Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைவிபரணக் கட்டுரை எதைப் பற்றி பேசுகின்றது தாமரைச்செல்வியின் உயிர்வாசம்? யசோதா பத்மநாதன்.

எதைப் பற்றி பேசுகின்றது தாமரைச்செல்வியின் உயிர்வாசம்? யசோதா பத்மநாதன்.

7 minutes read

ஒரு புது வெளிச்சம்

காலம் செதுக்கிய சிற்பி தாமரைச் செல்வி.

வன்னி மண் கடைந்தெடுத்துத் தந்த காலத்தின் கண்ணாடி.

அவர் கடதாசிக்காலத்திலும், கணனிக்காலத்திலும் வன்னியின் வாழ்வைச் செவ்வனே செதுக்கும் கைதேர்ந்த கதைச்சிற்பி என அறியப்படுபவர். வன்னியின் போருக்கு முன் – போர் காலம் – போருக்குப் பின் – என்ற பெரு  மாற்றங்கள் நிகழ்ந்த முக்கிய காலகட்டத்தின் தவிர்க்க முடியாத இலக்கியப் பிரதிநிதி.

வயலும் வாழ்வும்; காடும் களனியும்; உழைப்பும் உறுதியும்;  தன்மானமும் அடங்காத் தன்மையும்; வன்னி மண்ணின் தனித்துவமான அழகு. அது யுத்தத்திற்கு முன்பும்; யுத்த காலத்தின் போதும்; யுத்தத்தின் பின்பும்; எவ்வாறாகத் தன்னை அடையாளப்படுத்தியதோடு தக்கவைத்தும் கொண்டிருந்தது; இருக்கிறது என்பதை இவரது படைப்புகளை மாத்திரம் பார்க்கும் ஒருவர், நேர்த்தியாகவும் தொடர்ச்சியாகவும் சலிக்காத வகையிலும் கலைத்துவத்தோடு உணர்ந்து கொள்ளலாம்.

அவை கதைப்புலங்களைக் கொண்டிருந்தாலும் ஆவணத்தன்மை கொண்ட வரலாற்றுத் தார்ப்பரியங்களை உள்ளே கொண்டுள்ளவை. அதன் வழியே தாமரைச்செல்வி ஒரு ’காலச் சிற்பி.’ காலத்தை மொழியால் செதுக்கியவர். அவைகளை வாசிப்பது என்பது இருந்த இடத்தில் இருந்த படி காலங்களைக் கடக்கும் ஒரு பயண அனுபவம்.

அதன் தொடர்ச்சியாகவும் நீட்சியாகவும் இன்று வெளிச்சத்திற்கு வருகிறது போருக்குப் பின்பான ‘படகு மனிதர்’ வாழ்வு சொல்லும் ’உயிர்வாசம்.’

இந் நாவல், ஊர்வாழ்வில் இருந்து தப்புதலும் மண்ணை இழத்தலின் வலிகளும், படகுப்பயண அனுபவங்களும் பயங்கரங்களும், புதியநாட்டின் வரவேற்புகளும் இங்குள்ள நிலைகளும் எனப் பயணித்தலின் வழி அகதி மாந்தர்களின் ஒரு புதிய வாழ்வியல் நெருக்கடிகளை பதிவு செய்கிறது. அவர்கள் வாழ்வா சாவா என்ற போராட்டத்தோடு கப்பல் ஏறிய சமான்யர். அந்த அபாயகரமான கடல் பயணத்தில் மாண்டு போனவர்கள் போக, உயிர் தப்பியவர்கள் வந்துவிட்டோம் என்று மூச்சுவாங்க முடியாமல் ‘எண்ணைக்குத் தப்பி நெருப்புக்குள் விழுந்த கதையாக’ ஆகிப்போன நிலையினை சொல்லுமிடங்கள் மிகுந்த வலி மிக்கவை; தமிழுக்குப் புதிதானவை; மேலும், ஏனைய தமிழர்கள் அனுபவிக்காதவையும் கூட.  இவர்களின் அனுபவங்கள் ஈழ/ புகலிட தமிழ் இலக்கியத்திற்குக்  கிட்டிய  புது வரவு; புது வெளிச்சம்; புதுப் பார்வை என்று துணிந்து கூறலாம்.

