ஆஸ்திரேலியாவின் சிட்னி – பொண்டி கடற்கரையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு இங்கிலாந்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை மாலை மத்திய லண்டனில் உள்ள ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயம் முன்னால் கூடி, சுமார் 100 பேர் அஞ்சலி செலுத்தினர்.
தொடர்புடைய செய்தி : சிட்னி சம்பவம்: சிறுமி உட்பட 15 பேர் உயிரிழப்பு; தந்தை–மகனே துப்பாக்கிதாரிகள்!
அங்கு மக்கள் இங்கிலாந்து மற்றும் இஸ்ரேலிய கொடிகளை அசைப்பதைக் காண முடிந்தது. மேலும் சிலர் “வெறுப்பை நிறுத்துங்கள்” என்ற வாசகங்களைக் கொண்ட பலகைகளைப் பிடித்திருந்தனர்.
இந்த அஞ்சலி நிகழ்வையொட்டி அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
இதேபோல், வடமேற்கு லண்டனில் இசை மற்றும் நடனத்துடன் கூடிய ஹனுக்கா நிகழ்வுகளில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். அங்கும் பொலிஸ் பிரசன்னம் அதிகரிக்கப்பட்டிருந்தது.
சிட்னி துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்களில் ஒருவரான ரப்பி எலி ஷ்லாங்கர் (Rabbi Eli Schlanger) என்பவரின் பள்ளிக்குச் சென்ற சானி சைமன் (Chanie Simon), 41 வயதான அவரை “தன் வாழ்வின் உச்சத்தில் இருந்த ஒரு தந்தை” என்று வர்ணித்தார். லண்டனில் பிறந்த ரப்பி எலி, ஐந்து குழந்தைகளுக்கு தந்தை ஆவார். அவருடைய உறவினர் ரப்பி சல்மான் லூயிஸ் (Rabbi Zalman Lewis), ரப்பி “மக்களை நேசித்த, அக்கறையுள்ள, உற்சாகமான, ஆற்றல்மிக்க, வெளிப்படையாகப் பழகுபவர்” என்று விவரித்தார்.