* காதால் கேட்பவை எல்லாம் உண்மையான தகவல்கள் அல்ல!
* பொறுப்புள்ள சமூக வலைத்தளப் பதிவுகளும் உண்டு!
* சில யூரியூபர்களின் நோக்கம் என்ன?
— — —
யாழ்ப்பாணம் கோப்பாயில் 17 வயதுடைய இளம் தவில் வித்துவான் ஒருவர் மரணமடைந்துள்ளார். அந்தச் சிறுவயதுக் கலைஞனின் மறைவுக்கான காரணத்தை மக்கள் தேடுவது இயல்பானதே.
ஏனெனில், அவன் ஒரு சிறுவன் மட்டுமல்ல; மக்கள் மனங்களை வென்ற கலைஞன்.
சிறு வயதிலேயே இக்கலையை அவன் எவ்வாறு இவ்வளவு பரிபூரணமாகக் கற்றுத் தேர்ந்தான் என்ற வியப்பு எல்லோர் மனங்களிலும் எழுந்திருந்தது.
ஆகவே, அவனது ஆற்றலை எண்ணிப் பெருமிதமும் மகிழ்ச்சியும் கொண்டிருந்த சூழலில் நிகழ்ந்த இந்தத் திடீர் மரணம், மக்களிடையே கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்புவது இயல்பான சமூக வழக்கமே.
இருப்பினும், அத்தகைய கேள்விகளும் சந்தேகங்களும் சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாகும்போது, அந்த இளம் கலைஞனின் ஆற்றலையோ, அவனது பெருமையையோ குறைத்து மதிப்பிடுவதாக அமையக் கூடாது.
அது அவனது பெற்றோர், உறவினர்கள், நண்பர்களின் மனங்களைப் புண்படுத்துவதாகவும் இருக்கக் கூடாது.
அவனது பிரதேசத்தைக் கொச்சைப்படுத்துவதாகவும் அமையக் கூடாது.
யாழ்ப்பாணத்தில் தென்மராட்சி, வடமராட்சி உள்ளிட்ட பிரதேசங்களுக்கு என்று தனித்துவமான கலைப் பாரம்பரியங்கள் உண்டு…
ஆகவே, ஒரு கலைஞனின் மரணம் குறித்துச் சமூக அக்கறையுடன் கருத்துத் தெரிவிக்கும்போது, தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை விமர்சனங்களாக மாற்றிவிடக் கூடாது.
மரணத்திற்கான காரணங்கள் எதுவாகவும் இருக்கலாம்.
ஆனால், அவன் சிறு வயதிலேயே பாடசாலைக் கல்வியை இடைநிறுத்திவிட்டான் என்று ஒரு சிலரும், பெற்றோர் அவனை வைத்துப் பணம் உழைப்பதற்காகவே அவனது கல்வியை நிறுத்தினர் என்று வேறு சிலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
மற்றொரு சாரார், 17 வயதில் அவனுக்குக் காதல் ஏற்பட்டுவிட்டது என்றும்; கோவில் திருவிழாக்களில் தவில் வாசிப்பதற்குத் தனது முறை வரும் வரை, அவன் கைத் தொலைபேசியை பார்த்துக் கொண்டிருந்தான் என்றும் கதை சொல்கின்றனர்…
மேலும் ஒரு தரப்பினர், அவன் ஒரு பெண்ணுடன் உரையாடிக் கொண்டிருந்த வாட்ஸ்அப் (WhatsApp) திரைக்காட்சியைச் (Screenshot) சமூக வலைத் தளங்களில் பகிர்ந்துள்ளனர்.
அவன் ஒரு சிறுவன் மட்டுமல்ல; தமிழர்கள் அனைவரும் அறிந்து கொண்டாடிய, நேசித்த ஒரு கலைஞன்.
அவனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி முழுமையாக அறியாமல், அல்லது அறிந்திருந்தாலும் கூட, அவன் மறைந்த பின்னர் இவ்வாறான பதிவுகளை வெளியிடுவது மிக மோசமான சமூக நாகரிகமற்ற பண்பாகும்.
இத்தகைய சூழல்களில், சிங்களச் சமூக வலைத்தளங்களைப் பார்த்தால், அவர்கள் பல்வேறு உணர்வுபூர்வமான சமூக விவகாரங்களை எவ்வளவு பக்குவமாகக் கையாள்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ள முடியும்…
”கருத்துச் சுதந்திரம்”, “கருத்து வெளியிடுவது ஜனநாயகம்” என்று இங்கே சிலர் வாதிடக்கூடும்.
ஆனால், உலகின் எந்தவொரு நாட்டிலும் இதற்கு என்று ஓர் எல்லை உண்டு. இடம்பொருள் ஏவல் அறிந்துதான் எதையும் பேசவோ எழுதவோ வேண்டும்.
