உயர்தரத்தேர்வு(க.பொ.த)எழுதி,முடிவுக்காகக் காத்திருக்கும் மாணவ, மாணவிகளைப் பெற்றோர் மிகச் சரியான முறையில் கையாள வேண்டும். தேர்வு எழுதியுள்ள மாணவ, மாணவிகள் தேர்வுமுடிவுக்காகக் காத்திருக்கின்றனர். சிலமாதகாலம் படிக்காமல் இவர்கள் ஓய்வு எடுத்துக் கொண்டிருப்பது போலத் தோன்றினாலும் இம் மாணவர்கள் கடும் மனஅழுத்தத்திலும், மனக்குழப்பத்திலும், மனச்சோர்வுற்றும் உள்ளனர் என்பதே உண்மையாகும்.
நன்றாகத் தேர்வுவெழுதிய மாணவர்கள், எத்தனை மதிப்பெண்கள் பெறப் போகிறோம், எதிர்பார்க்கும் மதிப்பெண் உண்மையில் கிடைக்குமா? என்றும், தேர்வைச் சரியாக எழுதாதவர்கள் குறைந்த மதிப்பெண் பெற்று, எப்படிப் பெற்றோரைச் சமாளிக்கப் போகின்றோம்? என்ற பயத்துடனும், மனப் பதட்டத்திலும் உள்ளனர். குறிப்பாகத் தேர்வைச் சரிவரச் செய்யாத மாணவ, மாணவிகள் தோல்வியடைவதால் ஏற்படப்போகும் அவமானத்தை எப்படிச் சமாளிக்கப் போகிறோம்? என்ற பயத்துடனும் காணப்படுவர்;.
தேர்வை எழுதி, முடிவுக்காகக் காத்திருக்கும் இவர்களைப் பெற்றோர் மிகச் சரியான முறையில் கையாள வேண்டும். இல்லையேல் விபரீதமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும். குறைவான மதிப்பெண் பெற்றுத் தோல்விடையும் மாணவ. மாணவிகள், தேர்வுமுடிவுகள் தெரிந்ததும் வீட்டைவிட்டு ஓடிவிடுவது, மனப்பாதிப்புக்குள்ளாவது, சிலநேரங்களில் தற்கொலை செய்துகொள்வதுகூட இன்று சாதாரணமாக நடக்கக் கூடியவைகளாக மாறிவிட்டன.
பெற்றோர்கள் தேர்வுமுடிவுக்காகக் காத்திருக்கும் மாணவர்களை, ‘என்ன பெறுபேறு வரும்?;’ எனத் தினமும் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருப்பது, சகமாணவர்கள் அல்லது நண்பர்களுடன் நேரத்தைக் கழிப்பதை ‘ஊர் சுற்றுகிறாயா’ எனக் கண்டிப்பது, எப்போதும் தெலைக்காட்சிப் பார்த்துக் கொண்டிருக்கிறாயே எனத் ஏசுவது, மதிப்பெண் வரட்டும் அப்போது உன்னைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம் என அவமானப்படுத்தத் தயாராக இருப்பது, பிறருடன் அடிக்கடி ஒப்பிட்டு, அவர்களின் தரத்தைத் தாழ்த்திப் பேசுவது ஆகியன மனரீதியான பாதிப்புக்கு அவர்களை அதிகம் உள்ளாக்குகிறது.
மாணவப் பருவத்தில், குறிப்பாக 14-19 வயதுக்குட்பட்ட மாணவ. மாணவிகள் உணர்ச்சி வசப்படும் பருவமும், மனவெழுச்சிகளுக்கு இலகுவாக உட்படுவார்கள். அடிக்கடி தீவிர உணர்ச்சி மற்றும் மனவெழுச்சி மாற்றங்களுக்கு உள்ளாவார்கள் அத்துடன் அவர்களால் ஒரே மனநிலையில் இருக்க முடியாது. இந்த வயதில் நண்பர்களை நாடிச் செல்லும் ஆர்வம் அதிகமாக இருக்கும். பெண்களாக இருந்தால் தங்கள் தோழிகளோடு செல்போனில்; பேச அதிக ஆர்வம் காட்டுவர். தேர்வு முடிவு பற்றிய மனஅழுத்தம் அதிகமாக இருப்பதால் அதிலிருந்து தங்கள் கவனத்தைத் திசைதிருப்ப, சுயமாகவே இவ்வாறான அழுத்தங்களிலிருந்தும், எண்ணங்களிலிருந்தும் விடுபடுவதற்காக இவ்வாறான செயல்;களில் அடிக்கடி ஈடுபடுவர். பெற்றோர் இதனைத் தவறாகப் புரிந்து கொள்வதனால் பிரச்சினைகள் தோன்றும்.
