யாழ்ப்பாணத்தில் தனது வீட்டில் இருந்து தொலைக்காட்சியில் ஐ.பி.எல். போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
சங்கானை, தேவாலய வீதியைச் சேர்ந்த பரமானந்தம் கோவிந் (வயது 26) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.
மேற்படி இளைஞர் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு உணவருந்திவிட்டு தொலைக்காட்சியில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியைப் பார்த்துக்கொண்டிருந்த வேளை திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறிய நிலையில் மயங்கி வீழ்ந்துள்ளார்.
அதனையடுத்து அவரை வீட்டார் சங்கானை பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற வேளை அவர் உயிரிழந்துள்ளார்.
உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட நிலையில், இருதய அறைக்குள் இரத்தக் கசிவு ஏற்பட்டமையால் மரணம் சம்பவித்துள்ளது என்று அறிக்கையிடப்பட்டுள்ளது.