அதுவும், ஒருவர் மரணித்த பின்னர் அவரைப் பற்றி வெளியிடப்படும் கருத்துகளில் மிகுந்த பக்குவம் இருக்க வேண்டும்.
ஓர் இளம் கலைஞன் ஏன் மரணமடைந்தான் என்ற கேள்விக்கு விடை தேடுவது அவசியமானதுதான்.
சமூகப் பொறுப்பு மற்றும் சமூக அர்ப்பணிப்பு நோக்கில் அத்தகைய தேடல் நியாயமானதாகவே இருக்கும்.
அத்துடன், எதிர்கால இளம் சந்ததியினருக்கு அத் தேடல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உதவும்.
ஆனால், சிலர் இதனைப் பொதுவெளியில் எழுதும்போது தனிப்பட்ட பொறாமை, பிரதேசவாதம் போன்ற தவிர்க்க வேண்டிய முறையற்ற வாதங்களை முன்வைக்கின்றனர்.
அவ்வாறு செய்துகொண்டே, தங்களை முற்போக்குச் சிந்தனையாளர்களாகவும், நியாயவாதிகளாகவும் காட்டிக்கொள்ள முனைவதுதான் வேடிக்கை…
இக் கலைஞனின் மரணம் குறித்துச் சமூக வலைத்தளங்களில் வெளியான சில பொறுப்புள்ள பதிவுகள் வரவேற்கத்தக்கவை.
ஆனால், தங்களை ஊடகவியலாளர்களாகக் காட்டிக்கொள்ள முயலும் சில யூரியூபர்களும் (YouTubers), ஊடக அறம் சாராத சமூக வலைத்தளப் பதிவர்களும் இத்தகைய பொறுப்புள்ளவர்களின் பதிவுகளை ஆழமாக வாசித்துப் பழக வேண்டும்.
வெறும் பார்வையாளர்களையும் (Views) விருப்பக் குறியீடுகளையும் (Likes) மாத்திரம் இலக்காகக் கொள்ளாமல், மறைந்த ஒரு கலைஞனின் மரணத்தை எவ்வாறு கண்ணியமாக அணுக வேண்டும் என்ற சமூகப் பொறுப்பை அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.
இக்கலைஞன் மரணித்த பின்னர், சமூக வலைத்தளங்களில் வெளியான சில பதிவுகளை உற்றுநோக்கியபோது, புறநானூற்றின் சில பாடல் வரிகள் நினைவுக்கு வந்தன.
“நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்,அல்லது செய்தல் ஓம்புமின்; அதுதான்எல்லாரும் உவப்பது; அன்றியும்,நல்லாற்றுப் படூஉம் நெறியுமார் அதுவே!”
அதாவது, உங்களால் ஒருவருக்கு நல்லது செய்ய முடியாவிட்டாலும் பிரச்சினையே இல்லை. ஆனால் தீமை செய்யாமல், அடுத்தவர் மனதைப் புண்படுத்தாமல் இருங்கள்.
அதுவே எல்லாரும் விரும்பும் சமூக நாகரிகப் பண்பாகும் என்பதே இப்பாடலின் உள்ளடக்கப் பொருளாகும்.
ஆனால், தவறுகளை, நாகரிகமாகவும் அறிவுசார்ந்தும் சுட்டிக்காட்டும் ஆரோக்கியமான கருத்துக்களைத் துணிவோடு தாராளமாக எழுதுங்கள்…
ஒவ்வொருவரின் கைகளிலும் இருக்கின்ற சமூக வலைத் தளங்களைச் சமூக விழிப்புணர்வு என்னும் நோக்கில் மாத்திரமே பயன்படுத்துங்கள்.
இன்று போரினால் பாதிக்கப்பட்டு, இனஅழிப்பை எதிர்கொண்டிருக்கும் பலஸ்தீன மக்களின் சமூக வலைத்தளப் பதிவுகளை உற்றுநோக்க வேண்டும்.
ஒரு சில விதிவிலக்குகளைத் தவிர, அவர்களின் பதிவுகள் ஒவ்வொன்றும் பிரதான ஊடகங்களின் அறநெறிகளுக்கும் ஒழுக்க விதிகளுக்கும் ஈடுகொடுக்கக் கூடிய வகையிலேயே பொறுப்புடன் கையாளப்பட்டு வருகின்றன.
அதேபோன்று, ஒரு சிலவற்றைத் தவிர்த்துப் பார்த்தால், சிங்களச் சமூக வலைத்தளங்களும் யூடியூப் (YouTube) பக்கங்களும் கூட இதற்குச் சிறந்த உதாரணங்களாகும்.
ஆகவே, அத்தகைய பக்குவத்தையும் அறத்தையும் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் தமிழர்களில் பலரும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
அ.நிக்ஸன்-
பத்திரிகையாளர்-