Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைவிபரணக் கட்டுரை ஈழக் குரல் ஜெனீவாவிற்கு கேட்பதே இல்லையா? தீபச்செல்வன்

ஈழக் குரல் ஜெனீவாவிற்கு கேட்பதே இல்லையா? தீபச்செல்வன்

4 minutes read

காணாமல் ஆக்கப்பட்ட பேரப் பிள்ளைக்காக போராடி வந்த தாயொருவர், தன் தேடல் முடிவுறாத தருணத்தில் காலமானார் என்கின்ற துயரச் செய்தி ஒரு புறம். முன்னாள் போராளி ஒருவர், ஆறாக்காயங்களுடன் அவதிப்பட்டு மரணித்தார் என்கிற அதிர்ச்சி செய்தி இன்னொரு புறமாய். போர் முடிந்து பதினொரு ஆண்டுகள் ஆகின்ற தருணங்கள் இவை. 2009 கொடும் போர் நடந்து கொத்துக் கொத்தாக மக்கள் கொல்லப்பட்ட ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்கள் இவை. ஏப்ரல், மே என ஆண்டின் அரைவாசி வரையில் இனப்படுகொலையின் காலம்தான். இன்னும் ஈழ நிலத்தில் உயிர்கள் வீழ்ந்து கொண்டே இருக்கின்றது. உண்மையில் இந்தக் குரல்கள் எவையுமே ஜெனீவாவிற்கு கேட்பதே இல்லையா?

செல்வம் சிவபாக்கியம் என்ற தாயின் மரணமும் மௌனமாக கடந்து கொண்டிருக்கிறது. இவரது மரணம் அறுபதாவது மரணம் என்கிறார்கள். காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் பிள்ளைகளைத் தேடித் தேடியே தம்மை அழித்துக்கொள்ளுகிற போராட்டமே இந்த தாய்மார்களின் வாழ்வென்றாகிற்று. உண்மையில் இலங்கை அரசு, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரத்தில் இப்படியொரு பேரழிவு முடிவுக்காகத்தான் மௌனித்தே இருக்கிறதா? மகிந்த ராஜபக்சவும் இதற்கு பதில் அளிக்கவில்லை. பின்னர் வந்த ரணிலோ, மைத்திரியோ இதற்கு பதில் அளிக்க வில்லை. இப்போது வந்திருக்கும் குற்றங்களின் சூத்திரதாரியும் பொறுப்புக்கூறலுக்கான பதிலை அளிக்காமல் மூடு மந்திரமாக இருக்கிறார்.

இந்தத் தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளைக் கேட்டுக் கேட்டே செத்தொழியட்டும் என்று முடிவு செய்து விட்டார்களா? ஈழத் தமிழ் இனம் இழைக்கப்பட்ட அநீதிகளை கோரிக் கோரியே குரல் வற்றி அழிந்துவிடட்டும் என்று தீர்மானத்தில் இருக்கிறார்களா? முள்ளிவாய்க்கால் போர் முடிந்த பிறகும், போரின் விளைவுகளால் ஆன மரணங்கள் இன்னமும் முடியவில்லை. இந்த தாய்மார்களின் மரணங்கள் ஒரு புறம். போரில் காயப்பட்டவர்களின் மரணங்கள் மறுபுறம். முன்னாள் போராளிகளின் காரணங்கள் அறியப்படாத மரணங்கள் பல நூற்றை கடந்து செல்கின்றது. இந்த ஈழக் குரல்கள் எவையும் இன்னமும் ஜெனீவாவிற்கு கேட்காமல்தான் இருக்கின்றதா?

போர் முடிந்து பதினொரு ஆண்டுகள் ஆகின்றன. ஜெனீவாவில் ஐ.நாவின் மனித உரிமை அமர்வுகள் ஆண்டு தோறும் நடக்கின்றன. இலங்கைக்கும் சர்வதேச நாடுகளுக்கும் இடையிலான உறவையும் அரசியலையும் அடிப்படையாகக் கொண்டுதான் ஜெனீவாவின் அணுகுமுறைகள் இடம்பெறுவது சிறு குழந்தையும் அறிந்த விசயம்தான். ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்பதை இன்னமும் ஜெனீவா ஏற்றுக் கொள்ளவில்லை. மனித உரிமை மீறல்கள் என்ற சொற்பதங்களால் அழைத்த நிலையில், சமீபத்திய ஆண்டுகளில்தான் போர்க்குற்றம் நடந்தது என்பதை ஏற்றுக் கொண்டிருக்கிறது ஜெனீவா.

மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அதாவது 2015 ஜனவரி 8ஆம் திகதிக்கு முந்தைய காலத்தில் சர்வதேச நாடுகள், ஈழ இனப்படுகொலை விடயத்தில் இறுக்கமாக நடந்து கொண்டது. கடந்த காலத்தில் இலங்கையில் ஆட்சி புரிந்த ரணில் – மைத்திரிபால சிசேன அரசாங்கம், சர்வதேச நாடுகளுடன் கொண்டிருந்த அரசியல் உறவு காரணமாக, ஜெனீவா விவகாரம் தளர்த்தப்பட்டது. ஒரு வகையில் சொன்னால், ஈழத் தமிழர்கள் பின்நோக்கி தள்ளப்பட்டனர். ஐக்கிய நாடுகள் சபையில் இனப்படுகொலை விவகாரம் நீர்த்துப் போகச் செய்யப்பட்டது.