முன்னர் சொன்னது போல் அகதிகளாக அல்லலுறும் அப்பாவிகளின் அவலங்கள், அழகியல், ஆச்சரியங்கள், அனுபவங்களை கலைத்துவத்தோடு ஓர் இனத்தின் வாழ்க்கைக் கோலமாக வெளிக்கொணரும் இதன் நிதர்சனமான காட்சிக்கோலங்கள் தாயகத் தமிழனுக்கும் புலம்பெயர்ந்த தமிழனுக்கும் இடையே இருக்கும் காலதேச சிந்தனையின் இடைவெளியையும் நுட்பமாகப் பதிவு செய்கிறது.

உயிர்வாசம் – நானறிந்தவரை அவுஸ்திரேலியாவுக்கு வந்த படகு மனிதர்களை  மையப்படுத்தி வெளிவரும் முதல் நாவல். அந்தவகையில் இது அவுஸ்திரேலிய தமிழர் வரலாற்றின் பெரு ஆவணமுமாகும்.

தேர்ந்த; சுமார் 46 வருடங்களுக்கு மேலான; அனுபவமுள்ள, கதை சொல்லியான; இலங்கையின் சாகித்திய விருது பெற்ற தாமரைச் செல்வி தற்போது அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வருகிறார். எழுத்தாளர்கள் எங்கு போனாலும் இடறும் கருக்களைச் சேகரிக்கும் ’தொல்லியல் ஆய்வாளர்களுமாவார்’. உண்மை என்னும் உளியால் மனிதாபிமானக் கல்லில் செதுக்கிய சிற்பமாக இந்த உயிர் வாசம் முகிழ, தாமரைச் செல்வி கடந்த சில வருடங்களாக அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வருவதும் ஒரு முக்கிய காரணம். அதன் விளைவாக பலதையும் பாடுகளையும் நேரே கண்ட; சொன்ன, கேட்ட, அறிந்த சம்பவங்கள், அனுபவங்கள் பல வருடங்களாகக் கருக்கொண்டு இங்கே உயிர்வாசமாக ஜனித்திருக்கிறது என்பதை அதில் வரும் மிகைப்படுத்தல்கள் இல்லாத ‘உண்மைகள்’ உணர்த்துகின்றன.

இதில் வரும் ஏதேனும் ஒரு பாத்திரம் நாம் நிச்சயம் சந்தித்த ஒருவராக இருக்கும்.

அந்த வகையில் இது ஒரு பிரதான அவுஸ்திரேலியத் தமிழர் வரலாற்றுக் காலகட்டத்துக்கும் மிக முக்கியமான கலைச் செல்வம்.

போரினால் புலம்பெயர்ந்த அவுஸ்திரேலியத் தமிழரின் இறுதி அலை 2009ம் ஆண்டுக்குப் பின் நிகழ்ந்தது. இறுதிப் போர் அவலங்கள் நிகழ்ந்ததன் பின்பான இக்காலம் இதற்கு முன்பான அவலங்களில் இருந்து வேறுபட்டதும் தனித்துவமானதுமாகும். உள்நாட்டிலும் சரி வெளிநாட்டிலும் சரி அவர்களை உலகமும் அரசுகளும் மக்களும் பார்க்கும் பார்வைகள் பல்வேறு விதங்களில் மாறுபட்ட அணுகுமுறைகளைக் கொண்டிருக்கின்றன. அவை கதை மாந்தரில் நிகழ்த்தும் செல்வாக்கினை நாவலின் அடிப்படை வாசமாக எங்கும் நுகரலாம்.

அவுஸ்திரேலியாவைப் பொறுத்தவரை கூட இது ஒரு முக்கியமான காலகட்டம். அதனை கூட நாம் மூன்றாகப் பிரித்துப் பார்க்கலாம்.

