும் மேம்படுத்த வேண்டும்.

ஏனெனில், கில்மிசாவின் இந்த வெற்றி முற்றிலும் தனித்துவமானது.

சர்வதேசப் பாடல் போட்டிக்காக குறைந்தது ஐந்து மாதங்கள் வரை பாடசாலைக்குச் செல்லவில்லை.

தனியார் தொலைக்காட்சியின் உலகளாவிய பாடல் போட்டியில் வெற்றி பெற்ற பின்னரும் கூட, உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் நடைபெற்ற இசை நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வந்தார்.

இத்தகைய நேரமே இல்லாத பரபரப்பான சூழலிலும், படிப்பிற்கென நேரத்தை ஒதுக்கி, அர்ப்பணிப்புடன் படித்துப் பெற்றுள்ள இந்த வெற்றி, “முயற்சியும் திட்டமிடலும் இருந்தால் கலையும் கல்வியும் இரு கண்கள்” என்பதை நிரூபிக்கும் ஒரு உன்னத சான்றாக மாறியுள்ளது.

ஆகவே, இந்த நற்சான்றுடன் கில்மிசா உயர்கல்வி வரை நீடித்துச் செல்ல வேண்டும்.

அதற்கு ‘அடக்கம்’ என்பது கில்மிசாவிடம் ஒரு பிரதான பண்பாக என்றும் நிலைத்திருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.

இசை நிகழ்ச்சிகளில் இவள் பங்கேற்பதால், இவளுடைய கல்வித் தரம் குறைந்துவிடுமோ என்று ஆரம்பத்தில் பலரும் நினைத்திருக்கக்கூடும்.

ஏன், பெற்றோருக்குக் கூட இவ்வாறானதொரு அச்சம் ஏற்பட்டிருக்கும்..

ஆனாலும், தங்கள் பிள்ளை மீது அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கையும், அவளது பன்முக ஆற்றலும் இன்று மிகச் சிறந்த பலனைத் தந்துள்ளன.

இத்தகையதொரு சாதனை சாத்தியமானதற்கு, அவள் கல்வி கற்கும் யாழ். சுண்டிக்குழி மகளிர் கல்லூரியின் கலை, பண்பாட்டு விழுமியங்களும், கல்விச் சூழலும் மிக முக்கிய காரண-காரியங்களாக அமைந்தன.

அந்தப் ‘பலன்’ என்பது, ஒட்டுமொத்த ஈழத்தமிழ் கல்வி உலகத்திற்கும் ஒரு முன்மாதிரியான சான்றாகும்.

போரினால் பாதிக்கப்பட்டு, பெற்றோரை இழந்து தவித்த எத்தனையோ பிள்ளைகள், தமது துயரங்களுக்கும் இழப்புகளுக்கும் மத்தியிலும் கல்வியில் சாதனை படைத்திருக்கின்றனர்.

போரின் வலிகளைச் சுமந்த தமிழ்ச் சமூகத்தின் எழுச்சிக்கு உதாரணமாக அவர்கள் இன்றும் எங்கள் கண் முன்னே வாழ்ந்து வருகின்றனர்.

தொடர் உயிரிழப்புகள், துயரங்களுக்கு மத்தியிலும், தமது கல்வி ஆற்றலால் மீண்டும் உயிர்பெற முடியும் என்பதையும், அரசியல் இறையாண்மையுடன் நிமிர்ந்து வாழ முடியும் என்ற உரத்த செய்தியையும் ஈழத்தமிழ் இளம் தலைமுறையினர் தொடர்ந்து உலகிற்குப் பிரகடனப்படுத்தி வருகின்றனர்.

அதேவேளையில், போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியும், தகவல் தொழில்நுட்பங்களைத் தவறாகப் பயன்படுத்தியும், சீரழிவதோடு தமிழ்ச் சமூகத்திற்கும் அவப்பெயரை ஏற்படுத்தி வரும் சில இளைஞர்கள் – பொண்கள், கில்மிசா என்ற சிறுமியின் தற்துணிவையும் அர்ப்பணிப்பையும் ஒரு வாழ்வியல் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஈழத்துத் தமிழ்ச் சமூகத்தை நோக்கித் திட்டமிட்ட முறையில் ஏவப்படும் பண்பாட்டுச் சீரழிவுகளை உடைத்தெறிய இத்தகைய முன்னுதாரணங்கள் அவசியமானவை என்பதை உணரத் தலைப்படுங்கள்…

குறிப்பு –

கலை உலகிற்குள் நுழைந்த குறுகிய காலத்திலேயே உலகத் தமிழர்களின் கவனத்தை ஈர்த்துள்ள கில்மிசா, தனது பேச்சு வழக்கிலும் ஈழத்தமிழின் உன்னதத்தை உலகிற்கு உணர்த்த வேண்டும்…

உலகளாவிய ஊடகச் சூழலில் தமிழ்நாட்டுத் தமிழ்ப் பேச்சு முறையையோ, ஆங்கிலக் கலப்பையோ நகலெடுக்காமல், ஈழத்தமிழ் மண்ணுக்கே உரிய தனித்துவமான உச்சரிப்புடனும் மொழி நடையுடனும் அவர் உரையாடுவது மிக ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

தொன்மைச் சிறப்பும் இலக்கணச் சுத்தமும் நிறைந்த ஈழத்துத் தமிழ் உரைநடை, உலகத் தமிழர்கள் மத்தியில் எப்போதுமே பெரும் மதிப்பிற்குரியது.

உலக அரங்குகளில் கில்மிசா தனது அடையாளமாக தனது மண்ணின் மொழி நடையைத் துணிவோடு கையாளும்போது, அது அவரது கலை ஆளுமைக்கு மேலும் கம்பீரத்தையும், உலகத் தமிழ் நெஞ்சங்களில் ஒரு தனித்துவமான சிம்மாசனத்தையும் பெற்றுத்தரும் என்பதில் சந்தேகமேயில்லை.

அ.நிக்ஸன்-

பத்திரிகையாளர்-

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.