அப்போதும்கூட ஐ.நா சர்வதேச விசாரணைக்கு பரிந்துரைத்தது. அமெரிக்காவால் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை ஐ.நாவில் ஏற்று இணை அனுசரணை வகித்த இலங்கை, உள்ளக விசாரணையை தான் செய்வோம், சர்வதேச விசாரணையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று இலங்கைக்குள் இறுமாப்பாகச் சொன்னது. அன்றைய பிரதமர் ரணிலும் சரி, அரச தலைவர் மைத்திரிபாலவும் சரி, இராணுவத்தினரை காட்டிக் கொடுக்க மாட்டோம், என்றும் ஈழ இனப்படுகொலையை வழமைபோல சிங்கள இராணுவத்தின் வீரமாக சித்திரித்தனர். மகிந்த ராஜபகச்வையும் கோத்தபாயவையும் மின்சாரக் கதிரையிலிருந்தும் தூக்குக் கயிற்றில் இருந்தும் காப்பாற்றியதாக பெருமை பேசி அரசியல் செய்தனர்.

அப்போது, தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று அரச தலைவரானானர் மைத்திரி. அத்துடன் தமிழ் தலைவர்களின் ஆதரவைப் பெற்று, ஆட்சியை தக்க வைத்தார் அன்றைய பிரதமர் ரணில். ஆனாலும் சிங்களப் பேரினவாதத்தையும், இனப்படுகொலை குற்றத்தையும் பாதுகாப்பதிலேயே மிகுந்த அக்கறை கொண்டனர் அவர்கள். இலவு காத்த கிளியாக ஏமாந்ததது மாத்திரமின்றி சொந்த மக்களையே ஏமாற்றிய பெரும் பழிக்கு தமிழ் தலைவர்கள் தள்ளப்பட்டனர். ஆள் மாறினாலும் ஆட்சியில் மாற்றமில்லை என்பதை ரணிலும் மைத்திரியும் மீண்டும் உணர்த்தினர்.

இந்த சூழலில் தற்போது கோத்தபாய ராஜபக்ச அதிபராக பொறுப்பேற்றுள்ள காலத்தில் ஜெனீவா அமர்வுகள் தொடங்கியுள்ளன. கடந்த 24ஆம் திகதி தொடங்கிய அமர்வில் இலங்கை விவகாரம் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. இதன்போது, முன்னைய அரசு ஏற்றுக் கொண்ட இலங்கை அரசின் போர்க்குற்றம் குறித்த விசாரணை தீர்மானத்தில் இருந்து இலங்கை விலகுவதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். ஐ.நா தீர்மானத்தில் இருந்து விலகும் தீர்மானத்தை ஐ.நா ஆணையாளர் முற்றாக நிராகரித்துள்ளார். அது மாத்திரமின்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி மறுக்கப்பட்டுள்ளமையையும் தொடர்ந்தும் மனித உரிமை மீறலுக்கான வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

தற்போதைய இலங்கையின் ஆட்சி முழுக்க முழுக்க இனப்படுகொலையாளிகளால் நிரப்பட்டுள்ளது. அதிபராக கோத்தபாய ராஜபக்ச. பிரதமராக மகிந்த ராஜபக்ச. இராணுவத் தளபதியாக சவேந்திரசில்வா, பாதுகாப்பு செயலாளராக காமல் குணரத்தின. 2009 முள்ளிவாயக்காலில் இனப்படுகொலையை நிகழ்த்திய அனைவரும் இலங்கையில் இன்று முக்கிய பதவிகளை வகிக்கின்றனர். ஈழத்தில் நடந்த இனப்படுகொலை குறித்து பொறுப்பு கூற வேண்டியவர்கள் இவர்களே. இலங்கை அரசு ஐ.நா தீர்மானத்தில் இருந்து விலகுவதன் ஊடாக மாபெரும் அபாயத்திற்குள் சிக்கவுள்ளதாகவே சொல்லப்படுகிறது.

ரணில் மற்றும் மைத்திரியின் வா்ர்ததைகளையும் ஜாலங்களையும் நம்பி கடந்த ஐந்து ஆண்டுகள் தமிழ் மக்கள் ஏமாந்நதனர். அல்லது ஏமாற வைக்கப்பட்டனர். இப்போது இலங்கையிலும் சர்வதேசத்திலும் ஏற்பட்டுள்ள சூழலை தமிழ் மக்களும் அவர்களின் தலைமைகளும் சரியாக பயன்படுத்த வேண்டும். தமிழ் மக்களுக்கான தனித் தேசத்தை பொறுவது மாத்திரம் நீண்டகால இலக்கு அல்ல. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கான நீதியை பெறுவதும், அதனை இனப்படுகொலையாக ஏற்கச் செய்வதும் பெருத்த இலக்குதான். அதுவே தமிழ் மக்களின் வாழ்வில் விடியலை உண்டு பண்ணுகின்ற தீர்வாகவும் அமையும். ஈழ மக்கள் ஒற்றுமையாகவும் ஓர்மத்துடனும் போராடுவதுதான் இனப்படுகொலையில் பலியான மக்களுக்கும் இன விடுதலைக்காக உயிர் துறந்த மாவீரர்களுக்கும் செய்கின்ற உயரிய மரியாதை.

தீபச்செல்வன்க்கான பட முடிவுகள்

தீபச்செல்வன், கட்டுரையாளர் கவிஞர் மற்றும் எழுத்தாளர்.  

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More