2009 ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பேரவலத்துடன் முடிவுற்ற யுத்தம் பேசுகின்ற கதைகள் பல,அவற்றுள் பேசாப்பொருளாக மறைந்திருக்கும் துயரங்களும் பல. வேருடன் தூக்கி எறியப்பட்ட மக்களை வீதி வீதியாகத் தேடிச்சென்று மருத்துவம் பார்த்த மகத்தான மனிதர்கள் பற்றிய கதை இது…..வன்னி மண்ணின் மகோன்னதமான காலத்தில் மருத்துவதுறையின் எழுச்சியும் வீழ்ச்சியும் எவ்வாறு நடந்தது என கூறும் கதை இது….
முள்ளிவாய்க்கால் வைத்தியர் என அறியப்பட்ட வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி அவர்கள் கிளிநொச்சியில் பிறந்து அதேமாவட்டத்தில் கல்வி கற்று மருத்துவ பீடம் சென்றவர். வைத்தியராக வெளியேறியவர் இன்றுவரை அந்த மண்ணில் சேவைசெய்து வருகின்றார். முள்ளிவாய்க்கால் வரை தனது அர்ப்பணிப்பான சேவையால் பல உயிர்களை காத்து நின்றவர். அந்த நாட்களில் மக்களுடன் அவரும் அவருடன் இருந்த மருத்துவக்குழுவும் செய்த சேவைகள் பற்றி மனம் திறக்கின்றார் …..
– வணக்கம்LONDON –
போர் உக்கிரம் அடைந்தது. மன்னார், முழங்காவில் பிரதேச மக்கள் கிளிநொச்சி நகரை அண்டிய பகுதிகளில் குடியேறினார்கள். ஏற்கனவே பல தடவை இடம்பெயர்ந்து அல்லல் உற்றவர்கள் வைத்திய சேவைக்காக அடிக்கடி வந்து சென்றார்கள். போரில் காயப்பட்ட மக்கள் அனைவரும் அந்நாளில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிப்பட்டனர்.
இவ்வாறு சிகிச்சை தொடர்ந்து கொண்டுடிருக்கையில் கிளிநொச்சி பகுதியில் வரட்சி காரணமாக குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டது. பொது வைத்தியசாலை நகரை அண்டிய சில பிரதேசங்களுக்கு நகரில் இருந்த நீர் தாங்கியிலிருந்து நீர் வழங்கப்பட்டது. (தற்போது இந்நீர் தாங்கி சரிந்து கிடக்கின்றது.) எனினும் இந்நீர் போதியளவு சுத்திகரிக்கப்படவில்லை. இதனால் பாசி கலந்த நீரை வைத்தியசாலை தேவைகளுக்கு பாவிக்க வேண்டி இருந்ததுடன் அது பல சிக்கல்களை ஏற்படுத்தியது. இது விடயமாக சம்மந்தபட்ட தரப்பினை நாடியும் போர் சுழல் காரணமாக தீர்வு எட்டப்படவில்லை. இவ் விடயத்தை வைத்தியசாலை உத்தியோகத்தர்களோடு கலந்துரையாடிய போது சில உத்தியோகத்தர்கள் தாங்கள் அந்த நீர் தாங்கியை ஏறி சுத்தம் செய்வதாக முடிவெடுத்தனர்.
பங்குனி 2008ல் நீர் தாங்கியில் ஏறி கொள்ளளவு பகுதியை சுத்தம் செய்ய அரம்பித்தனர். ஆரம்பத்தில் குளோறின் இட்டு நீர் வெளியேற்றப்பட்ட பின்னர் உட் பகுதியில் இறங்கி சுமார் 2 அடி வரை காணப்பட்ட பாசிகள் சுரண்டி கழுவி’ சுத்தம் செய்யப்பட்டது. இவ்நீர் தாங்கியில் ஏறியவர்கள் சுத்தம் செய்த பின்னா் நீர் தாங்கியின் முகட்டு பகுதியில் ஏறி களைப்பாறினார்கள். இந்த பாதுகாப்பு அற்ற நிலை எனக்கு மனதில் ஓர் பயத்தை உண்டு பண்ணியது. இவர்களில் பலரும் பிந்நாளில் இடம்பெயர் வைத்தியசாலைகளில் கடமையாற்றும் போது எந்த வித அச்சமும் இன்றி கடமையாற்றினார்கள். இடம்பெயர் வைத்தியசாலைகள் அருகில் செல்வீச்சு இடம் பெற்றாலும் பாதுகாப்பான பகுதிக்கு செல்லமாட்டார்கள் மாறாக செல்வீச்சு இடம்பெற்ற பகுதிகளுக்கு சென்று முதலுதவியை செய்து வந்தனர்.
பிரதான நீர் தாங்கியிலிருந்து குடிநீரை பெற்றாலும் வைத்தியசாலை வடக்கு புற எல்லையில் ஓர் மிகப் பழைய கிணற்றை திருத்தி நீர் தேவைக்காக பாவிப்பது பற்றி கலந்தாலோசிக்கப்பட்டது. யுனிசெப் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் துணை நாடப்பட்டது. எனினும் பின்னர் வைத்தியசாலை மேம்பாட்டு பேரவையின் நிதி உதவியில் புதிதாக ஒரு கிணற்றை அமைப்பது என தீர்மானிக்கப்பட்டது. வைத்திய கலாநிதி சுவேந்திரன் முழு பொறுப்பையும் ஏற்றுகொண்டு மிகப் பெரிய கிணறு ஒன்றை கட்ட தீர்மானித்து 2௦ அடி விட்டம் கொண்ட விவசாய கிணறு (Agriculture well) அமைக்கப்பட்டது. அப்போது பொருளாதார தடை இருந்தமையால் ஒரு பைக்கற் சீமெந்தின் விலை ரூபா 25000 ஆக காணப்பட்டது. எனினும் அவ் விலைக்கே கொள்வனவு செய்யப்பட்டு கிணறு வேலைகள் பூர்த்தியாக்கப்பட்டது.
தற்போது பொது வைத்தியசாலைக்கு நீரை அக்கிணற்றில் இருந்தே பெறுகின்றனர். வைத்திய கலாநிதி சுவேந்திரனின் திட்டமும் முயற்சியும் பாராட்டுக்குரியது.
தொடரும்………..
வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி | கிளிநொச்சியில் இருந்து
முன்னைய அங்கங்கள்…….
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-1/
http://www.vanakkamlondon.com/mullivaikaal-2/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-3/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-4/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-5/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-6/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-7/