Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைவிபரணக் கட்டுரை ஆழப்பதிந்த நினைவுத் தடத்துக்கு உரியவராக நீர்வை: ந. இரவீந்திரன்

ஆழப்பதிந்த நினைவுத் தடத்துக்கு உரியவராக நீர்வை: ந. இரவீந்திரன்

5 minutes read


ஓய்வின்றி இயங்கிய நீர்வைப் பொன்னையன் தனது செயற்பாட்டை நிறுத்திக்கொண்டு எம்மிடம் இருந்து விடைபெற்றுவிட்டார். அவர் எம்மிடையே ஏற்படுத்திச் சென்ற தாக்கம் பற்றி நிறையவே பேச வேண்டும். முதற் பதிவாக சில வார்த்தைகள்.

அறுபதாம் – எழுபதாம் ஆண்டுகள் இடதுசாரி இயக்கத்தின் உச்சநிலைக் காலம். அதன் செயற்பாட்டாளர்கள் இன்று எம்மைவிட்டு நீங்கியபடி உள்ளனர். அவர்கள் முன்னெடுத்த போராட்டங்களின் விளைவாக ஏற்பட்ட பல மாற்றங்களின் அறுவடையினாலேயே பின்னரான பல்தேசக் கொம்பனிகள் எழுச்சி பெற்று உலகைச் சூறையாடிக் கொள்ளை நோய்க்குப் பலிக்கடாவாக்கிவிட்டுள்ள இன்றைய நிலையில் ஓரளவாவது மனுக்குலம் மீட்சிபெற வழி காட்டும் அமைப்பாக்கங்களை ஏற்படுத்தித் தந்திருந்த்து. அந்த உச்ச நிலையில் நின்று நிதானித்து மாறிவரும் உலகச் சூழ்நிலை மாற்றங்களைக் கவனங்கொண்டு ஏற்ற புதிய பாதைகளை வடிவமைக்கத் தவறி ஒவ்வொரு கருத்து வேறுபாட்டின் பேரால் உடைந்து சிதறிப் பல அமைப்புகளாக மாறிப் போயிருந்த அவலம் காரணமாகவே பல்தேசக் கம்பனிகள் வடிவில் முதலாளித்துவம் மீள் எழுச்சிபெற இயலுமாயிற்று.

எழுபதுகளின் நடுக்கூறில் தோழர் சண்முகதாசன் தலைமையிலான கொம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து நான் செயற்பட்டபோது அவர் தோழர்கள் கார்த்திகேசன் – வி.ஏ.கந்தசாமி ஆகியோரது கட்சி அணியில் இருந்தார். பிரதான எதிரியை விடவும் பிளவுபட்டு வேறாகியுள்ள சக தோழமை அமைப்புகளையே அதிபயங்கர எதிரியாக கணித்து செயற்பட்ட அக்கால நிலவரம் காரணமாக நீர்வை அவர்களோடு எந்த தொடர்பும் இன்றியே இயங்கி வந்தேன். பத்தாயிரமாம் ஆண்டின் பின்னரே அவர் என்னோடு முதன்முதலில் உரையாட முன்வந்தார்.

அப்போது விபவியில் அவர் செற்பட்டார். டானியல் நினைவுக் கூட்டம் ஒன்றில் என்னை உரையாற்றக் கேட்டார். எனது கட்சியும் உரையாற்றுவதை அனுமதித்திருந்த்து. டானியல் பற்றிய கட்டுரை, நான்கு முற்போக்கு இலக்கிய முன்னோடிகள் (டானியல், என்.கே.ரகுநாதன், டொமினிக் ஜீவா, நீர்வை பொன்னையன்) முன்னிறுத்தப்பட்ட “முற்போக்கு இலக்கிய எழுச்சி” என்ற தனி நூல், கைலாசபதி பற்றிய நூல் என்பவற்றை நான் எழுதி அவரது முற்போக்கு எழுத்தாளர் மன்றம் வாயிலாக வெளியிடுவதற்கு களம் அமைத்த செயற்பாடுகள் வாயிலாக அவருடனான ஊடாட்டம் எனக்கு அதிகரித்து வந்த்து. சில வருடங்கள் நீடித்த அந்த உறவில் விமரிசனம் – சுயவிமரிசனம் சார்ந்து எங்களிடையே ஆரோக்கியமான பகிர்வுகள் சாத்தியப்படலாயிற்று.

வேறும்பல கோட்பாட்டு – நடைமுறைப் பிரச்சினைகளால் கட்சிசார நபராக நான் இயங்க நேர்ந்த சந்தர்ப்பத்திலும் தனது அமைப்பில் என்னை உள்ளீர்க்க அவர் முயன்றாரில்லை; மட்டுமல்லாமல், வேறுபட்டு பொதுவான வெகுஜன அமைப்பொன்றை நாங்கள் உருவாக்க முனைந்தபோது அதிலே செயற்பட முன்வந்தார். அவரவர் தமது அமைப்புகளில் இயங்கியபடி இணைந்து செயற்படும் பொது அமைப்பாகவே எங்களுடைய அமைப்பைக் கட்டமைப்பதற்கு அவரது வரிகாட்டல் பேருதவியாக இருந்த்து. அதன் சஞ்சிகை “புதிய தளம்” அவரையும் ஆசிரியர் குழுவில் இணைத்துக்கொண்டு வெளிவந்த்து.

