Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைவிபரணக் கட்டுரை இலங்கை தமிழ் பெண்கள் பொட்டு வைக்க தடையா? என்ன சொல்கிறது அரசு?

இலங்கை தமிழ் பெண்கள் பொட்டு வைக்க தடையா? என்ன சொல்கிறது அரசு?

3 minutes read

புதிய கடவுச்சீட்டு விண்ணப்பிக்கும் சந்தர்ப்பத்தில் தமிழ் பெண்கள் நெற்றியில் பொட்டு வைத்து புகைப்படம் எடுப்பதை தவிர்க்க வேண்டும் என குடிவரவு குடிஅகல்வு திணைக்களம் அறிவித்துள்ளதாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன.

இந்த விடயம் இலங்கையில் தமிழ் பெண்கள் மத்தியில் ஒரு சர்ச்சையை தோற்றுவித்துள்ள நிலையில், இந்த விடயம் தொடர்பில் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் கயான் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

சர்வதேச நியமங்களுக்கு அமைய சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் விதிமுறையின் பிரகாரம், 2015ஆம் ஆண்டு புதிய சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதன்படி, கடவுச்சீட்டுக்கான புகைப்படத்தை எடுக்கும் போது முகத்தில் ஒப்பனைகளோ அல்லது வேறு எந்தவித மாற்றங்களும் இல்லாது புகைப்படத்தை எடுக்க வேண்டும் என சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பின் விதிமுறைகளில் உள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த விதிமுறைகளுக்கு அமைய 2015ஆம் ஆண்டு முதல் முகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தி கடவுச்சீட்டுக்கான புகைப்படம் எடுக்கப்படுமாக இருந்தால், அது குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் நிராகரிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

இந்த நடவடிக்கையானது தமிழ் பெண்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட ஒரு செயற்பாடு கிடையாது எனவும் அவர் கூறினார்.

எனினும், கடவூச்சீட்டுக்கான புகைப்படத்திற்கு பொட்டு வைத்து எடுத்தல், சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பின் விதிமுறைகளுக்கு முரணானது என கயான் மிலிந்த குறிப்பிட்டார்.

முகத்தில் செயற்கை மாற்றங்களை ஏற்படுத்தி புகைப்படம் எடுக்கப்படுவதாக இருந்தால், தமது கணினி கட்டமைப்பில் அது தன்னிச்சையாக நிராகரிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் தமிழ் பெண்ணான முகத்துவாரம் பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் வாணியிடம் வினவினோம்.

”தற்போதைய கடவூச்சீட்டில் முகத்தில் எந்தவித அடையாளங்களும் காட்டக்கூடாது என்ற ஒரு விடயம் வெளிவந்துள்ளது. அந்த விடயத்தை திருமணமான பெண் என்ற விதத்தில் வன்மையாக நான் கண்டிக்கின்றேன். காரணம் எமது தமிழ் கலாசாரத்தின் படி நாங்கள் நெற்றியில் குங்குமம் வைப்பது எமது கலாசாரம், எமது பாரம்பரியம். அந்த நடவடிக்கையாது எம்மை அவமதிக்கும் வகையில் அமைந்துள்ளது. அதனால் இதனை வன்மையாக கண்டிக்கிறேன்” என வாணி தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் பெண்கள் தொடர்பான சமூக செயற்பாட்டாளர் நளினி ரத்னராஜாவை பிபிசி தொடர்புக் கொண்டு வினவியது.

NALINI RATHNARAJA
நளினி

”எந்தவொரு சட்டமோ அல்லது கொள்கைகளோ கொண்டு வரப்படும் போது, எந்த அரசாங்கமாக இருந்தாலும் பெண்களின் கலாசாரத்திலும், உடலிலும் தான் கை வைக்கின்றார்கள். அங்கே பெண்கள் தான் குறியாகுகின்றார்கள். ஹிஜாப் போட வேண்டாம் என்றும், பொட்டு வைக்க வேண்டாம் என்றும் சொல்லப்படும் விவகாரங்கள் அனைத்தும் பெண்களையே குறி வைக்கின்றது. பொட்டு வைக்காத விடயத்தில் பாரபட்சத்தை இல்லாது செய்யும் விடயமாகவே நான் அதனை பார்க்கின்றேன்.

பொட்டு வைத்தால் பாஸ்போட்டை பார்க்கும் போதே தெரிந்து விடும் தமிழ் பெண் என்று. இது பெண்களை பாரப்பட்சப் படுத்துவதற்கு ஒரு சந்தர்ப்பமாக அமையலாம். கடந்த காலங்களில் தமிழ் மக்களின் அடையாளஅட்டையில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகள் இரண்டும் இருந்தமையினால், அதனை பார்க்கும் போதே இவர் தமிழர் என தெரிவித்துவிடும். அதனால் தமிழர்கள் பல வகையான துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். எனினும், பெண்களின் உடைகளிலும், உடல்களிலும், கலாசாரத்திலும் அரசு தமது கொள்கைகளையும், சட்டங்களையும் கொண்டு வந்து கட்டுப்பாட்டை விதிப்பதை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்” என நளினி ரத்னராஜா கூறினார்.

தமிழ் பெண்கள் பொட்டு வைக்கலாம்

2015ஆம் ஆண்டு சர்வதேச சட்ட விதிமுறைகளின் கீழ் இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ள போதிலும், தமிழ் பெண்களுக்கு பொட்டு வைத்து புகைப்படம் எடுப்பது எந்த விதத்திலும் இதுவரை தடை செய்யப்படவில்லை என குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் கயான் மிலிந்த கூறினார்.

கயான் மிலிந்த

தமது முகத்தை அடையாளம் தெரியாத வகையில் பெரியளவு பொட்டு வைத்து புகைப்படம் எடுப்பதை தவிர்த்து, சிறிய அளவிலான பொட்டை வைத்து புகைப்படம் எடுத்தல் சிறந்தது எனவும் அவர் கோரிக்கை விடுக்கின்றார்.

கடவூச்சீட்டு விவகாரத்தில் தமிழ் பெண்களை பொட்டு வைக்க வேண்டாம் என தாம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கூறவில்லை என குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் கயான் மிலிந்த பிபிசிக்கு கூறினார்.

நன்றி- பிபிசி தமிழ்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More