1. அவுஸ்திரேலிய மக்களின் மனநிலையில் ஏற்பட்ட மாற்றங்கள்

2. அவுஸ்திரேலியத் தமிழரின் நோக்கு நிலையில் ஏற்பட்ட மாற்றங்கள்

3. அவுஸ்திரேலிய அரசியலில் அகதிகள் பற்றிய கொள்கையில் ஏற்பட்ட மாற்றங்கள்

இவைகள் மூன்றும் ஒன்றை ஒன்று சந்திக்கிற ஒரு முக்கியமான ஜலசந்தியில் இக்கதை முகிழ்கிறது. திரள்கிறது. ஒரு புறம் அகதிகளும் மறுபுறம் அவுஸ்திரேலிய அரசும் நிகழ்த்தும் இந்த பாற்கடல் கடைதலில் வந்த அமுதமென இந் நாவல் திரண்டிருக்கிறது.

2009 க்குப் பிற்பான காலப்பகுதியில் ஈழத்தவரைப் போலவே உலகின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் அகதிகளாக அலை அலையாக அவுஸ்திரேலியாவுக்கு படகுகள் மூலம் வந்திறங்கினார்கள். அப்போது ஆட்சியில் இருந்த  தொழில்கட்சியினால் அவர்களுடய வருகையினையும் அதனால் எழுந்த உள்நாட்டு அழுத்தங்களையும் சமாளிக்க முடியவில்லை. பொதுவாக வரிசையாக நின்று சகலதிலும் சட்டத்தையும் ஒழுங்கையும் பின்பற்றும் மக்களால் இந்த அலை அலையான வருகையின் அழுத்தங்களை எதிர்கொள்ள இயலவில்லை.

பல வருடங்களாக ஐக்கியநாடுகள் சபையூடாக தம்மைப் பதிந்து விட்டு இடைத்தங்கல் நாடுகளில் காத்திருக்கும் அகதிகள் மீண்டும் பின் தள்ளப்படுவதையும் ’வரிசையை இடித்துக்’ கொண்டு இடையில் வந்து நிற்கும் இந்த அகதிகளின் விண்ணப்பப் படிவங்கள் பரிசீலிக்கப் படுவதையும் இம் மக்களால் எற்றுக் கொள்ள முடியவில்லை.

மக்களின் அபிப்பிராயங்கள் செல்வாக்குச் செலுத்தும்  இந்த ஜனநாயக ஆட்சி நிலவும் நாட்டில் அப்போது இருந்த தொழில்கட்சியை இறக்கி  லிபரல் கட்சி தன் ஆட்சியை அமைக்கும் வகையில் இந்த அகதிகள் பிரச்சினை வலுவாக மக்கள் மனங்களில் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. 2013 செப்.7 இல் நடந்த தேர்தலில் இதனைக் காரணம் காட்டியே ரொனி அபேர்ட் ஆட்சிக்கு வந்தார்.

அன்றிலிருந்து இன்றுவரை பல மனித நேய அமைப்புக்கள் போர்க்கொடி உயர்த்தியும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தியும் வழக்குகளைப் பதிவு செய்தும் வந்தாலும் இன்றுவரை லிபரல் ஆட்சியே நிலவுகிறது என்பது ஒரு முக்கியமான செய்தியாகும்.

சுனாமியின் போது இலட்சக்கணக்கான பணத்தை அள்ளிக் கொடுத்த மக்கள்; சர்க்கஸ்சின் போது விலங்குகள் துன்புறுத்தப் படுகிறது என்ற ஒரே காரணத்துக்காக வெளிநடப்புச் செய்து சர்க்கஸ் கம்பனியை தன் சொந்த நாட்டுக்கே அனுப்பிவிடச் செய்த பள்ளிச் சிறார்களைக் கொண்ட தேசம்; தியனமென் சதுக்கத்தில் சீனப் பல்கலைக்கழக மாணவர்கள் கொலை செய்யப்பட்ட போது, இங்கு படித்துக் கொண்டிருந்த அனைத்து சீன மாணவர்களுக்கும் நிரந்தர வதிவிட உரிமையை மறுநாளே வழங்கிய அரசாங்கம்; வியற்னாமிய அகதிகள் படகு மூலம் வந்த போது கைகொடுத்து தூக்கி விட்ட அரசு இன்று படகில் வந்த அகதிகள் தொடர்பில் ஈரமின்றி இருப்பதன் பின்னணி இது தான்.