“புதிய தளம்” முதல் இதழ் அவரது தலைமையில் கொழும்பில் வெளியிடப்பட்டது. இரண்டாவது இதழும் பெரும் வரவேற்புடன் வெளிவர இயலுமாயிற்று. பலரும் அந்த இதழையும் அத்தகைய பொதுவான வெகுஜன அமைப்பொன்றையும் வரவேற்ற ஆரோக்கியமான சூழல் வளர்ந்து வந்த்து. நீர்வையும் மிக மகிழ்வோடு கலந்துகொண்டு அவற்றின் வளர்ச்சியைத் துரிதப்படுத்த உழைத்தார். புதிய வேலைப்பாணி ஒன்றை அவர் விரும்பிய அளவில் அவரது பழைய தோழர்கள் எல்லோராலும் உடன்பட இயலவில்லை. பழைய ‘விடாப்பிடி உறுதியில்’ இருந்து பின்வாங்கிப்போகிறார் எனக் கண்டிக்கப்பட்டார். பிரதானமாக இரண்டாவது இதழில் வெளிவந்த தோழர் எம்.ஏ.சி.இக்பால் அவர்களது பேட்டி சார்ந்த விவாதம் இத்தகைய சந்தேகங்களை அவர் மீதும் ஏற்படுத்தி விட்டிருந்த்து.

பேட்டியில் சண் தலைமையிலான கட்சி பிளவுபட்டு போனமைக்கு கட்சி அமைப்பில் நிலவிய தவறு பற்றி எந்த சுயவிமரிசன நோக்குமின்றி விலகியோரது தவறு (துரோகம்) மட்டுமே காரணம் என்று இக்பால் கூறியிருந்தார். அந்த துரோகப் பட்டியலில் நீர்வை பெரிதும் மதிக்கும் தோழர்கள் கார்த்திகேசன், வி.ஏ.கந்தசாமி ஆகியோர் பெயர்களுடன் மணியம் தோழரின் பெயரும் இடம்பெற்று இருந்தன. முன்னதாக ஆசிரியர் குழுவில் அந்தப் பெயர்ப்பட்டியலை நீக்கும்படி நீர்வை வலியுறுத்தினார். பேட்டியாளரகளது கருத்தை சுதந்திரமாக அனுமதிப்போம், அடுத்தடுத்த இதழ்களில் உண்மை வரலாற்றை வெளியிடுவோம் என நாங்கள் கேட்டுக் கொண்டதால் அவர் சம்மதித்தாராயினும் அவருக்கு உடன்பாடற்ற விடயமாக அது இருந்த்து. அடுத்த இதழில் இந்த இடைவெளியை நிவர்த்திக்கும் பேட்டி – கட்டுரைகளை வெளியிட முயன்றும் இயலாமல் போயிற்று. இதழ் பயணமும் தொடரவில்லை; அமைப்பின் செயற்பாட்டையும் நிறுத்த நேர்ந்த்து. இங்கு வலியுறுத்த வேண்டி இருப்பது, புதிய பாணி வேலை முறையொன்றை நீர்வை எவ்வளவு ஆர்வத்தோடு நாடி நின்றார் என்பதுதான்.

இந்தப் புதியபாணி வேலைமுறை என்பது தனது இறுதிக் காலங்களில் தோழர் கே.ஏ.சுப்பிரமணியம் வலியுறுத்திய ஒன்று. கட்சி தொடர்ந்து பல பிளவுகளைச் சந்தித்து ஏற்பட்டுள்ள வரலாற்றுத் தவறினால் தனி அமைப்பொன்றே சரியானது என்று வீம்புக்கு நில்லாது பரந்துபட்ட வெகுஜனத் தளம் ஒன்றை கட்டியெழுப்புவதன் வாயிலாக கட்சி அமைப்பும் புத்தாக்கம் பெற வேண்டும் என்பது மணியத்தார் கருத்தாக இருந்த்து. இதுபற்றி நிறையவே நீர்வைக்கு கூறியிருந்தேன். அவரும் மணியம் தோழர்மீது பழைய மதிப்புணர்வை வெளிப்படுத்தினார். ஆயினும், அவரது “நினைவலைகள்” நூல் வந்தபோது தோழர் மணியம் பற்றி மிகத்தவறான பதிவுகளை வெளியிட்டார். அந்த நூலின் சரவை நோக்கை (புரூவ் ரீடிங்) நான் செய்திருந்தேன். நான் கூறிய பல விடயங்களைக் கவனங்கொள்ளாமல் எழுதியுள்ளார் என்ற ஆதங்கத்தில் எழுத்திப் பிழைகளைமட்டும் திருத்திக் கொடுத்தேன். நூல்வந்த பின்னர் கடும் விமரிசனங்கள் எழுந்தன.