இத்தகைய சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு அன்பும், அரவணைப்பும், பாதுகாப்பும் கொடுக்க வேண்டியது முக்கியமாகும்.இச் சந்தர்ப்பத்தில் பெற்றோர் கடுமையான சொற்களால் ஏசினால் உளரீதியாகப் பாதிப்படைந்து விரக்தியால் எதிர்மறையான முடிவினை எடுக்கின்றனர். இதுமட்டுமன்றி ‘தேர்வு முடிவு எப்படி இருக்கும்?’, ‘நல்ல பெறுபேறுவரும் தானே?’, ‘கம்பஸ் கிடைக்கும் தானே?’ எனதினமும் கேட்டுக் கொண்டிருக்கக்கூடாது. வாரத்திற்கு ஒருமுறை அல்லது 10 நாட்களுக்கு ஒருமுறை ஓய்வுநேரத்தில் அவர்களோடு அமர்ந்து, இது பற்றிக் கலந்துரையாட வேண்டும். எதிர்காலத் திட்டம் குறித்தும் அன்பாக விசாரிக்க வேண்டும்.மேலும் அவர்கள் அடிக்கடி நண்பர்கள் வீட்டுக்குச் செல்வது, அவர்களோடு படத்திற்கு(சினிமா) செல்வது, செல்போனில் பேசுவதை என்பவற்றை குறிப்பட்ட காலத்திற்கு விமர்சிக்கக்கூடாது.இது எல்லை மீறிப்போகும் சந்தர்ப்பங்களில் அதிலிருந்து விடுபட பொறுப்புக்களை கொடுத்து அவர்களின் கவனத்தைத் திசைதிருப்ப முயற்சிக்க வேண்டும்.
உறவினர் வீடுகளுக்குச் சென்றுவரச் செய்வது, வசதிகளுக்கேற்ப சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்வது ஆகியவை பலவிதங்களில் நன்மை கொடுக்கும் பிறருடனான தொடர்புத் திறனை மேம்படுத்தி மன அழுத்தத்தை குறைக்கும். மனஅழுத்தம் மிகுந்த மாணவ, மாணவிகள் எவற்றிலும் ஈடுபாடு கொள்ளாமல், சோர்வாகவும், அமைதியாகவும் இருப்பர். அவர்களோடு அவ்வப்போது வலியச் சென்று பேசுவது அவசியம். எல்லாம் நல்ல படியாக நடக்கும் என அவர்களுக்கு நம்பிக்கையூட்ட வேண்டும்.
தேர்வு பெறுபேறு எதிர்பார்த்த முடிவினைத் தராவிடில் தேர்வு முடிவைப் பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை என்ற மனப்பக்குவத்தை ஏற்படுத்தவேண்டும். குறைவான மதிப்பெண்கள் எடுத்தாலும், மீண்டும் அதிகமாக முயற்சித்து முன்னேற மாற்றுப்படிப்புகள், மாற்றுவழிகள் அதிகம் என்ற விழிப்புணர்வை அவர்களுக்கு ஏற்படுத்துடன், அதற்கான உதவிகளைப் புரிவதற்கான நம்பிக்கையை கொடுக்க வேண்டும்.
தேர்வு முடிவைத் தெரிந்து வெளிவரும்; நாளன்று, முடிவு எதுவானாலும் தெரிந்து கொண்டு வீட்டுக்கு வந்து விடுமாறும், மற்றவைகளைப் பற்றிப் பிறகு பேசிக் கொள்ளலாம் எனவும் பெற்றோர் பிள்ளைகளுக்குச் சொல்லி அனுப்ப வேண்டும். அத்துடன் அவர்களைக் கண்காணிக்க வேண்டும்;. இயன்றளவு இந்நாளில் தங்கள் மகன் அல்லது மகளுடன் பெற்றோர் உடனிருப்பது மிகவும் நல்லது.
பெற்றோhரும் சமூகத்தவரும்;, எதிர்மறை எண்ணங்கள், தாழ்வுமனப்பான்மை போன்றவற்றிற்குட்பட்ட மனவெழுச்சிப் பருவத்திலுள்ள மாணவ, மாணவியரிடத்தில் இந்த விடயத்தில் வாக்குவாதத்தில் ஈடுபடுவதோ, சத்தம் போட்டு அதிகமாக பேசுவதோ, அவமானப்படுத்துவதோ கூடாது. அவ்வவாறு நடந்து கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் பெற்றோர் தங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொள்வது அவசியமாகும்.
அதிக மதிப்பெண் பெறுவதும், குறைந்த மதிப்பெண் பெறுவதும் வாழ்க்கையில் ஒரு நிகழ்வு என்பதுடன், இத்தோடு அவர்களின் வாழ்வு நின்று விடுவதில்லை. இதற்குப் பின்னும் தனது தவறை இனங்கண்டு திருத்திப் புதிய முயற்சியுடனும், அனுபவத்துடனும், உத்வேகத்துடனும் முன்னேற வழிகள் பல உண்டென்பதைப் பெற்றோரும்,மாணவர்களும் உணரவேண்டும்.மாணவ சமுதாயத்தை சரியானவழியில் வழிநடாத்தினால் ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கலாம்
கலாநிதி கே. கஜவிந்தன்,
சிரேஷ்ட விரிவுரையாளர்,
உளவில் துறை, யாழ் பல்கலைக்கழகம்.