2009 ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பேரவலத்துடன் முடிவுற்ற யுத்தம் பேசுகின்ற கதைகள்பல, அவற்றுள் பேசாப்பொருளாக மறைந்திருக்கும் துயரங்களும் பல. வேருடன் தூக்கி எறியப்பட்ட மக்களை வீதி வீதியாகத் தேடிச்சென்று மருத்துவம் பார்த்த மகத்தான மனிதர்கள் பற்றிய கதை இது…..வன்னி மண்ணின் மகோன்னதமான காலத்தில் மருத்துவதுறையின் எழுச்சியும் வீழ்ச்சியும் எவ்வாறு நடந்தது என கூறும் கதை இது….
முள்ளிவாய்க்கால் வைத்தியர் என அறியப்பட்ட வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி அவர்கள் கிளிநொச்சியில் பிறந்து அதேமாவட்டத்தில் கல்வி கற்று மருத்துவ பீடம் சென்றவர். வைத்தியராக வெளியேறியவர் இன்றுவரை அந்த மண்ணில் சேவைசெய்து வருகின்றார். முள்ளிவாய்க்கால் வரை தனது அர்ப்பணிப்பான சேவையால் பல உயிர்களை காத்து நின்றவர். அந்த நாட்களில் மக்களுடன் அவரும் அவருடன் இருந்த மருத்துவக் குழுவும் செய்த சேவைகள் பற்றி மனம் திறக்கின்றார் …..
– வணக்கம்LONDON –
இவ்வாறு மக்கள் இடம்பெயர்ந்து வட்டக்கச்சி, தர்மபுரம், கல்லாறு பகுதிகளில் மிகவும் நெருக்கமாக குடியேறினார்கள். இதனால் அவர்களுக்கான அடிப்படை சுகாதார வசதிகளை செய்து கொடுக்க வேண்டியது கட்டாயமானதாக இருந்தது. இது எமக்கு மிகுந்த சவாலானதாகவும் இருந்தது. போரின் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருந்த அதே வேளை மக்கள் அடிப்படை சுகாதார வசதி இல்லாமல் இருப்பதால் மலேரியா, வயிற்றோட்டம் போன்ற தொற்று ஏற்பட கூடிய அபாயம் இருந்தது. வெளிக்கள பணிகளில் மருத்துவ மாதுக்களும், சுகாதார பரிசோதகர்களும் இடம்பெயர்ந்த இடங்களில் கடைமையாற்றும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர். அவர்களுக்கான அடிப்படை சுகாதார வசதிகளை எம்மால் முடிந்தளவு செய்து கொடுத்தோம். அத்துடன் அவர்களுக்கு நோய் தொற்றில் இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ளவதுக்கான விழிப்புணர்வுவையும் செய்து வந்தோம்.
மருத்துவ மாதுக்கள் வாழ்க்கைநலன் கிளினிக்குகளை இடர்களின் மத்தியில் நடாத்தி வந்தனர். குழந்தைகளுக்கு வேண்டிய தடுப்பூசிகள் மருந்துகள் இடம்பெயர்ந்து தற்காலிக வைத்திய சாலையில் மின்சார வசதிகளை தற்காலிக மின்பிறப்பாக்கிகள் மூலம் வழங்க சில உத்தியோகத்தர்கள் கடுமையான முயற்சி எடுத்தனர். தற்காலிக இணைப்புகள் மூலம் இரவு நேரங்களில் மின்குமிழ்கள் மற்றும் அவசர சிகிச்சை பிரிவுகளில் இயங்க வேண்டிய மின் உபகரணங்களை இயக்கியமை எமக்கு உதவியாக இருந்தது. குறிப்பாக வைத்திய சாலையில் இரத்ததான பிரிவு மற்றும் தொழில் நுட்ப பிரிவை சேர்ந்த சில உத்தியோகத்தர்கள் கடைசி நாள் வரை இந்த கடமைகளை சிரமத்துக்கு மத்தியில் நிறைவேற்றி இருந்தனர்.
ஒரு மனிதனின் அடிப்படை தேவைகளான உடை, உறையுள், உணவு என்பன போர் காலத்தில் மக்களுக்கு கிடைப்பதற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. மக்கள் எப்படியாவது வாழ வேண்டிய நிலையில் இருந்தமையால் தாங்கள் போய் இருந்த இடங்களில் கிடைத்த ஓலைகள் மற்றும் தடிகள் போன்ற பொருட்களை கொண்டும் தொண்டு நிறுவனங்களால் வழங்கப்பட்ட தற்காலிகத் குடில்கள் அமைப்பதக்கு தேவையான பொருட்களைக் கொண்டும் சிறு குடில்களை அமைத்து தமது பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொண்டு வாழத்தொடங்கினர்.
இடம்பெயந்த இடங்களில் பொதுமக்கள் அடிப்படை சுகாதார வசதிகளை பின்பற்றினர். பல சிரமங்கள் இருந்தாலும் சுத்தமான குடி நீர் பாவிப்பது, தற்காலிக மலசல கூடங்களை பாவிப்பதில் கவனம் செலுத்தினர். மக்களுக்கு இருந்த அடிப்படை அறிவு பாரிய பின்விளைவுகளை தடுக்க கூடியதாக இருந்தது. குறிப்பாக சுகாதார திணைக்கள உத்தியோகத்தருடன், நலவாழ்வு அபிவிருத்தி நிறுவனம் தொற்றுநோய் தடுப்புபிரிவு சில வெளிக்கள வேலைகளில் ஈடுபட்டு மக்களை பாதுகாத்தமையே இங்கு குறிப்பிடப்பட வேண்டும்.
இவ்வாறு தற்காலிகமாக குடியேறிய மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பது மிகவும் கஷ்டமாகவே இருந்தது. அவர்கள் இருந்த இடங்களில் குடிப்பதற்க்கு ஏற்ற வகையில் சுத்தமான குடிநீர் இருக்கவில்லை. இதனால் பல தொற்று நோய்கள் அவர்களை தாக்கும் அபாயம் காணப்பட்டது. இங்கு குழந்தைகள், சிறுவர்கள், வயோதிபர்கள் தான் மிகவும் பாதிப்படையும் நிலையில் இருந்தனர். இதனை கருத்தில் கொண்டு தொண்டு நிறுவனங்கள் மற்றும் ஒரு சில மனிதாபிமானம் உள்ளவர்கள் மூலம் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த குடிநீர் தாங்கிகள் மூலமாக மக்கள் தமது தேவைகளை ஓரளவு நிறைவேற்றக் கூடியதாக இருந்தது.
அப்போது மக்களிடம் ஒரேயொரு எண்ணம் மட்டுமே இருந்தது. எப்படியாவது தாம் உயிர் வாழ்ந்தால் போதும் என்பதாகும்………………………………………………..
தொடரும்……….
வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி | கிளிநொச்சியில் இருந்து
முன்னைய அங்கங்கள்…….
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-1/
http://www.vanakkamlondon.com/mullivaikaal-2/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-3/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-4/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-5/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-6/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-7/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-8/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-9/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-10/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-11/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-12/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-13/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-14/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-15/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-16/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-17/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-18/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-19/