சட்ட விரோதமாக உள்ளே வந்தார்கள் என்பதும்; உயிர்பாதுகாப்பின்றி பொருளாதார சுபீட்சமே நோக்கம் என நம்பவைக்கப்பட்டதும்; அவர்களின் பராமரிப்புச் செலவுக்கு ஒதுக்கப்படும் பணம், நாட்டின் பொருளாதாரத்தில் கனிசமான தாக்கத்தைச் செலுத்தும் என்பதும்; நாட்டின் தேசியபாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் என்பதும் அதனோடு இணைந்து வந்த காரணங்களாகிப் போயின. அதனால் தான் அகதிகளுக்கு அவுஸ்திரேலியா அபயம் அளிக்க வேண்டுமா என்ற கருத்துக் கணிப்பின் போது 75%மான மக்கள் ஆம் என்றும்; படகு அகதிகளை ஏற்கவேண்டுமா என்ற கேள்விக்கு மூன்றில் ஒருவர் மட்டும் ஆம் என்றும் பதிலளித்திருந்தனர்.

இது இவ்வாறு இருக்க, அவுஸ்திரேலியாவில் வாழும் தமிழர்களது மனநிலை எப்படியாக இருக்கிறது என்பதும் அவதானிக்க வேண்டிய ஒன்றுதான்.

அவுஸ்திரேலியப் பெரும்பாண்மைத் தமிழர்களைப் பொறுத்தவரை இவர்கள் ஏனைய நாடுகளுக்குச் சென்ற தமிழர்களை விட சற்றே வேறுபட்டிருப்பதற்கு இரண்டு மூன்று காரணங்களைச் சொல்லலாம்.

1. சீதோஷனம் மற்றும் ஆங்கில மொழி பாவனை –இதனால் இந் நாட்டைத் தெரிவு செய்து   இங்கு வந்தவர்கள்.

2. கல்வித்தகைமை வழி வந்தவர்கள்

3.பல தசாப்தங்களுக்கு முன்பே இங்கு வந்து ‘வேரூன்றி’ கல்வி தொழில் வாய்ப்புகளோடு ‘தக்கோன் எனத் திரி’பவர்கள்.

அவர்களால் இப் படகில் வந்த சமான்ய அகதிகளைச் சமனாக நடத்த முடியவில்லை என்பது பொதுவாக முன்வைக்கப்படும் குற்றச் சாட்டு. இருந்தாலும் மனித நேய அமைப்புகள் வழியாகவும் தனிப்பட்ட வழியிலும் பல தமிழர்கள் தம்மால் முடிந்ததை செய்தே வருகிறார்கள் என்பதை இந் நாவல் வழியாகவும் அறியலாம்.

இலங்கையர் என்ற எளிய வாழ்க்கைக்குச் சொந்தக்காரர்களான புதிதாக வந்தவர்கள் கனவுகளோடும் கற்பனைகளோடும் எதிர்பார்ப்புகளோடும் வந்து எவ்வாறாக இப்பெரு

தேசத்தின் மக்களதும், இங்குள்ள தமிழர்களதும், சட்டங்களதும், மனோபாவங்களோடு ‘உலகை’ எதிர்கொள்கிறார்கள் என்பதை ’இலங்கையர்’ மனநிலை வழி நின்று முன்வைக்கிறது நாவல்.

அந்த வகையில் இது ஈழத்துக்குரிய நாவலுமாகும்.

ஆகையால், ’இரட்டைக்குழந்தையாக’ ஈன்றெடுக்கப்பட்டு இன்று உங்கள் கையில் தவழும் இந் நாவல் ஒரு வரலாற்றுக் கனம் மிக்க வாழ்வைத் தாங்கி நிற்கிறது.