நான் மெய்ப்புத் திருத்தியபோதாவது (அதற்கான நன்றி அறிவிப்பு நூலில் இடம்பெற்று இருந்த்து) இந்த தவறைச் சுட்டிக்காட்டவில்லையா என்ற கேள்வி எழுப்ப பட்டிருந்த்து. அதுபற்றி எனது மனவருத்த்த்தை வெளியிடும்போது நீர்வையும் அதையே கூறினார், நீங்கள் சொல்லியிருந்தால் மாற்றியிருப்பேன் என்று- முன்னரே எழுதி வந்த காரணத்தால் இடையில் நீங்கள் வலியுறுத்தியவை கொண்டு மாற்றத்தை செய்யாது விட்டேன் என்றார். என்னளவில் அவ்வளவு சொல்லியும் மாற்றவில்லையே என்று கருதி வாழாதிருந்த எனது தவறும் மன்னிக்க இயலாத்தாயினும் இதற்காக அவர்மீது கடும் கண்டன விமரிசனத்தை நேரில் நான் முன்வைத்தேன். அந்த விடயத்தில் மிக கடுமையாகவே நான் நடந்திருந்தேன்.

என்மீதான பலமுனைத் தாக்கங்களின் வேகத்தை அவர்மீதான பாய்ச்சலாக நான் ஆக்கிக் கொண்டேன்; உறவு முறிந்தால் நல்லதுதான் என்ற அளவுக்கு! அவையனைத்தையும் மிகப் பொறுமையாக உள்வாங்கினார் – அடுத்த பதிப்பொன்றில் திருத்திக் கொள்வேன் என்றார். அத்தகைய புதிய பதிப்பு வராத போதிலும் நடைமுறையில் என்னுடனான உறவை வலுப்படுத்தியதன் வாயிலாக பழைய தோழமைகள் சிதறி ஏற்படுத்திய வரலாற்றுத் தவறைத் திருத்த வேண்டிய அவசியத்தை தனது சக தோழர்களுக்கு உணர்த்தினார்.

சென்ற வருட இறுதியில் கடும் சுகவீனம் காரணமாக மகள் வீட்டில் தங்கியிருந்த போது தன்னை வந்து சந்திக்கும்படி கேட்டுக்கொண்டார். வெள்ளவத்தையில் அவரது வீட்டுக்கு போய்ப் பார்க்கலாம் என்று எண்ணியிருந்த நிலையில் உடனடியாக கொள்ளுப்பிட்டியில் உள்ள மகள் வீட்டில் சென்று பேசினேன் – அங்கு எல்லோரும் செல்ல இயலாது என்பதால் மகளுடைய தொலைபேசி இலக்கத்தைக் கூட எல்லோருக்கும் அவர் கொடுப்பதில்லை. முன்னதாகவே எனக்கு அதனை அவர் தந்திருந்தார்.

கோட்பாட்டு மோதல்களுக்கு அப்பால் பொது உடன்பாட்டில் இருந்த இலட்சிய அக்கறை காரணமாக தனது சகபாடியாக என்னை அவர் அங்கீகரித்திருந்தார் எனும் இந்த அம்சம் நெகிழ்வைத் தருவது. அவரையும் என்னையும் கோட்பாடு கடந்து உறவாடினோம் எனக் கண்டிக்கும் அவரது தோழர்களும் எனது சக பாடிகளும் இதன் ஆழகலங்களை உணர்வார்களா? பொதுமைப்புத்துலகம் காண்பதே எம்மனைவரதும் ஒரே இலக்கென்றால் சிற்சில கோட்பாட்டுப் பேதங்களுக்காக முட்டி மோதுவது அந்த இலட்சியத்துக்கே பெருங்கேடு விளைவிக்கிற செயல் என விளங்கிக் கொள்ள வேண்டாமா?

இறுதிக் காலங்களில் ஓர் தந்தையைப் போல அவரை நேசிக்கவும் கைபிடித்து மருத்துவமனைக்கு அழைத்நுச் செல்லும் அளவிற்கு அவருடன் நெருங்கியிருந்தேன். தொலைவில் இருக்கும் எனக்கு ,அவர் நினைவுகள் அழுத்துகிறது. எவ்வாறாயினும், தோழர் நீர்வை பொன்னையன் அவர்களே – நீங்கள் இளமைத் துடிப்புடன் செயற்பட்டுக் காண விழைந்த அந்தப் புத்துலகை – இறுதித் தளரவுற்ற உடல்நிலைக் காலங்களில் அடுத்த தலைமுறையினரான எங்களிடம் புதிய வேலைப் பாணியாக மாற்றும் கைங்கரியத்துக்குரிய செயற்பாட்டு அம்சங்களை தொடர்ந்து செயற்பட்டு வளர்த்தெடுப்போம் எனும் உறுதிமொழியை புரட்சிகர அஞ்சலியுரையாக முன்வைக்கிறேன்!

“சூழ்ந்திடும் இருள் அகல்வதும் உறுதி!
சுடர்விடும் விண்மீன் வருவது உறுதி!”

  •  ந. இரவீந்திரன் 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More