இந் நாவலை ஆறுதலாக வாசியுங்கள், ரசித்து, நின்று, நிதானித்து, உள்வாங்கி வாசியுங்கள்; நேரங்களை தெரிந்தெடுத்து வாசியுங்கள். வாசித்தவை கிரகிக்கப்பட கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். இது வரை  நாம் அறிந்திராத படகு வாழ்வும் முகாம் வாழ்வுமான வாழ்க்கைக் கோலங்கள் பல இங்கே பொதித்து வைக்கப்பட்டுள்ளன.  அவைகளை உள்வாங்குங்கள். ‘வாசனைகளை’ நுகருங்கள். அந்தக் கதை மாந்தர்களோடு நீங்களும் பயணியுங்கள்.

ஒரு விடயத்தை நாங்கள் எப்படிப் பார்க்கிறோம் என்பது; எங்கள் எண்ணங்களில்; தீர்மானங்களில்; முடிவுகளில்; செயல்பாடுகளில் எத்தகைய மாற்றங்களையும் வலிமையையும் செல்வாக்கையும் செலுத்தும் என்பதும்: எதிர்காலத்தைப் புரட்டிப் போடும் ஒன்றாக ’அந்தப் பார்வை’ எத்தகைய வீரியத்தைக் கொண்டிருக்கும் என்பதும் உணரப்பட்டால்,

இந் நாவலை  வாசித்து முடிக்கும் போது, நீங்கள் வேறொரு எண்ணமும் சிந்தனையும் பார்வையும் கொண்ட மனிதராக வெளியே வருவீர்கள் என்பதை நான் உறுதிபடக் கூறுவேன்.

மண்ணும் கடலும் வானும் வெளியும் கொண்ட ஒரு பெரும்பரப்பை உள்ளடக்கி, ஒரு காலகட்டத்து அகதித் தமிழனின் உண்மை வாழ்வைச் சுமந்து நிற்கும் ஒரு காலத்தின் பிரசவம் இந்த நாவல். அதே நேரம் மொழிவீச்சுகளுக்குள்ளும் சொல்லடுக்குகளுக்குள்ளும் மறைந்து போகாத எளிமை மிக்கதும் ஆகும். அது உங்களுக்குச் சுட்டிக் காட்ட இருக்கும் ’வெளிச்சப்புள்ளி’ தெளிவானது; வலுவானது; பிரகாசம் மிக்கது. பார்வையையும் பாதையையும் சீர் செய்யும் ஆற்றல் மிக்கது. அதுவே இந் நாவலின் பெரு வெற்றியுமாகும். அந்த வகையில் இதன் சமூகப்பணி மகத்தானது.

இனி நான் உங்களுக்கிடையே ஒரு ’கடவுச் சொல்லாக’ நிற்கவில்லை. எத்தனையோ இலக்கிய ஜம்பவான்கள் இருக்கிற இந்த தமிழ் இலக்கிய உலகில், ஓர் இலக்கியப் பிரியை என்ற ஒரு சிறு தகுதிப்பாடு தவிர்ந்த, வேறெந்த ஆற்றலும் இல்லாத என்னை, தன் நாவலுக்கான அபிப்பிராயத்தைத் தரும் படி கேட்டு, ஒரு சாதாரண ரசிகையை பெருமைப்படுத்திய தாமரைச் செல்விக்கு ஆத்மார்த்தமான என் வணக்கங்களையும் நன்றிகளையும் சமர்ப்பிக்கிறேன்.

இந்தக் ’காலச் சிற்பியின்’ நேர்மையான எழுத்து காலத்தைக் கடந்தும் வரலாற்றைப் பேசும்; வரலாறும் பேசும்.

உயிர்வாசம் உங்கள் முன்னே விரிந்து மணம் பரப்புகிறது;

நுகர்க!

யசோதா.பத்மநாதன். – சிட்னி.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More